டி20 உலகக்கோப்பை: கட்டாய வெற்றி நெருக்கடியில் இங்கிலாந்து – ஓமனுடன் இன்று மோதல்

ஆன்டிகுவா,

9-வது டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடந்து வருகிறது. இந்த தொடரின் லீக் சுற்று விறுவிறுப்பான கட்டத்துக்கு நகர்ந்துள்ளது. இந்நிலையில் இந்த தொடரில் இன்று நடைபெறும் 28வது லீக் ஆட்டத்தில் ‘பி’ பிரிவில் அங்கம் வகிக்கும் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, குட்டி அணியான ஓமனை ஆன்டிகுவாவில் உள்ள சர் விவியன் ரிச்சர்ட்ஸ் ஸ்டேடியத்தில் சந்திக்கிறது. இந்த ஆட்டம் இந்திய நேரப்படி நள்ளிரவு 12.30 மணிக்கு தொடங்குகிறது.

ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணி தற்போது வரை 2 ஆட்டங்களில் ஆடி (1 ஆட்டம் மழையால் ரத்து, 1 ஆட்டம் தோல்வி) 1 புள்ளியுடன் புள்ளிப்பட்டியலில் 4வது இடத்தில் உள்ளது. இதையடுத்து எஞ்சிய இரு லீக்கில் வென்றால் மட்டும் சூப்பர் 8 சுற்றை பற்றி நினைத்து பார்க்க முடியும் என்ற நிலையில் இன்று ஓமனுடன் மோத உள்ளது.

ஆனால் இந்த ஆட்டத்திற்கும் மழை ஆபத்து இருப்பதாக வானிலை ஆய்வு மையத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒரு வேளை இந்த ஆட்டமும் மழையால் பாதியில் ரத்தானால் இங்கிலாந்தின் சூப்பர் 8 கனவு சிதைந்து விடும். முன்னதாக கிங்ஸ்டனில் இந்திய நேரப்படி இன்று இரவு 8 மணிக்கு நடக்கும் மற்றொரு ஆட்டத்தில் வங்காளதேசம்- நெதர்லாந்து (டி பிரிவு) அணிகள் மோத உள்ளன.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.