இனி இந்த வீரருக்கு ரெஸ்ட்… வருகிறார் குல்தீப் யாதவ் – சூப்பர் 8 சுற்றுக்கு ரெடியாகும் இந்திய அணி

India National Cricket Team: கிரிக்கெட்டில் ஐசிசி தொடர்கள் வந்தாலே ரசிகர்கள் குதூகலமாகிவிடுவார்கள். முன்பை போல் இல்லாமல் இப்போதெல்லாம் ஒவ்வொரு ஆண்டும் ஒரு ஐசிசி தொடராவது நடந்துவிடுகிறது என்பதால் ரசிகர்கள் எப்போதுமே கொண்டாட்ட மனநிலையிலேயே இருப்பார்கள். இதில் தங்களுக்கு பிடித்த அணி/அணிகளின் வெற்றி, தோல்விகள் ஒருபுறம், நல்ல கிரிக்கெட்டை பார்ப்பதே ரசிகர்களின் உச்சபட்ச மகிழ்ச்சியாகும்.

அந்த வகையில் தற்போது ஐசிசி டி20 உலகக் கோப்பை 2024 தொடர் (ICC T20 World Cup 2024) நடைபெற்று வருகிறது. டி20 உலகக் கோப்பை என்றே அதிரடியாக சிக்ஸர்கள் பறக்கும் என எதிர்பார்த்திருந்தவர்களுக்கு பெரிய ஏமாற்றம் ஏற்பட்டிருக்கும். ஆனால், கிரிக்கெட்டை மிக நெருக்கமாக பார்க்கக் கூடிய, ரசிக்கக் கூடிய அனைவருக்கும் தற்போதைய சூழல் மிகவும் பிடித்திருக்கும் எனலாம். பேட்டிங் – பந்துவீச்சு என இரண்டுக்கும் சம அளவு வாய்ப்பளிக்கக் கூடிய ஆடுகளங்கள், நீண்ட பவுண்டரிகளை கொண்ட மைதானம், முற்றிலும் மாறுபட்ட சூழல் ஆகியவை தொடரின் போக்கை முற்றிலும் போக்கியிருக்கிறது. 

சூப்பர் 8 சுற்று…

தற்போதைய குரூப் சுற்றில் இருந்து இதுவரை ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, இந்தியா, மேற்கு இந்திய தீவுகள் ஆகிய அணிகள் மட்டுமே சூப்பர் 8 சுற்றுக்கு தகுதிபெற்றுள்ளன. ஆப்கானிஸ்தான், வங்கதேசம், அமெரிக்கா, நெதர்லாந்து, ஸ்காட்லாந்து, இங்கிலாந்து, அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு (ICC T20 World Cup 2024 Super 8) தகுதிபெற அதிக வாய்ப்புள்ளது. நியூசிலாந்து, பாகிஸ்தான், இலங்கை உள்ளிட்ட அணிகளுக்கு வாய்ப்பு குறைவாகவே உள்ளது. மேலும், குரூப் சுற்று போட்டிகள் ஜூன் 18ஆம் தேதி வரை நடைபெறுகிறது என்றாலும் இன்னும் ஓரிரு நாள்களிலேயே யார் யார் அடுத்து சுற்றுக்கு செல்கிறார்கள் என்பதும், எந்தெந்த அணிகள் சூப்பர் 8 சுற்றில் எந்தெந்த தேதிகளில் மோதும் என்ற விவரமும் தெரிந்துவிடும்.

இந்தியா – கனடா போட்டி

தற்போதைய சூழலில் இந்திய அணி வரும் ஜூன் 24ஆம் தேதி ஆஸ்திரேலியா உடன் மோதும் என்பது மட்டும் உறுதியாகி உள்ளது. சூப்பர் 8 சுற்றில் ஒரு அணி மூன்று போட்டிகளில் விளையாடும். அதில் டாப் 4 இடங்களை பிடிக்கும் அரையிறுதி சுற்றுக்கு தகுதிபெறும். இந்திய அணி குரூப் ஏ பிரிவில் முதல் அணியாக சூப்பர் 8 சுற்றுக்கு தகுதிபெற்றுள்ளது. இந்திய அணிக்கு இன்னும் கனடா அணியுடன் (IND vs IRE Match) வரும் ஜூன் 15ஆம் தேதி ஒரு குரூப் சுற்று போட்டி மட்டுமே உள்ளது. இதில் தோற்றாலும் ஜெயித்தாலும் இந்திய அணிக்கு எவ்வித தாக்கமும் இல்லை. 

வருகிறார் குல்தீப் யாதவ்

அதே நேரத்தில் இந்திய அணி (Team India), மேற்கு இந்திய தீவுகளை சுற்றி நடக்கும் சூப்பர் 8 சுற்றுக்கு தயாராக இந்த போட்டியை பயன்படுத்திக்கொள்ளும் என்று கூறப்படுகிறது. சூப்பர் 8 சுற்று போட்டிகள் அனைத்தும் மேற்கு இந்திய தீவுகளில் நடைபெற இருப்பதால் இந்திய அணி ஒரு மணிக்கட்டு சுழற்பந்துவீச்சாளரை கொண்டுசெல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி பார்த்தோமானால் வேகப்பந்துவீச்சாளர் சிராஜ் (Mohammed Siraj) அமரவைக்கப்பட்டு, குல்தீப் யாதவிற்கு வாய்ப்பு வழங்கப்படலாம். இதனை இந்திய அணி வரும் கனடா (Team Canada) போட்டியிலேயே பரிசோதித்து பார்க்கும் என்றே கூறப்படுகிறது. 

ஏன் சிராஜ்…?

கடந்த மூன்று போட்டிகளிலும் சுழற்பந்துவீச்சாளர்களுக்கு பெரிய ஒத்துழைப்பு இல்லாததால் இந்திய அணி ஜடேஜா, அக்சரை நம்பியே விளையாடியது. இவர்கள் பேட்டிங்கிலும் கைக்கொடுக்கக் கூடியவர்கள். எனவே, அவர்களில் ஒருவரை வெளியே வைப்பதற்கு பதில் வேகப்பந்துவீச்சாளர்களில் ஒருவரை அமரவைப்பது சரியான காம்பினேஷனாக இருக்கும். புது பந்தில் பும்ரா மற்றும் அர்ஷ்தீப் மட்டுமின்றி ஹர்திக் பாண்டியாவும் பந்துவீசுவார். நீங்கள் அக்சர் படேலை கூட பவர்பிளேவில் ஓரிரு ஓவர்களை வீச வைக்கலாம். அதன்பின், ஜடேஜா, குல்தீப்பை வைத்து மிடில் ஓவர்களை ஓட்டலாம். தேவைப்பட்டால் ஷிவம் தூபேவும் உள்ளார். ஒருவேளை இந்த போட்டியில் சில வீரர்களுக்கு ஓய்வு வழங்கப்பட்டு சஞ்சு சாம்சன், சஹால் ஆகியோர் கூட விளையாட வைக்கப்படலாம்.

மேலும் படிக்க | சூப்பர் 8 சுற்றில் இந்தியா – ஆஸ்திரேலியா போட்டி… எங்கு, எப்போது தெரியுமா?
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.