விழுப்புரம்: விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான வேட்புமனுதாக்கல் நாளை தொடங்க உள்ள நிலையில் தொகுதியில் உள்ள 275 வாக்குசாவடிகளில் வாக்குகள் பதிவு செய்வதற்காக முதல் கட்ட பரிசோதனை செய்யப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்களை திருக்கோவிலுார் வட்டாட்சியர் அலுவலகத்திலிருந்து தலா 575 பேலட் யூனிட் கண்ட்ரோல் யூனிட், 575 விவி பேடு ஆகிய இயந்திரங்கள் லாரியில் ஏற்றப்பட்டு துப்பாக்கி ஏந்திய போலீஸார் பாதுகாப்புடன் விக்கிரவாண்டி வட்டாட்சியர் அலுவலகத்திற்கு இன்று மாலை 4 மணிக்கு வந்தது.
வாக்குப்பதிவு இயந்திரங்களை தொகுதி உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் சந்திர சேகரன் தலைமையில் வட்டாட்சியர் மற்றும் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் லாரியில் இருந்த சீலை அகற்றி வாக்குப்பதிவு இயந்திரங்களை இறக்கி அலுவலகத்தில் உள்ள ஸ்டிராங் ரூமில் அடுக்கி வைத்தனர். பின்னர் இறக்கி வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் எண்ணி சரிபார்க்கப்பட்டு அனைத்து கட்சியினர் முன்னிலையில் ஸ்டிராங் ரூமிற்கு சீல் வைத்து துப்பாக்கி ஏந்திய போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
முன்னதாக, திருக்கோவிலூர் சட்டப்பேரவை உறுப்பினரான அமைச்சர் பொன்முடி ’ சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்றதால், தனது அமைச்சர் பதவியை இழந்தது மட்டுமின்றி, சட்டப்பேரவை உறுப்பினர் தகுதியையும் இழக்க நேர்ந்தது. இதையடுத்து, கடந்த மார்ச் 5-ம் தேதி திருக்கோவிலூர் தொகுதி காலியானதாக சட்டப்பேரவைச் செயலர் தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் அளித்தார்.
மக்களவைத் தேர்தலுடன் திருக்.கோவிலூர் தொகுதியின் இடைத்தேர்தலும் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டதால், திருக்கோவிலூர் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலுக்குப் பயன்படுத்தும் வகையில், விழுப்புரத்தில் உள்ள தமிழ்நாடு அரசு சேமிப்புக்கிடங்கில் இருப்பு வைக்கப்பட்ட 575 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் திருக்கோவிலூர் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டது. ஆனால் அமைச்சர் பொன்முடிக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கில் சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு, உச்ச நீதிமன்றம் தடை விதித்ததால் , அவர் இழந்த எம்எல்ஏ பதவி மீண்டும் கிடைக்கபெற்றார்.
இதனால் திருக்கோவிலூருக்கு அனுப்பிவைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள், எதிர்பாராதவிதமாக எம் எல் ஏ புகழேந்தி காலமானதால் தற்போது நடைபெறும் இடைத்தேர்தலுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.