15 முக்கிய சட்டங்கள் விரைவில் நிறைவேற்றப்படும்-நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ

எதிர்வரும் சில வாரங்களில் சுமார் 15 மிக முக்கியமான சட்டங்களை நிறைவேற்றுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.

கடந்த 18 மாதங்களில் சுமார் 75 சட்டமூலங்கள் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டு நாட்டுக்குத் தேவையான அடிப்படை மாற்றங்களைச் செய்ய முடிந்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (12) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ இதனைத் தெரிவித்தார்.

இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ,

“நமது நாட்டின் நீதித்துறைக் கட்டமைப்பில், நீதியை நிலைநாட்டுதல் தொடர்பான மிகப்பாரிய சட்ட மறுசீரமைப்புகள் இடம்பெற்ற காலமாக இக்காலகட்டத்தைக் குறிப்பிடலாம். கடந்த 18 மாதங்களில் சுமார் 75 சட்டமூலங்கள் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளன. இது நாட்டில் அடிப்படை மாற்றத்தை ஏற்படுத்த உதவும் என்பதை குறிப்பிட வேண்டும்.

மேலும், அரச துறையிலும், தனியார் துறையிலும் இலஞ்சம், மோசடி, ஊழல், கொமிஸ் எடுத்தல் போன்றவற்றைத் தடுக்கும் வகையில் ஊழல் தடுப்புச் சட்டம் அரசாங்கத்தால் நிறைவேற்றப்பட்டுள்ளன. ஐக்கிய நாடுகள் சபையின் ஊழல் எதிர்ப்பு சாசனத்துடன் பொருந்தும் வகையில் இது தயாரிக்கப்பட்டுள்ளது. அதன்படி இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு பல அதிகாரங்களும் சுதந்திரங்களும் வழங்கப்பட்டுள்ளன. விளையாட்டு மற்றும் பாலியல் இலஞ்சம் தொடர்பாக புதிய குற்றங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதையும் குறிப்பிட வேண்டும்.

மேலும், பெயரளவில் இருந்த சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் தொடர்பான சட்டம் தற்போது நிலையான நிலையை எட்டியுள்ளது. எனவே, நாட்டின் அனைத்து பிரஜைகளும் தமது சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் தொடர்பான அறிக்கைகளை இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்க வேண்டும். அவர்கள் சொத்து பொறுப்பு அறிக்கைகளை தொடர்ந்து கண்காணிக்கிறார்கள். மேலும், வழக்குப் பொருட்கள் மற்றும் போதைப்பொருட்களை அகற்றுவது தொடர்பாக புதிய சட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.

மேலும், குற்றச் செயல்கள் மூலம் பெறப்பட்ட சொத்துக்கள் குறித்து விசாரிக்க அதிகார சபையொன்று அமைக்கப்பட்டுள்ளது.

மேலும், முதன்மை வழக்கு நடவடிக்கை சட்டத்திற்குத் திருத்தம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. திருமணம் தொடர்பான புதிய சட்டமூலமும் முன்வைக்கப்பட்டுள்ளது. மேலும், முஸ்லிம் திருமணம் மற்றும் விவாகரத்து சட்டம் தொடர்பாக பொதுவாக ஏற்றுக்கொள்ளக்கூடிய மாற்றங்களை மாத்திரம் முன்வைத்து அந்த சட்டமூலத்தை திருத்த அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.

மேலும், தற்போது காதி நீதிமன்றம் தொடர்பாக பல பிரச்சினைகள் எழுந்துள்ளன. அதன்படி, இரண்டு மாற்றங்களைச் செய்ய முன்மொழியப்பட்டுள்ளது. அதேபோன்று, வெளிநாட்டு நீதிமன்ற தீர்ப்புகளை கையாளும் வெளிநாட்டு நீதிமன்ற தீர்ப்புகளை செயல்படுத்துவதற்கான வரைவு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும் அடுத்த சில வாரங்களில் சுமார் 15 மிக முக்கியமான சட்டங்களை நிறைவேற்றுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. குற்றவியல் நடைமுறைச் சட்டத்திலும் பல திருத்தங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. மேலும், அண்மையில் நிறைவேற்றப்பட்ட நீரியல் சட்டத்தை அடுத்த ஆண்டு அமுல்படுத்தலாம். இதன்மூலம் இந்நாட்டின் கடல் எல்லைகள் வழியாக பயணிக்கும் கப்பல்கள் மூலம் 50 மில்லியன் டொலர்களுக்கு மேல் வருமானத்தைப் பெற்றுக்கொள்ள முடியும்.” என அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.