மக்களவைத் தேர்தலில் மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவார் மனைவி சுனேத்ரா பவார் பாராமதி தொகுதியில் போட்டியிட்டார். அத்தொகுதியில் முன்னாள் மத்திய அமைச்சர் சரத் பவார் மகள் சுப்ரியா சுலேயும் போட்டியிட்டார். இதில் சுப்ரியா சுலே வெற்றி பெற்றார். அதோடு சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி 10 தொகுதிகளில் போட்டியிட்டு 8 தொகுதிகளில் வெற்றி பெற்றது. கடந்த பிப்ரவரி மாதம் முன்னாள் மத்திய அமைச்சர் பிரபுல் பட்டேல் தனது ராஜ்ய சபா உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். தேசியவாத காங்கிரஸ் கட்சி உடைந்ததால் அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். அப்பகுதிக்கு இப்போது தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த இடத்திற்கு தேசியவாத காங்கிரஸ் (அஜித் பவார்) கட்சிக்குள் கடும் போட்டி நிலவியது. இப்பதவிக்கு துணை முதல்வர் அஜித் பவார் மகன் பார்த் பவார் போட்டியிட விரும்பினார். இது தவிர மாநில அமைச்சர் சகன் புஜ்பாலும் ராஜ்ய சபா உறுப்பினராக விரும்பினார். |
அவர் மக்களவைத் தேர்தலில் நாசிக் தொகுதியில் போட்டியிட விரும்பினார். ஆனால் அத்தொகுதியை சிவசேனா விட்டுக்கொடுக்கவில்லை. காலியாக இருக்கும் ராஜ்ய சபா உறுப்பினர் பதவிக்கு தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஆனந்த் பராஞ்பே மற்றும் பாபா சித்திக் ஆகியோர் பெயரும் அடிபட்டது.
ஆனால் திடீர் திருப்பமாக இன்று அஜித் பவார் மனைவி சுனேத்ரா பவார் அந்த ஓர் இடத்திற்கு வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். கட்சி கூட்டத்தில் இதற்கு முடிவு எடுக்கப்பட்டது. சமீபத்தில் புனேயில் தேசியவாத காங்கிரஸ் கூட்டத்தில் சுனேத்ரா பவாரை ராஜ்ய சபா உறுப்பினராக்கவேண்டும் என்று கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சுனேத்ரா பவார் ராஜ்ய சபா உறுப்பினர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்திருப்பது சகன் புஜ்பாலுக்கு கடும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. இது தொடர்பாக புஜ்பால் அளித்த பேட்டியில், ”ராஜ்ய சபா தேர்தலில் சுனேத்ரா பவார் போட்டியிடுகிறார். நான் போட்டியிடவேண்டும் என்று விரும்பினேன். ஆனால் கட்சி கூட்டத்தில் சுனேத்ராவின் பெயர் இறுதி செய்யப்பட்டுள்ளது. கட்சி முடிவை அனைவரும் ஏற்றுக்கொள்ளவேண்டும். சில நிர்ப்பந்தங்கள் இருக்கிறது” என்றார்.