மும்பை: மும்பையில் மருத்துவர் ஒருவர் ஆன்லைனில் ஆர்டர் செய்த ஐஸ்கிரீம் கோனில் மனித விரல் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். அந்த விரல் சுமார் 2 செமீ நீளம் இருக்கும் எனவும் கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிராமாநிலம், மும்பையில் பிரெண்டன் ஃபெராவ் (Dr. Brendan Ferrao- 27) என்ற மருத்துவர் ஆன்லைன் டெலிவரி செய்யும் செயலி மூலம் கோன் ஐஸ்கிரீம் ஆர்டர் செய்திருக்கிறார். அவர் ஆர்டர் செய்ததுபோல ஐஸ்கிரீம் வந்திருக்கிறது. அதை அதீத ஆர்வத்துடன் அவர் திறந்து பார்த்தபோது அவருக்கு ஓர் அதிர்ச்சி காத்துக்கொண்டிருந்தது. அப்போது ஐஸ்கிரீமுக்குள் மனித விரல் கிடந்ததைக் கண்டு பிரெண்டன் ஃபெராவ் அதிர்ச்சியடைந்தார். புதன்கிழமை பிற்பகல் இந்தச் சம்பவம் நடந்துள்ளது.
இது குறித்து சம்மந்தப்பட்ட ஐஸ்கிரீம் நிறுவனத்தின் மீது மலாட் காவல் நிலையத்தில் புகாரளித்தார். இதையடுத்து போலீஸார் வழக்குப் பதிவு செய்ததுடன் மனித விரல் கண்டெடுக்கப்பட்ட ஐஸ்கிரீம் கடைக்குச் சென்று விசாரணை நடத்தினர். ஐஸ்கிரீமில் கண்டெடுக்கப்பட்ட மனித உறுப்பை தடய அறிவியல் ஆய்வகத்திற்கு போலீஸார் அனுப்பி வைத்துள்ளனர். அந்த விரல் சுமார் 2 செமீ நீளம் எனவும் கூறப்படுகிறது
வழக்குப் பதிவு செய்துள்ள போலீஸார், ஐஸ்கிரீம் எங்கிருந்து கொண்டு வரப்பட்டது, எங்கு, எப்போது தயாரிக்கப்பட்டது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது குறித்து தனது அனுபவத்தை பகிர்ந்து கொண்ட அவர், “ஐஸ்கிரீம் சாப்பிட்டு கொண்டிருந்தபோது, ஏதோ ஒன்று பெரிதாக வாயில் தென்படுவதாக உணர்ந்தேன். அது ஒரு பெரிய கொட்டையாக இருக்கலாம் என்று நினைத்தேன்.
அதிர்ஷ்டவசமாக, நான் அதை சாப்பிடவில்லை. அதன் பிறகு தான் தெரியவந்தது. ஐஸ்கிரீமில் மனித விரல் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தேன். நேற்று முதல் நாக்கு மரத்துப்போய் இருக்கிறது. இந்த ஐஸ்கிரீம் ஒரு மாதத்துக்கு முன்பு தயாரிக்கப்பட்டது. முதலில் நான் முழு ரத்தப் பரிசோதனை செய்ய பார்க்க வேண்டும்” என்றார்.
மாநில உணவு மற்றும் மருந்து ஆணையம் (FDA-Food and Drug Administration) இந்த விஷயத்தை கவனத்தில் எடுத்து விசாரித்து வருகிறது. பொருட்களின் தயாரிப்புத் தரம் மற்றும் பாதுகாப்பு எங்களின் முன்னுரிமையாக இருப்பதால், நாங்கள் இது குறித்து விசாரணை நடத்த அதிகாரிகளுடன் ஒத்துழைக்கிறோம் என ஐஸ்கிரீம்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.