துபாய்,
வளைகுடா நாடுகளில் ஒன்றான குவைத், ஏராளமான புலம்பெயர் மக்களை தன்னகத்தே கொண்டிருக்கிறது.
உலக அளவில் எண்ணெய் உற்பத்தியில் முன்னணியில் இருக்கும் நாடு என்பதால், அங்குள்ள எண்ணெய் வயல்கள், சுத்திகரிப்பு மையங்கள் என அது சார்ந்த நிறுவனங்களில் பணியாற்றுவதற்காக பல்வேறு நாடுகளில் இருந்து ஏராளமான மக்கள் குவைத்தில் வசிக்கின்றனர்.
இதில் பெரும்பாலானவர்கள் இந்தியர்கள் ஆவர். பிற வளைகுடா நாடுகளைப்போல குவைத்திலும் இந்தியர்கள் அதிகமாக வசித்து வருகிறார்கள்.
குவைத்தின் மொத்த மக்கள் தொகையில் 21 சதவீதத்தினர், அதாவது சுமார் 10 லட்சம் பேர் இந்தியர்கள் ஆவர். மேலும் நாட்டின் தொழிலாளர் வர்க்கத்திலும் 30 சதவீதம் பேர் (சுமார் 9 லட்சம்) இந்தியாவை சேர்ந்தவர்கள்.
குவைத்தில் உள்ள நிறுவனங்களில் பணியாற்றி வரும் இந்தியர்கள் பலர் குடும்பமாக தங்கியிருக்கின்றனர். அதேநேரம் குடும்பத்தினரை இங்கே விட்டுவிட்டு தனியாக வசிப்பவர்களும் அதிகமாக உள்ளனர்.
இவர்கள் பெரும்பாலும் அவர்கள் வேலை பார்க்கும் நிறுவனங்கள் ஏற்பாடு செய்து கொடுக்கும் குடியிருப்புகளில் தங்கியுள்ளனர்.
அந்தவகையில் குவைத்தில் இயங்கி வரும் பிரபலமான என்.பி.டி.சி. என்ற நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்கள் அனைவரும் குவைத்தின் தெற்கு பகுதியில் உள்ள அகமதி கவர்னரகத்துக்கு உட்பட்ட மங்காப்பில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் தங்கவைக்கப்பட்டிருந்தனர்.
6 மாடிகளை கொண்ட அந்த அடுக்குமாடி குடியிருப்பில் சுமார் 200 பேர் தங்கியிருந்தனர். தொழிலாளர் முகாம் என அழைக்கப்படும் அந்த பகுதியில் தங்கியிருந்தவர்களில் பெரும்பாலானோர் இந்தியர்கள் ஆவர். அதிலும் குறிப்பாக கேரளா, தமிழ்நாடு போன்ற தென்னிந்தியாவை சேர்ந்தவர்களே அதிகம்.
இந்த அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள ஒரு வீட்டில் நேற்று அதிகாலையில் சமையல் செய்து கொண்டிருந்தபோது திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
மளமளவென பரவிய இந்த தீ அடுத்தடுத்த வீடுகளுக்கும், மாடிகளுக்கும் பரவியது. இதனால் அந்த பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்து பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது.
அதிகாலை நேரம் என்பதால் பலரும் தூக்கத்தில் இருந்தனர். இதனால் அவர்கள் தூக்கத்திலேயே உடல் கருகினர். அதேநேரம் புகை மூட்டம் காரணமாக பலருக்கும் மூச்சுத்திணறலும் ஏற்பட்டது.
இவ்வாறு உடல் கருகியும், மூச்சுத்திணறியும் பல தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதில் உடல் கருகியதை விட, மூச்சுத்திணறி இறந்தவர்களே அதிகம் ஆகும்.
அதேநேரம் தீ விபத்து ஏற்பட்டதும் தப்பிக்க வழி தெரியாமல் மாடிகளில் இருந்து பலரும் கீழே குதித்தனர். இதனால் படுகாயம் ஏற்பட்டும் சிலர் உயிரிழந்தனர்.
இதனால் அந்த பகுதி முழுவதும் மரண ஓலமும், அலறல் சத்தமுமாக பெரும் பரபரப்பாக காணப்பட்டது.
இது குறித்து தகவல் அறிந்ததும் 5-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வண்டிகளில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் அடுக்குமாடி குடியிருப்பில் பிடித்த தீயை அணைக்கும் பணிகளில் ஈடுபட்டனர்.
அத்துடன் தீயில் கருகியும், மூச்சுத்திணறியும் உயிருக்கு போராடியவர்களை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பிவைத்தனர். அதைப்போல தீ பிடித்ததால் வெளியேற முடியாமல் ஆங்காங்கே சிக்கியிருந்தவர்களையும் உயிருடன் மீட்டனர்.
