“நடிகர் ராகவா லாரன்ஸை ரோல் மாடலாக வைத்து முன்னணி நடிகர்களும் மக்களுக்கு உதவ முன்வருவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது..” என்று மதுரை முத்து தெரிவித்துள்ளார்.
நகைச்சுவை கலைஞர் மதுரை முத்து, மாற்றுத்திறனாளிகளுக்கு உதவிடும் வகையில் தன் நண்பர்களுடன் இணைந்து நலத்திட்ட உதவிகளை வழங்கிய நிகழ்ச்சி, நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
மதுரை, காந்தி அருங்காட்சியக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வில் மதுரை மாவட்டத்தை சேர்ந்த 100 மாற்றுத்திறனாளிகளுக்கு, அரிசி உள்ளிட்ட ஒரு மாதத்திற்கு தேவையான உணவுப் பொருள்கள், நிதி உதவி மற்றும் தலைக்கவசத்துடன் கூடிய நலத்திட்ட உதவிகளை வழங்கினார் மதுரை முத்து.
அதோடு, நிகழ்ச்சியில் மாற்றுத்திறனாளிகளை மகிழ்ச்சிப்படுத்தும் வகையில் காமெடியாக பேசி சிரிக்க வைத்தார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய மதுரை முத்து, ’’மாற்றுத்திறனாளிகள் பல சிரமங்களை சந்தித்து வருகிறார்கள். குறிப்பாக, நடக்க இயலாத தவழும் மாற்றுத்திறனாளிகள் கடும் சிரமங்களை சந்தித்து வருகிறார்கள். அவர்களுக்கு உதவ வேண்டுமென்று நினைத்து நண்பர்களுடன் இணைந்து இந்த உதவிகளை செய்துள்ளேன். இது தொடக்கம்தான். தொடர்ந்து அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளுக்கும் உதவ முடிவெடுத்துள்ளேன். நடிகர் ராகவா லாரன்ஸ், பாலா ஆகியோர் செய்து வரும் முன்னெடுப்பு அனைவரையும் உதவத் தூண்டுகிறது.
மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும்போது மனதிற்கு சந்தோஷமாக இருக்கிறது. இரவில் நிம்மதியாக தூங்க முடிகிறது. நடிகர் ராகவா லாரன்ஸை ரோல்மாடலாக வைத்து முன்னணி நடிகர்கள் பலரும் எளிய மக்களுக்கு உதவி செய்ய வருவார்கள் என நம்புகிறோம்” என்றார்.