சென்னை: வெளி மாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகளுக்கு தமிழகத்தில் தடை விதிக்கப்பட்டிருப்பது தொடர்பாக, ஆம்னி பேருந்து உரிமையாளர்களுடன் போக்குவரத்து துறை இன்று பேச்சுவார்த்தை நடத்துகிறது.
அகில இந்திய சுற்றுலா அனுமதி சீட்டு (ஏஐடிபி) பெற்று இயங்கும் பல ஆம்னி பேருந்துகள், சுற்றுலா பேருந்துபோல இல்லாமல், வழக்கமான பயணியர் பேருந்துபோல் செயல்படுகின்றன. இதனால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது.
இதை கருத்தில் கொண்டு, ‘ஏஐடிபி’ பெற்ற ஆம்னி பேருந்துகளை தமிழகத்தில் மறுபதிவு செய்ய போக்குவரத்து துறை அறிவுறுத்தியது. இதற்காக 3 முறை அவகாசம் வழங்கியும், 652 பேருந்துகளில் 547 பேருந்துகள் ‘டிஎன்’ எனும் வாகன பதிவெண் பெறவில்லை.
எனவே, ஜூன் 14-ம் தேதி (நாளை) நள்ளிரவு முதல் உரிய தமிழக பதிவெண் மற்றும் அனுமதிச் சீட்டு பெறாமல் உள்ள ஆம்னி பேருந்துகள் இயங்க போக்குவரத்து ஆணையர் தடை விதித்தார். வெளி மாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகளை பயணிகள் தவிர்க்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
இதன் தொடர்ச்சியாக, சென்னையில் உள்ள போக்குவரத்து துறை ஆணையரகத்தில், ‘ஏஐடிபி’ ஆம்னி பேருந்துகளின் உரிமையாளர்களுடன் போக்குவரத்து துறை அதிகாரிகள் இன்று பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். இதில், ஆம்னி பேருந்துகள் இயக்கம் தொடர்பாக முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என கூறப்படுகிறது.