நெஞ்சை உருக்கும் இந்த பயங்கர சம்பவத்தில் 49 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதில் பெரும்பாலானவர்கள் இந்தியர்கள் ஆவர்.
இந்த துரதிர்ஷ்டமான சம்பவத்தில் தமிழர்கள் இருவரும் பலியாகி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
மேலும் இந்த சம்பவத்தில் 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து அருகில் உள்ள ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ளனர். இதில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
எனவே பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
இந்த தீ விபத்து குறித்து தகவல் அறிந்ததும் குவைத்தில் உள்ள இந்திய தூதரகம் அதிரடியாக நடவடிக்கையில் இறங்கியது. சம்பவத்தில் பலியான இந்தியர்களின் விவரங்களை சேகரிக்கும் பணியில் இறங்கிய தூதரகம், இது தொடர்பாக குடும்பத்தினர் தொடர்பு கொள்ள அவசர உதவி எண் (+965-65505246) ஒன்றையும் வெளியிட்டது.
மேலும் இந்திய தூதர் ஆதர்ஷ் சுவைகா தீ விபத்து நடந்த இடத்துக்கு சென்று பார்வையிட்டார். பின்னர் அவர் காயமடைந்தவர்கள் சிகிச்சை பெற்று வரும் ஆஸ்பத்திரிகளுக்கும் சென்று அவர்களது உடல்நிலை குறித்து விசாரித்தார்.
அப்போது, சிகிச்சை பெறுபவர்களில் பலரும் நேற்றே டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்கள் என ஆஸ்பத்திரி நிர்வாகங்கள் கூறின. தங்கியிருந்து சிகிச்சை பெற வேண்டிய தேவை உள்ளவர்களின் உடல்நிலையும் சீராக இருப்பதாக கூறப்பட்டு இருக்கின்றன.
இந்த தகவல்களை வெளியிட்டுள்ள இந்திய தூதரகம், உயிரிழந்த இந்தியர்களின் உடல்களை உடனடியாக தாயகம் அனுப்புவதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருவதாக கூறியுள்ளது.
இது தொடர்பாக குவைத் அதிகாரிகளுடன் தொடர்ந்து பேசி வருவதாகவும் எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டு இருந்தது.
சர்வதேச அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள இந்த தீ விபத்து குவைத் ஆட்சியாளர்களுக்கு பெரும் கோபத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
குவைத் மன்னர் ஷேக் மெஷல் அல்-அகமது அல்-ஜாபர் அல்-சபா, தீ விபத்து குறித்து உடனடி விசாரணைக்கு உத்தரவிட்டார். இதற்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.
விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு பட்டத்து இளவரசர் ஷேக் சபா காலத் அல்-ஹமது அல்-சபா இரங்கல் தெரிவித்து இருந்தார். அத்துடன் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகவும் தெரிவித்தார்.
பெரும் விபத்துக்கு சாட்சியாகி இருக்கும் அந்த அடுக்குமாடி குடியிருப்பின் உரிமையாளர், காவலாளி, தொழிலாளர்கள் பணியாற்றி வந்த நிறுவனத்தின் உரிமையாளர் ஆகியோரை கைது செய்யுமாறு போலீசாருக்கு துணை பிரதமர் ஷேக் பகத் அல்-யூசுப் அல்-சபா உத்தரவிட்டார்.
நிறுவனம் மற்றும் கட்டிட உரிமையாளர்களின் பேராசையே இந்த பெருந்துயருக்கு காரணம் என கூறியுள்ள அவர், இது போன்ற விதிமீறல்களை கொண்டிருக்கும் பிற கட்டிடங்களை ஆய்வு செய்யுமாறு சிவில் அதிகாரிகளையும் அறிவுறுத்தி உள்ளார்.
பெரும் தீ விபத்தை தொடர்ந்து பல்வேறு முக்கிய அதிகாரிகளை குவைத் மாநகராட்சி நிர்வாகம் இடைநீக்கம் செய்து உள்ளது.
தீ விபத்து குறித்து அறிந்ததும் பிரதமர் மோடி ஆழ்ந்த கவலை வெளியிட்டு உள்ளார்.
இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், ‘குவைத் நகரில் நடந்த தீ விபத்து பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. எனது எண்ணம் எல்லாம் தங்கள் அன்பானவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருடனேயே இருக்கிறது. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். அங்குள்ள நிலைமையை குவைத்தில் உள்ள இந்திய தூதரகம் உன்னிப்பாக கவனித்து வருகிறது. பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக அந்த நாட்டு அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்றி வருகிறது’ என்று குறிப்பிட்டு உள்ளார்.
