தமிழிசையை கண்டித்தாரா அமித் ஷா? – வைரல் வீடியோவும் பின்புலமும்

சென்னை: ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பதவியேற்பு விழா மேடையில் தமிழிசை சவுந்தரராஜனை அமித் ஷா கண்டிப்பதுபோல வெளியாகியுள்ள வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மக்களவை தேர்தலில் தமிழகத்தில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி போட்டியிட்ட 39 தொகுதிகளிலும் தோல்வியடைந்தாலும், சில தொகுதிகளில் அதிமுகவை பின்னுக்கு தள்ளி 2-வது இடத்தை பிடித்துள்ளது.

இந்நிலையில், “தமிழகத்தில் பாஜகவின் வாக்கு சதவீதம் அதிகரித்துள்ளது. 2026 சட்டப்பேரவை தேர்தலிலும் அதிமுகவுடன் கூட்டணி கிடையாது” என்று மாநில தலைவர் அண்ணாமலை பேசியிருந்தார். ஆனால், முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், “அதிமுகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்திருந்தால் பாஜக வெற்றி பெற்றிருக்கும். 2026 தேர்தலிலும் அதிமுகவுடன் கூட்டணி கிடையாது என அண்ணாமலை கூறுவது அவரது கருத்து. இதில் நான் எதுவும் கூற விரும்பவில்லை” என்று தெரிவித்தார்.

இரு முக்கிய தலைவர்கள் மாறி மாறி கருத்து தெரிவித்து வருவது கட்சிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பதவியேற்பு விழா விஜயவாடா அடுத்த கேசரபல்லியில் நேற்று நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, முன்னாள் குடியரசு துணை தலைவர் வெங்கய்ய நாயுடு, தமிழிசை சவுந்தரராஜன்உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியின்போது, மேடையில் தமிழிசை சவுந்தரராஜனை அமித் ஷா கண்டிப்பது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

விழா மேடையில் வெங்கய்ய நாயுடுவும், அமித் ஷாவும் பேசிக்கொண்டு இருக்கின்றனர். அமித் ஷாவுக்கு வணக்கம் சொல்லிவிட்டு தமிழிசை கடந்து செல்லும்போது, அமித் ஷா அவரை அழைத்து கண்டிப்புடன் ஏதோ பேசுவது போன்றும், தமிழிசை கூறுவதை ஏற்க மறுத்து, தான் சொல்வதை கேட்குமாறு அமித் ஷா கூறுவது போன்றும் அந்த வீடியோ காட்சி உள்ளது. இதனால், தமிழக பாஜகவில் உட்கட்சி பூசல் விஸ்வரூபம் எடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இதுதொடர்பாக அண்ணாமலை, தமிழிசை ஆகிய இரு தரப்பிலும் கட்சி தலைமை விளக்கம் கேட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், தமிழக பாஜக செய்தி தொடர்பாளர் ஏஎன்எஸ் பிரசாத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பாஜகவின் பலம், மகத்துவம், தமிழகத்தில் பிரதமர் மோடிக்கு உள்ள செல்வாக்கு ஆகியவற்றை அண்ணாமலை அமைத்த வியூகம்தான் அதிமுகவினருக்கு புரிய வைத்துள்ளது. இதுதான் பாஜகவுக்கு கிடைத்த வெற்றி.

ஆனால் சிலர், பாஜகவுக்கு கிடைத்த இரட்டை இலக்க வாக்கு சதவீத வெற்றியையும், திமுக, அதிமுகவுக்கு மாற்றாக 3-வது கட்சியாக பாஜக உருவெடுத்துள்ள வரலாற்றையும் மறைக்க முயல்கின்றனர். அண்ணாமலையை விமர்சிப்பதாக நினைத்து, “அதிமுகவுடன் கூட்டணி அமைக்காததால்தான் பாஜகவுக்கு ஓரிடம்கூட கிடைக்கவில்லை” என்கின்றனர். அவர்கள் பாஜக தேசிய தலைமையின் முடிவை விமர்சனம் செய்கிறார்கள் என்பதே உண்மை.

பாஜகவுக்கு எப்போதும் இல்லாத வாக்கு சதவீதம் கிடைத்தும், கட்சி தலைமையை பகிரங்கமாக சிலர் விமர்சிக்கின்றனர். இது தவறு என்று அவர்களது மனசாட்சிக்கு தெரிந்தும், ஏதேதோ காரணத்துக்காக எதிர்க்கின்றனர்.

பிரதமர் மோடி சொன்னதுபோல, தமிழகத்தில் பாஜக சரியான திசையில் பயணித்துக் கொண்டிருக்கிறது என்பதை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும். இல்லாவிட்டால், காலம் புரியவைக்கும்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.