இந்தியா – அமெரிக்கா அணிகளுக்கு இடையிலான டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறுகிறது. நியூயார்க் நசாவ் கவுண்டி கிரிக்கெட் மைதானத்தில் தான் இப்போட்டி நடக்கிறது. இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு இவ்விரு அணிகளுக்கு இடையிலான போட்டி தொடங்க இருக்கும் நிலையில், இந்திய அணியை வீழ்த்த அமெரிக்கா அணியால் முடியும் என அந்த அணியின் கேப்டன் மோனக் படேல் தெரிவித்துள்ளார். இவர் உட்பட அமெரிக்கா அணியில் இருப்பவர்களில் 5 பேர் இந்தியாவை பூர்வீகமாக கொண்டவர்கள். மிலிந்த் குமார், ஹர்மீத் சிங், சவுரப் நேத்ரவல்கர் மற்றும் நிசார்க் படேல் ஆகியோர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள்.
சவுரப் நேத்ரவல்கர் இந்திய கிரிக்கெட்அணிக்காக U19 உலக கோப்பை விளையாடியவர். கே.எல். ராகுல் உள்ளிட்டோர் இவருடன் அப்போது அணியில் இருந்தவர்கள். ஹர்மீத் சிங் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக ஐபிஎல் போட்டிகளில் விளையாடி இருக்கிறார். இவர் விளையாடியபோது இப்போது இந்திய அணியின் பயிற்சியாளராக இருக்கும் ராகுல் டிராவிட் தான் அப்போது கேப்டனாக இருந்தார். இப்படியான சூழலில் தான் இந்தியா – அமெரிக்கா அணிகளுக்கு இடையிலான டி20 உலக கோப்பை நடைபெற இருக்கிறது. இதுகுறித்து பேசிய நேத்ரவல்கர், இந்திய அணிக்கு எதிராக விளையாடுவது என்பது எப்படியான சவால் மற்றும் கனவு என எங்களுக்கு தெரியும். இருப்பினும், எங்களின் பலத்தை முழுமையாக இந்திய அணிக்கு எதிராக வெளிக்கொண்டுவர முயற்சிப்போம் என தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அணியின் கேப்டன் மோனக் படேல் பேசும்போது, விராட் கோலி, ரோகித் சர்மா ஆகியோரின் கிரிக்கெட்டுகளை பார்த்து வளர்ந்தவன் நான். அவருக்கு எதிராக விளையாடுவதையே மிகப்பெரிய கவுரமாக நினைக்கிறேன். சவாலான போட்டி என்பதில் துளியும் மாற்றுக் கருத்தில்லை. மிகப்பெரிய அழுத்தம் எல்லாம் இப்போட்டியின்போது இருக்கும். இருப்பினும், அதனை கருத்தில் கொள்ளாமல் நல்ல கிரிக்கெட்டை விளையாட முயற்சிப்போம். எங்களின் பலத்தை அறிந்து, இந்திய அணிக்கு எதிராக களத்தில் எங்களுக்கான சூழலை உருவாக்குவதில் முழு கவனத்தையும் செலுத்துவோம். அதன்பிறகு கிடைக்கும் முடிவுகளை எதுவாக இருந்தாலும் ஏற்க தயாராக இருக்கிறோம் என கூறினார்.
அமெரிக்க கிரிக்கெட் அணியின் ஹர்மீத் சிங் பேசும்போது, ரோகித் சர்மா படித்த பள்ளியில் தான் நானும் படித்தேன். இப்போது அவருக்கு எதிராக கிரிக்கெட் விளையாடுவதை ஆவலுடன் எதிர்பார்த்திருக்கிறேன் என தெரிவித்துள்ளார். இந்தியா – அமெரிக்கா அணிகள் இதுவரை கிரிக்கெட்போட்டிகளில் நேருக்கு நேர் மோதியதில்லை. இந்த டி20 உலக கோப்பையில் தான் நேரடியாக மோத இருக்கின்றன. இப்போட்டியில் எந்த அணி வெற்றி பெற்றாலும் குரூப் 8 சுற்றுக்கு தகுதி பெறுவார்கள்.