“வீண் விளம்பரத்துக்காக கோவையில் விழா எடுக்கிறது திமுக” – அண்ணாமலை விமர்சனம்

கோவை: “கோவையில் திமுக சார்பில் நடத்தப்படும் முப்பெரும் விழா, வீண் விளம்பரத்துக்கு எடுக்கப்படும் விழா” என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கோவையில் ஜூன் 15-ம் தேதி முதல்வர் ஸ்டாலின் தலைமையில் திமுக முப்பெரும் விழா நடத்தவிருப்பதாக அறிந்தேன். முதலில், ஜூன் 14 அன்று நடத்தவிருப்பதாக முடிவு செய்யப்பட்ட இந்த விழா, பண மோசடி வழக்கில், திமுக முன்னாள் இலாகா இல்லாத அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்ட அதே நாள் என்பதால், நாற்பெரும் விழாவாகக் கொண்டாட வேண்டுமோ என்ற பயத்தில், விழாவை ஒருநாள் தள்ளி வைத்திருக்கிறது என்பதையும் அறிந்தேன்.

மின்சாரக் கட்டணத்தைப் பல மடங்கு உயர்த்தியும், நூதன முறையில் கட்டண உயர்வைக் கொண்டு வந்து, கோவை பகுதி குறு, சிறு தொழிற்சாலைகளை முடக்கியும், பொதுமக்கள் வாழ்வாதாரத்தை அழித்தும், ஒரு துறை விடாது அத்தனை தொழில்துறைகளிலும் கமிஷன் என அதிகாரத்தை முழுமையாக துஷ்பிரயோகம் செய்தும், ஸ்மார்ட் சிட்டி திட்டத்துக்கு மத்திய அரசு வழங்கிய நிதியை முறையாகப் பயன்படுத்தாமல் கோவை மாநகரில் சரியான சாலைகள் கூட அமைக்காமல் மூன்று ஆண்டுகளைக் கழித்து விட்டு, இப்போது முப்பெரும் விழா ஒரு கேடா என்பது மக்களின் கேள்வியாக இருக்கிறது.

கல்வியிலும், தொழில்துறையிலும் கோலோச்சிய கோவை, திமுக ஆட்சியில் செயலிழந்து இருக்கிறது. சிறுவாணி நதியும், நொய்யல் நதியும் கவுசிகா நதியும் பாழ்பட்டுக் கிடக்கின்றன. சாலை வசதிகள் மேம்படுத்தவில்லை. குப்பைகள் சரிவர அகற்றப்படுவதில்லை. திமுகவுக்கு, கோவை மக்கள் மீது அக்கறை இருக்குமேயானால் கோவை மக்களின் அறுபது ஆண்டு கனவுத் திட்டமான அத்திக்கடவு அவினாசித் திட்டத்தை நிறைவேற்றியிருக்க வேண்டும்.

கோவை மக்களின் நீண்ட நாள் கோரிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு, தமிழக பாஜக சார்பில் கொடுக்கப்பட்ட தேர்தல் வாக்குறுதிகளில், பத்தில் ஒரு பங்கை திமுக அரசு நிறைவேற்ற முன்வந்தாலே கோவையின் பல ஆண்டு கால ஏக்கம் தீரும். ஆனால், அதை விடுத்து வீண் விளம்பரத்துக்கு விழா எடுப்பதனால், மக்களுக்கு எந்தப் பலனும் கிடைக்கப் போவதில்லை,” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.