ஜனாதிபதி நிதிய புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வு ஜனாதிபதி தலைமையில் ஜூன் 19ஆம் திகதி ஆரம்பிக்கப்படும்.
அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் நலன்புரித் திட்டங்களை வினைத்திறனுள்ளதாக்கி அதன் பயன்களை மக்களுக்கு துரிதமாக வழங்குவதற்கு ஆளுநர்கள் பங்களிக்க வேண்டுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
மாகாண ஆளுநர்களுடன் (12) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.
மாகாண மட்டத்தில் உள்ள ஆசிரியர் பற்றாக்குறையை விரைவாகத் தீர்க்க எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் உறுமய காணி உறுதி வழங்கும் திட்டத்தின் வினைத்திறன் என்பன குறித்தும் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
உறுமய காணி உறுதிகளை வழங்கும் வேலைத்திட்டத்தை வினைத்திறன் மிக்கதாக மாற்றுவதற்கு கிராம உத்தியோகத்தர்களுக்கு மேலதிகமாக மற்றுமொரு குழுவிற்கு அதிகாரத்தை வழங்கி நடமாடும் சேவைகளை நடைமுறைப்படுத்துவதற்கான சாத்தியத்தை ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டினார்.
இது தொடர்பில் மக்களை ஆர்வமூட்டி, அவர்களுக்கு அந்த நன்மையை வழங்க வேண்டிய பொறுப்பு பிரதேச செயலாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதையும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நினைவுகூர்ந்தார்.
மாகாண மட்டத்தில் நிலவுகின்ற ஆசிரியர் பற்றாக்குறையை விரைவில் தீர்க்க அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகத் தெரிவித்த கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேம்ஜயந்த, தேசிய பாடசாலைகளுக்கு 2500 புதிய ஆசிரியர் நியமனங்களை ஜூலை 03ஆம் திகதி வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அதன் படி, இரசாயனவியல், பௌதிகவியல், உயிரியல், கணிதம், தொழில்நுட்பம், சர்வதேச மொழிகள் ஆகிய பாடங்களுக்கு 2100 ஆசிரியர் நியமனங்களையும்,2021 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆங்கில மொழிமூல உயர் டிப்ளோமா பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் 500 ஆசிரியர்களை நியமிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அதன் மூலம் தேசிய பாடசாலைகளில் குறித்த பாடங்களுடன் தொடர்புடைய ஆசிரியர் வெற்றிடங்கள் பெருமளவில் நீங்கும் என அமைச்சர் சுட்டிக்காட்டினார். அத்துடன், ஆங்கில மொழிமூல ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் வகையில் தற்போது ஓய்வு பெற்ற ஆங்கில மொழிமூல ஆசிரியர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டு ஒப்பந்த அடிப்படையில் ஆட்சேர்ப்பு செய்யப்பட்டு வருவதாகவும் சுட்டிக்காட்டிய அமைச்சர், கல்வி நிர்வாக சேவை மற்றும் ஆசிரியர் கல்வி சேவை ஆகியவற்றில் உள்ள உத்தியோகத்தர் பற்றாக்குறையை ஈடுசெய்யும் வகையில் துரித வேலைத்திட்டம் ஒன்று அமுல்படுத்தப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டார்.
இதேவேளை, குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின் பிள்ளைகளுக்காக ஜனாதிபதி நிதியத்தின் மூலம் நடைமுறைப்படுத்தப்படும் ஜனாதிபதி புலமைப்பரிசில் திட்டத்தை துரிதப்படுத்துவது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.
முதலாம் தரம் முதல் 11ஆம் தரம் வரை கல்வி கற்கும் ஒரு இலட்சம் மாணவர்களுக்கான ஜனாதிபதி புலமைப்பரிசில் திட்டத்தின் கீழ் மேல் மாகாணத்திற்கு 16,152 புலமைப்பரிசில்களும், வடமாகாணத்திற்கு 8,636 புலமைப்பரிசில்களும், ஏனைய மாகாணங்களுக்கு 10,000 புலமைப்பரிசில்களும் வழங்கப்படவுள்ளதாகவும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டது. புலமைப்பரிசில் திட்டத்தின் கீழ், ஒரு மாதத்திற்கு ரூ.3,000/- வீதம் 12 மாதங்களுக்கு புலமைப்பரிசில் வழங்கப்படும்.
மேலும்,க.பொ.த உயர்தரம் கற்கும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின் பிள்ளைகளுக்கு மாதம் 6,000 ரூபா வீதம் 24 மாதங்கள் புலமைப்பரிசில் வழங்கும் திட்டத்தின் பணிகள் தற்போது நிறைவுபெற்றுள்ளதாகவும், கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்த 2000 மாணவர்களுக்கான புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வு எதிர்வரும் ஜூன் 19ஆம் திகதி ஜனாதிபதி தலைமையில் அலரி மாளிகையில் நடைபெறவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டது.
அதற்கு இணையாக, மாவட்ட மட்டத்தில் புலமைப்பரிசில் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுவதுடன் புலமைப்பரிசில் வழங்கும் தினத்திலேயே, நிலுவைத் தவணையுடன் உரிய பணம் மாணவர்களின் கணக்கில் வரவு வைக்கப்படும். அதன்பின், ஒவ்வொரு மாதமும் முதல் வாரத்தில், online முறையில் மாணவர்களின் கணக்கில் உரிய புலமைப்பரிசில் தொகை நேரடியாக வரவு வைக்கப்படும்.
வரலாற்றில் முதன்முறையாக பிரிவெனா, சில்மாதா கல்வி நிலையங்களில் பயிலும் பிக்குமார்,பிக்குணிகள் , மற்றும் மாணவர்களுக்கு புலமைப்பரிசில் வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதுடன், விண்ணப்பங்கள் கோரல் முடிவடைந்ததையடுத்து புலமைப்பரிசில்கள் வழங்கும் பணி உடனடியாக ஆரம்பிக்கப்படும். க.பொ.த உயர் தரத்தில் தகவல் தொடர்பாடல், தொழிநுட்பம் பாடம் கற்கும் மாணவர்களுக்கான புலமைப்பரிசில் வழங்கும் திட்டத்திற்கான விண்ணப்பங்கள் கோரும் நடவடிக்கை ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் இங்கு குறிப்பிடப்பட்டது.
இந்த அனைத்து புலமைப்பரிசில் கொடுப்பனவுகளுக்காகவும் வருடமொன்றுக்கு 5100 மில்லியன் ரூபா செலவிடப்படுவதாகவும், அதற்கான முழுத் தொகையும் ஜனாதிபதி நிதியத்திலிருந்து ஏற்கனவே ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டது. இந்த புலமைப்பரிசில் திட்டங்களை மாவட்ட மட்டத்தில் வெற்றியடையச் செய்வதில் ஆளுநர்களுக்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்பு குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
பிரதமர் தினேஷ் குணவர்தன, தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க மற்றும் சம்பந்தப்பட்ட அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் நிறுவனங்களின் தலைவர்கள் இக்கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.