“`சாமானியன்’ படத்திற்குத் தயாரிப்பாளர் போதிய விளம்பரம் கொடுக்காததால்தான் படம் சரியாகப் போகவில்லை. எனது சம்பளப் பாக்கியைக்கூட இன்னும் கொடுக்கவில்லை” என்று நடிகர் ராமராஜன், தயாரிப்பாளர் மீது வீசிய குற்றச்சாட்டுக்கள்தான் திரைத்துறையில் பரபரப்பு டாக்.
சமீபத்தில் வெளியான ‘சாமானியன்’ மூலம் 14 ஆண்டுகளுக்குப் பிறகு கம்பேக் கொடுத்திருந்தார் ராமராஜன். படம் வெளியாகி 25-வது நாளை எட்டவிருக்கும் நிலையில், நேற்று தென்காசியில் உள்ள தியேட்டர்களுக்கு விசிட் அடித்துவிட்டு செய்தியாளர்களைச் சந்தித்த ராமராஜன், தயாரிப்பாளர் மீது விமர்சனத்தை வீசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், ‘சாமானியன்’ படத்தின் தயாரிப்பாளரும் நடிகருமான வி.மதியழகனைத் தொடர்புகொண்டு பேசினோம்.
“ராமராஜன் சார் ரொம்ப நல்ல மனிதர்; மனிதநேயர். அவரை எந்த விதத்திலும் நாங்க குறைச்சு மதிப்பிடல. அவர்மேல எந்த விருப்பு வெறுப்பும் கிடையாது. பொதுவா புதுப்படம் ரிலீஸ் ஆனவுடனே நடிகர்கள் தியேட்டர் விசிட் செஞ்சிடுவாங்க. ‘சாமானியன்’ வெளியாகி 20 நாள் ஆகுது. 19-வது நாள்தான் ராமராஜன் சார் தியேட்டர் விசிட் செஞ்சாரு.
‘ஜெயிலர்’ படத்துக்குக்கூட 19-வது நாள்ல கூட்டம் இருக்காது. ஓடிடி தளங்களோட ஆதிக்கத்தால, எப்படிப்பட்ட படமா இருந்தாலும் அதிகபட்சம் ரெண்டு வாரம்தான். ‘சாமானியன்’ ரிலீஸ் ஆனவுடனே, ராமராஜன் சார்கிட்டே ‘வெள்ளி, சனி, ஞாயிறு தியேட்டர் விசிட் போங்கண்ணா’ன்னு ரெக்வெஸ்ட் பண்ணேன். ‘இல்லப்பா… பொறுமையா போறேன்’னார். அதே மாதிரி, இப்போ பொறுமையா போயிருக்கார். 19-வது நாள்ல தியேட்டர் விசிட் செஞ்சா எப்படிக் கூட்டம் இருக்கும்?
இது ராமராஜன் சாரோட தப்பு கிடையாது. அவரது ரசிகர்கள்தான் விளம்பரம் இல்லைங்கிறாங்க. அவரோட ரசிகர்கள் 80-ஸ் கிட்ஸ்கூட இல்லை. 70-ஸ் கிட்ஸ்! இது டிஜிட்டல் யுகமாகிடுச்சுங்கிறதை ரசிகர்கள் புரிஞ்சிக்கணும். அதுவும், அவர் கம்பேக்தான் கொடுத்திருக்கார். தொடர்ந்து படம் நடிப்பது என்பது வேறு. கம்பேக் கொடுப்பது என்பது வேறு. திரைப்படத்தின் வெற்றி தோல்வியை 2கே கிட்ஸுங்கதான் நிர்ணயம் பண்றாங்க.
படத்தோட டீசர் வெளியானப்போவே டைட்டில் எனக்குச் சொந்தம்… கதை எனக்கு சொந்தம்னு சிலர் சண்டைக்கு வந்தாங்க. எவ்ளோ பிரச்னையை சமாளிச்சு படத்தை வெளியிட்டோம்னு எங்களுக்குத்தான் தெரியும். அதேமாதிரி, படத்துக்கு விளம்பரம் இல்லைன்னு ராமராஜன் அண்ணன் சொல்றது தவறான தகவல். புரமோஷனுக்காக இதுவரைக்கும் 75 லட்சம் ரூபாய் செலவு செஞ்சிருக்கோம். அதுக்கான, எல்லா ஆதாரமும் இருக்கு. அவருக்கு எந்த சம்பள பாக்கியும் வெக்கல. அதுக்கும் ஆதாரம் இருக்கு. ராமராஜன் அண்ணன் வைப்பது எல்லாமே தவறான குற்றச்சாட்டு.
அவருக்கு எக்ஸ்ட்ரா பணம் கொடுக்க எங்கக்கிட்ட போதிய நிதி வசதி இல்லை. சிலர் கம்பேக் கொடுக்கும்போது, அவங்களே செலவு செஞ்சுக்கிட்டு வர்றாங்க. ஆனா, முழுக்க முழுக்க படத்துக்கு எங்களோட செலவுதான். 4 கோடியே 75 லட்சத்துக்குப் படத்தை எடுத்து முடிச்சோம். பட வெளியீட்டுக்கு முன்பு தொடர்ந்து ஒருமாசம் விளம்பரம் கொடுத்தோம். அத்தனை பிரஸ்மீட் வெச்சோம். இதுவரைக்கும் விளம்பரத்துக்கு மட்டுமே 75 லட்சம் செலவு பண்ணிருக்கோம். இப்போ மக்களோட ரசனை மாறியிருக்கு.
இப்ப இருக்கற ரசிகர்களுக்கு ராமராஜன் சார் ஒரு புதுமுகம் மாதிரிதான். இதையெல்லாம் மீறித்தான் படத்தை வெற்றியடைய வெச்சிருக்கோம். இப்போவரை, படம் பத்து தியேட்டர்களில் ஓடிக்கிட்டிருக்கு. விளம்பரம் பண்ணாம எப்படி தியேட்டர்ல இருக்கும்? ‘விக்ரம்’ படத்தின் புரமோஷனுக்காக கமல் சார் அவ்ளோ சுற்றுப்பயணம் செஞ்சார். ஏன் பண்ணணும்? இன்னைக்கு மக்களின் ரசனை மாறிடுச்சுங்கிறதை அவரும் புரிஞ்சுக்கிட்டார். ‘சாமானியன்’ 25-வது நாள் நோக்கி வரும்போது எப்படி விளம்பரம் செய்வாங்க? இதை ராமராஜன் அண்ணனும் புரிஞ்சிக்கணும்!” என்று தெரிவித்தார்.