எதிர்கால சவால்களை வெற்றிகொள்ளும் அறிவுத்திறன் நிறைந்த இளம் தலைமுறையை உருவாக்க வேண்டும்- ஜனாதிபதி

எதிர்கால சவால்களை வெற்றிகொள்ளும் வகையில் அறிவும் பயிற்சியும் நிறைந்த இளைஞர் தலைமுறை உருவாக்கப்பட வேண்டும் என ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

நாட்டின் இளைஞர்களுக்கு உயர் வருமான வழியை உருவாக்கத் தேவையான பொருளாதார செயற்திட்டம் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

இளைஞர் படையணியின் இளைஞர் யுவதிகளை ஜனாதிபதி அலுவலகத்தில் (12) சந்தித்தபோதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைத் தெரிவித்தார்.

இளைஞர் படையணியின் பணிப்பாளர் பிரிகேடியர் சுஜீவ ரத்நாயக்கவினால் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு நினைவுப் பரிசொன்றும் இதன்போது வழங்கப்பட்டது.

இங்கு கருத்து தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் கூறியதாவது,

”இளைஞர் படையணி ஆரம்பிக்கப்பட்டு 22 வருடங்களாகின்றன. அன்றிருந்த பொருளாதார, சமூக முறைமைக்கு ஏற்ற வகையில் இந்த இளைஞர் படையணி ஆரம்பிக்கப்பட்டது. காலத்துக்கு ஏற்ப இளைஞர் படையணியும் மாற வேண்டும். இளைஞர்களுக்கு நல்ல எதிர்காலத்தை ஏற்படுத்திக் கொடுக்க, நல்ல வருமான நிலையை உருவாக்க வேண்டும். அதற்கு இளைஞர் படையை மாற்றுவதற்குத் தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இளைஞர்கள் அதிக வருமானம் உள்ள தொழில்களை விரும்புகிறார்கள். எனவே, அந்த நிலையை உருவாக்குவதற்கான திட்டங்களை உருவாக்க வேண்டும். அதற்காக பாராளுமன்றத்தில் பொருளாதார பரிமாற்ற சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதன் ஊடாக 2027 ஆம் ஆண்டிற்குள் வேலையின்மையைக் குறைக்க முடியும். 2035 ஆம் ஆண்டிற்குள் அதிக வருமானம் தரும் பல தொழில் துறைகளை உருவாக்கலாம். 2048 ஆம் ஆண்டுக்குள் வளர்ச்சியடைந்த நாடொன்று உருவாகும். இன்று இங்கு இருக்கும் இளைஞர் படையணி மாணவர்களுக்கு அப்பொழுது 50 வயது கூட ஆகியிருக்காது. புதிய பொருளாதாரத்தை உருவாக்கத் தேவையான திட்டத்தை செயல்படுத்த வேண்டும். வியட்நாம், தாய்லாந்து, மலேசியா போன்ற நாடுகளின் ஏற்றுமதிப் பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்ட அபிவிருத்தியில் நாம் கவனம் செலுத்த வேண்டும். எனவே, ஏற்றுமதி சார்ந்த பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப நாம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், விரைவாக அபிவிருத்தி செய்யக்கூடிய துறைகள் தொடர்பில் நாம் கவனம் செலுத்த வேண்டும். சுற்றுலாத் துறை, விவசாயத் துறை, தகவல் தொழில்நுட்பம் போன்ற துறைகளை மேம்படுத்துவதற்கான அவசரத் திட்டம் செயல்படுத்தப்பட வேண்டும். இதற்காக இளைஞர் படையணி மாணவர்களை வழிநடத்த வேண்டிய தேவை உள்ளது. பசுமை சமுதாயம் மற்றும் பசுமைப் பொருளாதாரத்தை உருவாக்குவதன் மூலம், எதிர்கால சவால்களை வெற்றிகொள்ளும் அறிவும் பயிற்சியும் கொண்ட இளம் தலைமுறையை உருவாக்க தேவையான வேலைத்திட்டம் தயாரிக்கப்பட வேண்டும். தொழில் பயிற்சி பெற்ற இளைஞர்களை உருவாக்கி நாட்டின் பொருளாதாரத்தை புதிய பரிமாணத்திற்கு கொண்டு செல்ல வேண்டும்” என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க,

