சென்னை: தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இதன் காரணமாக தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்று ஓரிரு இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 14, 15 தேதிகளில் ஓரிரு இடங்களிலும், 16, 17 தேதிகளில் ஒருசில இடங்களிலும், 18-ம் தேதி ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இன்று முதல் 16-ம் தேதி வரை தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை வழக்கத்தை விட 5 டிகிரி ஃபாரன்ஹீட் வரை உயர வாய்ப்புள்ளது.
சென்னை, புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் மாலை அல்லது இரவு வேளையில், இடி, மின்னலுடன் கூடிய லேசானது அல்லது மிதமான மழை பெய்யக்கூடும்.
நேற்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நீலகிரி மாட்டம் தேவாலாவில் 4 செமீ, சென்னை மணலி, கத்திவாக்கம், கடலூர் மாவட்டம் வேப்பூர், திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி ஆகிய இடங்களில் தலா 3 செமீ மழை பதிவாகியுள்ளது.
இன்று, தமிழக கடலோரப் பகுதிகள், குமரிக்கடல் பகுதிகள் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 35 முதல் 45 கிமீ வேகத்திலும், இடையிடையே 55 கிமீ வேகத்திலும் வீசக்கூடும். எனவே இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.