கரூர் மாவட்டம், தோகமலை அருகே இருக்கிறது கொசூர். இந்த பகுதியைச் சேர்ந்த கோவிந்தராஜ் மற்றும் அவரது மகன்கள் சரவணன், சிவக்குமார் ஆகியோர் கொசூரில் பேக்கரி கடை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், இந்த கடைக்கு அருகில் உள்ள கோட்டைகரையாம்பட்டியைச் சேர்ந்த வேல்முருகன் என்பவர் கூல்ட்ரிங்க்ஸ் குடிக்க வந்துள்ளார். பாதாம் கீர் வாங்கி குடித்துவிட்டு, பில் செலுத்தும்போது பாதாம் கீர் 30 ரூபாய் என பேக்கரி உரிமையாளர் கூறியுள்ளார். ஆனால், ‘பாதாம்கீரின் விலை 25 ரூபாய் தானே பாட்டிலில் போட்டுள்ளது..அப்புறம் ஏன் அஞ்சு ரூபாய் கூடுதலாக கேட்கிறீங்க?’ என்று வேல்முருகன் கேட்டபோது. ‘ஃப்ரிட்ஜில் வைத்து கூலிங் ஆக தருவதற்கு கூடுதலாக 5 ரூபாய்’ என கோவிந்தராஜ் கூறியுள்ளார்.
ஆனால் வேல்முருகன், ‘பாதாம் கீர் கூலிங் குறைவாகவே இருந்தது. இதற்கு ஏன் ஐந்து ரூபாய் கூடுதலாக தரவேண்டும்?’ என்று கேட்டதாக கூறப்படுகிறது. இதனைத்தொடர்ந்து, கடை உரிமையாளருக்கும்,வேல்முருகனுக்கும் இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, பணத்தை செலுத்தி விட்டு, அங்கிருந்து வெளியேறிய வேல்முருகன், தனது ஊரைச் சேர்ந்த நண்பர்களிடம் இது குறித்து கூறியுள்ளார்.
அதோடு, வேல்முருகன் கோட்டைகரையாம்பட்டியை சேர்ந்த 10-க்கும் மேற்ப்பட்ட இளைஞர்களை அழைத்து வந்து பேக்கரி கடையில் புகுந்து, கோவிந்தராஜ், அவரது மகன்கள் சரவணன் மற்றும் சிவக்குமார் ஆகியோரை சேரை எடுத்து கடுமையாக தாக்கியுள்ளனர். இதில், கடையின் உரிமையாளர் கோவிந்தராஜ், அவரது மகன்கள் சரவணன்(24), சிவக்குமார்(19) ஆகிய 3 பேரும் காயமடைந்தனர். அதன்பிறகு, தாக்குதலில் காயமடைந்த அந்த மூன்று பேரையும் அவரது உறவினர்கள் மைலம்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்நிலையில், இந்த தாக்குதல் குறித்த சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் பரவலாக பரவி வருகிறது. அதனைத்தொடர்ந்து,
சிந்தாமணிப்பட்டி காவல் நிலைய போலீஸார் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிந்து, விசாரணை மேற்கொண்டனர். அவர்களின் விசாரணையில், திருச்சி மாவட்டம், அவத்தூர் பரமசிவம் நகரை சேர்ந்த பெரியசாமி மகன் கோபால்(27), கரூர் கோட்டைக்கரையான்பட்டியை சேர்ந்த முருகன் மகன் பழனிக்குமார்(30), சுப்பிரமணி மகன் பழனிக்குமார்(29), கரூர் நல்லாச்சிப்பட்டியை சேர்ந்த கனகராஜ் மகன் சரவணகுமார்(20), சிவா மகன் பாண்டி(24), பாலப்பன் மகன் மணிவேல்(28) உள்ளிட்ட ஆறு பேரை கைது செய்தனர். அதோடு, இந்த தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடைய மேலும் சிலரை சிந்தாமணிப்ட்டி காவல் நிலைய போலீஸார் தேடி வருகின்றனர். கூல்ட்ரிங்ஸ் பாட்டிலுக்கு ரூ. 5 ரூபாய் அதிகம் கேட்டதாக பேக்கரிக்குள் புகுந்து இளைஞர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88