”2002 ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் எண்ணக் கருவின் கீழ் எதிர்காலத்திற்கு ஏற்ற இளைஞர்களை உருவாக்கும் நோக்கில் இளைஞர் படையணி ஸ்தாபிக்கப்பட்டது. அன்று எட்டு மத்திய நிலையங்களுடன் ஆரம்பிக்கப்பட்ட இளைஞர் படையணி இன்று 57 நிலையங்களாக வளர்ந்துள்ளது. எதிர்கால உலகிற்கு பொருத்தமான இளைஞர்களைத் தெரிவுசெய்து, சவால்களை ஏற்றுக்கொள்ளக்கூடிய தலைமைத்துவத்தை நோக்கி இளைஞர்களை வழிநடத்தும் செயற்பாட்டை இளைஞர் படையணி ஊடாக மேற்கொண்டோம்.

ஆனால் ஆட்சி மாற்றத்திற்குப் பின்னர் இளைஞர் படையணி என்ற எண்ணக்கரு முன்னோக்கிச் செல்லவில்லை. இளைஞர் படையணியிலிருந்து உருவான இளைஞர்களுக்கு சரியான மதிப்பு வழங்கப்பட்டு தேசிய பொருளாதாரத்திற்கு அவர்களைப் பங்களிக்கச் செய்திருந்தால் சிறந்த பொருளாதாரத்தை உருவாக்கியிருக்க முடியும். இதனாலேயே 2015 இல் ரணில் விக்ரமசிங்க பிரதமராக இளைஞர் படையணியை மீண்டும் செயற்படுத்தினார்.

2020ஆம் ஆண்டுக்குப் பின்னர் நாட்டைப் பாதித்த கொவிட் தொற்றுநோயைப் போன்றே பொருளாதார நெருக்கடியும் அனைவரையும் பாதித்தது. அந்தக் கால கட்டத்தில் அனைவரும் ஒரேமாதிரி பாதிக்கப்பட்டனர். அந்த பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டைக் காப்பாற்ற எந்தவொரு தலைவரும் முன்வரவில்லை. இந்நிலைமைக்கு முகங்கொடுத்து தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாட்டைப் பொறுப்பேற்று அனைவரும் வாழக்கூடிய பொருளாதாரத்தை உருவாக்கினார். இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கி அவர்களை இலங்கையின் பொருளாதாரத்திற்கு பங்களிக்கும் வகையில் வேலைத்திட்டம் ஒன்றைத் தயாரித்து வருகிறார்.

இளைஞர் படையணி ஊடாக நாட்டை அபிவிருத்தி செய்யத் தேவையான அனைத்து துறைகளிலும் திறமையான இளைஞர்களை உருவாக்க முடியும். இது தொடர்பான பயிற்சிகளை வழங்க இளைஞர் படையின் மையங்கள் செயல்பட்டு வருகின்றன. துறைமுகங்கள், சுற்றுலா, கணினி மற்றும் மொழிகள் ஆகிய துறைகளில் பொருளாதாரத்தை வெல்லும் வகையில் இளைஞர்கள் வடிவமைக்கப்பட வேண்டும். அதற்கு, இளைஞர் படையணியினால் பெரும் பங்காற்ற முடியும். எதிர்கால காலநிலை மாற்றத்தை ஆராய அந்தத் துறைக்கு இளைஞர் படையணியின் ஊடாக இளைஞர்களை வழிநடத்த முடியும்.

எதிர்காலத்திற்கு ஏற்ற குழுக்களை உருவாக்கும் அதேவேளையில் எதிர்கால சவால்களுக்கு ஏற்றவாறு முப்படைகளை மாற்றவும் எதிர்பார்க்கப்படுகிறது. அவர்களுக்குப் பொருத்தமான நவீன தொழில்நுட்ப மற்றும் மொழி அறிவை வழங்க நாங்கள் பணியாற்றி வருகிறோம். எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய சுற்றுச்சூழல் அச்சுறுத்தல்கள் குறித்தும் கவனத்தை ஈர்த்து அவற்றுக்கான தீர்வுகளை வழங்கவும் எதிர்பார்க்கிறோம். இந்து சமுத்திர பிராந்தியத்தின் ஆட்புல ஒருமைப்பாட்டைப் பாதுகாப்பதன் மூலம் கப்பல் பாதையின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு இலங்கை செயற்பட்டு வருகிறது” என்று சாகல ரத்னாயக்க தெரிவித்தார்.

இளைஞர் படையணியின் தலைவர் சதுரங்க உடவத்த, இளைஞர் படையணியின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சன்ன குணதிலக்க உள்ளிட்ட பலர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.