2025-க்குள் குழந்தை தொழிலாளர் இல்லாத தமிழ்நாடு: தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வெ.கணேசன் உறுதி

சென்னை: வரும் 2025-ம் ஆண்டுக்குள் குழந்தை தொழிலாளர் இல்லாத தமிழ்நாடு உருவாகும் என அமைச்சர் சி.வெ.கணேசன் தெரிவித்தார்.

குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12-ம் தேதி உலகம் முழுவதும் கடைபிடிக்கப்படுகிறது. இதுதொடர்பான நிகழ்ச்சி சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக விழா அரங்கத்தில் நேற்று நடந்தது.

இந்நிகழ்ச்சிக்கு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வெ.கணேசன் தலைமை தாங்கி, விழிப்புணர்வு நிகழ்ச்சி, பேரணியைத் தொடங்கி வைத்தார். பின்னர், குழந்தை தொழிலாளர் முறைக்கு எதிரான கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தார்.

அதைத்தொடர்ந்து, குழந்தை தொழிலாளர் முறைக்கு எதிராக அமைச்சர் தலைமையில் உறுதிமொழி எடுக்கப்பட்டு, குழந்தைத் தொழிலாளர் முறை அகற்றுதல் குறித்தான விழிப்புணர்வு குறும்படமும் வெளியிடப்பட்டது.

பின்னர், குழந்தை தொழிலாளர் முறையிலிருந்து மீட்கப்பட்டவர்கள் தங்களது அனுபவங்களைப் பகிர்ந்தனர்.

இந்நிகழ்ச்சியில், அமைச்சர் பேசும்போது, ‘குழந்தைகள் பள்ளிக்குச் செல்வதை ஊக்குவிக்கும் வகையிலும் பெற்றோரின் சிரமங்களைக் குறைக்கும் வகையிலும், காலை உணவுத்திட்டம், நான் முதல்வன் திட்டம், முட்டையுடன் கூடிய சத்தான மதிய உணவு, பள்ளி மாணவர்களுக்கு இலவச பேருந்து வசதி திட்டம் போன்றவற்றை மாணவர்களுக்கு வழங்கி முதல்வர் ஸ்டாலின் பெருமை சேர்த்துள்ளார்.

கல்லூரி மாணவிகள் பயன்பெறும் வகையில் புதுமைப் பெண் திட்டத்தின் கீழ் மாதம்தோறும் ரூ.1000 வழங்கி வருகிறார். அதேபோல், கல்லூரி மாணவர்கள் பயன்பெறும் வகையில் புதிய திட்டம் ஒன்றும் விரைவில் நடைமுறைக்கு வரவுள்ளது. 2025-ம் ஆண்டுக்குள் குழந்தை தொழிலாளர் இல்லாத தமிழ்நாட்டினை உருவாக்க அனைவரும் ஒன்றுபட்டு செயல்படுவோம்’ என்றார்.

இந்நிகழ்ச்சியில், தமிழ்நாடு அரசு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை செயலாளர் குமார் ஜெயந்த், தொழிலாளர் ஆணையர் அதுல் ஆனந்த்,இயக்குநர் மு.வே.செந்தில் குமார் தொழிலாளர் துறை உயர்அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.