கோவை மாவட்டத்தில் இயங்கி வரும் ரெட் டாக்ஸி மக்களிடம் பிரபலமானது. அருகில் உள்ள மாவட்டங்கள், கேரள மாநிலத்துக்கும் செல்லும். இந்நிலையில் கோவையிலிருந்து நீலகிரி மாவட்டம் ஊட்டி செல்லும் ரெட் டாக்ஸி மற்றும் கோ டாக்ஸி ஓட்டுநர்களை ஊட்டி டூரிஸ்ட் சங்கத்தினர் மிரட்டித் தாக்குதல் நடத்துவதாகப் புகார் எழுந்துள்ளது.
குடும்பத்துடன் வரும் வாகனங்களை நிறுத்தி, கார் கண்ணாடியை உடைப்பது, ரெட் டாக்ஸி ஸ்டிக்கர்களைக் கிழிப்பது, கார் கதவுகளை உடைப்பது என அட்டூழியம் செய்வதாகப் புகார் தெரிவித்துள்ளனர்.
இதைக் கண்டித்து கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நூற்றுக்கும் மேற்பட்ட ரெட் டாக்ஸி மற்றும் கோ டாக்ஸி ஓட்டுநர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது டாக்ஸி ஓட்டுநர்கள் கூறுகையில், “நாங்கள் அங்குள்ள ஓட்டுநர்களைத் தொந்தரவு செய்வதில்லை. ஆனால், கோவையிலிருந்து ஊட்டிக்கு டிராப் மட்டுமே செய்ய வேண்டும்.
ஊட்டியிலிருந்து பிக்கப் செய்யக்கூடாது என்று கூறி பிரச்னை செய்கின்றனர். அனைத்து மாவட்டங்களிலும் பயணிக்க ஆர்.டி.ஓ அனுமதி உள்ளது. இந்த ஒரு மாவட்டத்துக்கு சென்றால் மட்டும் அடிக்கிறார்கள். சொந்த மாவட்ட ஓட்டுநர்கள் டாக்ஸியில் சென்றால்கூடத் தாக்குகின்றனர்.
ரெட் டாக்ஸி, கோ டாக்ஸி ஓட்டுநர்கள் என்றால் பிடிக்கவில்லை எனச் சொல்லி அடிக்கின்றனர். கடந்த சில நாள்களுக்கு முன்பு ஒருவரை அடித்து மண்டையை உடைத்துள்ளனர். ஒவ்வொரு ஓட்டுநரும் பல லட்ச ரூபாய் கடனை வைத்துக் கொண்டு, அதற்காக குடும்பங்களைப் பிரிந்து இங்கு வந்து டாக்ஸி ஓட்டிக் கொண்டிருக்கிறோம்.
ஊட்டி சென்றால் எங்கள் உயிருக்கே உத்தரவாதம் இல்லை. இதில் இரண்டு மாவட்ட ஆட்சியர்களும் தலையிட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்!” என்று கோரிக்கை வைத்துள்ளனர்.