வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் பண்பாட்டலுவல்கள் அலகானது வடமாகாணத்தின் ஒவ்வொரு பிரதேச செயலங்களினூடாகவும் கலாசார அபிவிருத்தி செயற்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது.
இச்செயற்திட்டமானது ஐனவரி மாதம் முதல் மே மாதம் வரையான காலப்பகுதியில் பிரதேச செயலகங்களினூடாக நடைபெற்றது.
பண்பாட்டலுவல்கள் அலகினூடாக பிரதேச செயலகங்களுக்கு நிதி விடுவிக்கப்பட்டு கலைஞர் ஊக்குவிப்பு செயற்திட்டங்கள் கலாசார உத்தியோகத்தர் ஊடாக முன்னெடுக்கப்பட்டன.
கலைஞர்களை வலுப்படுத்தும் செயல்திட்டத்தின் முதற்கட்டமாக கலைஞர் ஒன்றுகூடலானது முன்னெடுக்கப்பட்டது.
இவ் ஒன்றுகூடலானது பிரதேச கலைஞர்களின் சங்கமமாய் அமைந்து அவர்களின் குறை, நிறைகளைக் கேட்டறிந்து அது சம்பந்தமான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்;கான களமாக அமைத்து கொடுக்கப்பட்டது.
குறித்த கலைஞர் ஒன்றுகூடலில் அப்பிரதேசத்திற்குரிய முதிய மற்றும் இளம் கலைஞர்கள் பங்குபற்றி அவர்களது திறன், ஆற்றல்களை வெளிப்படுத்தியதுடன் தமது வளர்ச்சி தொடர்பான அனுபவங்களையும் மற்றவர்களுடன் பகிர்ந்து கொண்டனர். குறித்த அனுபவப்பகிர்வானது முன்னேறிவரும் புதிய கலைஞர்களுக்கு ஒரு அறிவுசார் திறனாக காணப்படுகின்றது.
குறித்த செயல்திட்டத்தில் கலாசார உத்தியோகத்தர்கள் தமது பிரதேச செயலகத்துக்குட்பட்ட கலைஞர்களை ஒன்றுதிரட்டி அவர்களை வலுப்படுத்தி வருகின்றனர்.
இதற்கு மேலதிகமாக சில பிரதேச கலைஞர்கள் தமது பிரதேசங்களை விடுத்து ஏனைய பிரதேசங்களுக்கு சென்று அங்கிருந்து இரு பிரதேச கலைஞர்களும் சங்கமித்து தமது திறன்களை வெளிக்கொணர்ந்தனர். இது பிரதேச ரீதியாக அறிவு மற்றும் அனுபவம் சார் விடயங்களை பரிமாறிக் கொள்வதற்கு ஏற்ற தளமாக காணப்பட்டது.
குறித்த கலைஞர் சங்கமம் ஊடாக புதிய திறன் வாய்ந்த கலைஞர்களை அடையாளப்படுத்த கூடியதாக இருந்ததுடன் மருவிவரும் கலைகளை ஏனையோருக்கும் பகிரக்கூடியதாக காணப்பட்டது. இது ஒரு கலைஞர்களுக்கிடையிலான பயிற்சிப்பட்டறை நிகழ்வாக காணப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.