தமிழ்நாட்டிலுள்ள மத்திய சிறைச்சாலைகளில் சிறைவாசிகளின் மன அழுத்தத்தை போக்கவும் அவர்களின் மறுவாழ்வுக்காகவும் பல்வேறு தொழில் பயிற்சிகளை சிறை நிர்வாகம் அளித்து வருகிறது.
அந்த வகையில் மதுரை, மத்திய சிறையில் பல்வேறு தொழில்களை சிறைவாசிகள் செய்து வருகிறார்கள். தண்டனை பெற்ற சிறைவாசிகளுக்கு பலவகையான தொழில் பயிற்சிகள் சிறைக்குள்ளேயே வழங்கப்பட்டு வருகின்றன.
உடல் ஆரோக்கியத்தைத் தரும் நம் பாரம்பரிய உணவுகளான சிறுதானிய உணவுப் பொருள்கள் மீது பொதுமக்களிடம் விழிப்புணர்வும் ஆர்வமும் ஏற்பட்டு வருகிறது. அதனால், அதுகுறித்த பயிற்சி வகுப்புகள் மதுரை, மத்திய சிறையிலுள்ள தண்டனை கைதிகளுக்கு வழங்கப்பட்டன.
சாஜர் ஹெல்த் எஜுகேஷன் அண்டு சாரிட்டபிள் டிரஸ்ட் என்ற அமைப்பின் மூலம் உதவித்தொகையுடன் கூடிய பயிற்சி வகுப்பு நடைபெற்று வந்தது. 30 நாள்கள் நடைபெற்ற இந்தப் பயிற்சியில் 32 வகையான இனிப்புகள், கார வகைகளை சிறுதானியங்கள் மூலம் தயார் செய்யும் பயிற்சி அளிக்கப்பட்டது.
இந்த பயிற்சி வகுப்பில் மதுரை மத்திய சிறை, பெண்கள் தனி சிறையிலுள்ள சிறைவாசிகள் 25 பேர் கலந்துகொண்டனர். பயிற்சியின் நிறைவு நாளில் மதுரை சரக சிறைத்துறை டிஐஜி பழனி தலைமையில், மதுரை மத்திய சிறை கண்காணிப்பாளர் சதீஷ்குமார், சாஜர் ஹெல்த் எஜுகேஷன் டிரஸ்ட் நிர்வாக இயக்குனர் ஜாஸ்மின் ராஜ்குமார், நபார்டு வங்கி மேலாளர் சக்திபாலன் ஆகியோர் கலந்துகொண்டு, பயிற்சி பெற்ற சிறைவாசிகளுக்கு சான்றிதழ்களை வழங்கினர்.
அதுமட்டுமின்றி இவர்கள் தயாரிக்கும் சிறுதானிய உணவுப்பொருள்களை சந்தைப்படுத்தும் முறைகள் குறித்தும் பயிற்சி அளிக்கப்பட்டது. சிறைவாசிகளால் தயார் செய்யப்படும் சிறுதானிய உணவுப் பொருள்கள் மதுரை, மத்திய சிறை வளாகத்தில் செயல்பட்டு வரும் சிறை சந்தையில் விற்பனைக்கு வைக்கப்படும் என சிறை நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.