இதைப்போல வெளியுறவு மந்திரி ஜெய்சங்கரும் தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு அனுதாபம் வெளியிட்டு இருந்தார்.
இதற்கிடையே தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காகவும், உயிரிழந்தவர்களின் உடலை விரைவில் இந்தியாவுக்கு அனுப்பி வைப்பதற்காகவும் வெளியுறவு இணை மந்திரி கீர்த்திவர்தன் சிங் நேற்று குவைத் விரைந்தார்.
பிரதமர் மோடியின் அறிவுறுத்தலின் பேரில் அவர் புறப்பட்டு சென்றதாக வெளியுறவு அமைச்சகம் கூறியுள்ளது.
தீ விபத்தில் பலியான இந்தியர்களின் குடும்பத்தினருக்கு காங்கிரஸ் கட்சியும் இரங்கல் தெரிவித்து உள்ளது. மேலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து உதவிகளையும் செய்யுமாறு மத்திய அரசையும் கேட்டுக்கொண்டு உள்ளது.
இந்த பயங்கர சம்பவத்தில் உயிரிழந்த இந்தியர்களில் பெரும்பாலானவர்கள் கேரளாவை சேர்ந்தவர்கள் ஆவர். எனவே இந்த மீட்பு மற்றும் நிவாரண பணிகளுக்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வெளியுறவு மந்திரி ஜெய்சங்கருக்கு கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் கடிதம் எழுதியுள்ளார்.
குடும்பம், குழந்தைகளை விட்டுவிட்டு பிழைப்பு தேடி வெளிநாட்டுக்கு சென்ற அப்பாவிகளின் இந்த துயர முடிவு இந்தியா முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
பலி எண்ணிக்கை அதிகரிக்க காரணம் என்ன?
குவைத்அடுக்குமாடி குடியிருப்பில் தீ பிடித்தபோது தொழிலாளர்கள் பலரும் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தனர். கொழுந்து விட்டு எரிந்த தீயின் வெப்பம் மற்றும் புகையால் ஏற்பட்ட முச்சுத்திணறலால் விழித்துக்கொண்ட அவர்கள் வெளியேற வழி தெரியாமல் தடுமாறினர். எனினும் சுதாரித்துக்கொண்டு வெளியேறுவதற்காக கட்டிடத்தின் தரைத்தளத்தை நோக்கி ஓடிய அவர்களுக்கு ஏமாற்றமே கிடைத்தது. ஏனெனில் தரைத்தளங்களில் உள்ள வெளியேறும் வாசல்கள் அனைத்தும் பூட்டப்பட்டு இருந்தன.
இதனால் பதற்றத்தில் அங்கும் இங்கும் ஓடிய அவர்கள் மூச்சுத்திணறல் அதிகரித்து ஆங்காங்கே விழுந்து மடிந்தனர். ஒருசிலர் மாடியில் இருந்து கீழே குதித்தனர். அதிலும் உயிரிழப்புகள் நிகழ்ந்தன. 5-வது மாடியில் இருந்து குதித்த ஒருவர் கீழே வரும்போது மற்றொரு மாடியின் பால்கனி சுவரில் மோதி இறந்து விழுந்ததாக நேரில் பார்த்த ஒருவர் கண்ணீர் மல்க கூறினார்.
சம்பவ இடத்துக்கு தீயணைப்பு வீரர்கள் வந்த பிறகு, அவர்களது வழிகாட்டுதலின்படி பலரும் கட்டிடத்தின் மொட்டை மாடிக்கு சென்று தீ ஜூவாலையில் இருந்தும், புகை மூட்டத்தில் இருந்தும் தங்களை காத்துக்கொண்டதாக உயிர் தப்பியவர்கள் தெரிவித்தனர்.
தீ விபத்தில் பலியானவர்களில் 42 பேர் இந்தியர்கள்
குவைத்தில் நேற்று ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 49 பேர் பலியாகி இருந்தனர். இதில் பெரும்பாலானவர்கள் இந்தியர்கள் என முதற்கட்ட தகவல்கள் வெளியாகி இருந்தன. பின்னர் உயிரிழந்தவர்களை அடையாளம் காணும் பணிகள் நடந்தன. அப்போது பலியானவர்களில் 42 பேர் இந்தியர்கள் என கண்டறியப்பட்டதாக கடைசியாக கிடைத்த தகவல்கள் தெரிவித்தன. மீதமுள்ளவர்கள் பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ், எகிப்து மற்றும் நேபாளத்தை சேர்ந்தவர்கள் ஆவர்.
இந்த விபத்தை தொடர்ந்து பிரதமர் மோடி உயர்மட்டக்குழுவினருடன் அவசர ஆலோசனை நடத்தினார். இதில் வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், வெளியுறவு செயலாளர் வினய் குவாத்ரா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.