Rahul Gandhi: `நான் உயிரியல் மனிதன்… இந்தியாவின் ஏழைகளே என் கடவுள்!' – ராகுல் காந்தி

தற்போது நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரங்களுக்கு மத்தியில், தனியார் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில், `நான் உயிரியலாகப் பிறந்திருக்க வாய்ப்பில்லை. பரமாத்மா தான் என்னை பூமிக்கு அனுப்பினார்’ என பிரதமர் மோடி கூறியிருந்தார். இதற்கு எதிர்க்கட்சிகள் தரப்பிலிருந்து பல்வேறு விமர்சனங்கள் வந்தபோதிலும், `மற்றவர்கள் என்ன நினைத்தாலும் சரி, அந்த பரமாத்மா தான் என்னை அனுப்பினார்’ என மீண்டும் மோடி அழுத்தமாகக் கூறினார்.

மோடி

இந்த நிலையில், தான் ஒரு உயிரியல் மனிதன் எனவும், மக்கள்தான் தன்னுடைய கடவுள் எனவும் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி கூறியிருக்கிறார்.

தான் வெற்றிபெற்ற வயநாடு மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டத்தில் இன்று பேசிய ராகுல் காந்தி, “துரதிஷ்டவசமாக மோடியைப் போல நான் பரமாத்மாவால் அனுப்பிவைக்கப்படவில்லை. நான் உயிரியல் மனிதன். 400 இடங்கள் என்று மோடி கூறியதையும், அது எப்படி 300 இடங்களாகக் குறைந்தது என்பதையும் நீங்கள் பார்த்தீர்கள். அதன் பிறகு அவர், நான் உயிரியல் மனிதன் அல்ல.

பரமாத்மா என்னை அனுப்பினார். அவர்தான் அனைத்து முடிவுகளையும் எடுக்கிறார் என்கிறார். அவரின் விசித்திரமான பரமாத்மா அவரை, அம்பானி மற்றும் அதானிக்கு ஆதரவாக அனைத்து முடிவுகளையும் எடுக்க வைக்கிறது. மும்பை விமான நிலையம், லக்னோ விமான நிலையம், முன் உற்பத்தி நிலையங்கள் போன்றவற்றை அதானிக்கு கொடுக்குமாறும், அக்னிவீர் போன்ற திட்டங்களுக்கு செயல்படுத்துமாறும் மோடியிடம் அது சொல்கிறது.

வயநாட்டில் ராகுல் காந்தி

துரதிஷ்டவசமாக அவரைப்போல பரமாத்மாவிடமிருந்து அறிவுரை பெறும் வசதி எனக்கு இல்லை. என்னைப் பொறுத்தவரை இந்தியாவின் ஏழைகள்தான் என் கடவுள். அவர்களிடம் சென்று நான் பேசுகிறேன். அதன்பின்னர் என்ன செய்யவேண்டும் என்று என் கடவுள் என்னிடம் பேசுகிறது. இப்போது நான் வயநாடு எம்.பி-யாக இருப்பேனா அல்லது ரேபரேலி எம்.பி-யாக இருப்பேனா என்ற குழப்பம் எனக்கு முன் இருக்கிறது. இந்தக் கேள்விக்கான பதில் என்னைத் தவிர அனைவருக்கும் தெரியும். ஆனால், கவலைப்பட வேண்டாம் வயநாடு மற்றும் ரேபரேலி மக்கள் எனது முடிவில் மகிழ்ச்சியடைவார்கள்” என்று கூறினார்.

ராகுல் காந்தி

மேலும் ராகுல் காந்தி, “தேர்தலுக்கு முன்பு, பா.ஜ.க தலைவர்கள் அரசியல் சட்டத்தை அழிப்போம், மாற்றுவோம், குப்பைத் தொட்டியில் வீசுவோம் என்று தெளிவாகக் கூறிவந்தனர். அவர்களின், 400 இடங்கள் இலக்கு என்பதன் நோக்கமே அரசியலமைப்பை மாற்றுவதுதான். இந்தியா கூட்டணியும், காங்கிரஸும் மோடியின் இந்த நோக்கத்தை முற்றிலுமாக அழித்துவிட்டது. தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அரசியல் சாசனத்தை மோடி தலையில் வைத்து வணங்கியிருக்கிறார். இன்று நீங்கள் பார்க்கும் மோடி, தேர்தலுக்கு முன்பிருந்த மோடியிலிருந்து முற்றிலும் மாறுபட்டிருக்கிறார்” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.