அமராவதி: இந்திய அரசியல் வரலாற்றில் தொலைநோக்கு பார்வை கொண்ட அரசியல்வாதிகள் சிலரில் சந்திரபாபு நாயுடுவும் ஒருவர். தகவல் தொழில்நுட்ப முன்னேற்றத்தை உடனுக்குடன் அமல்படுத்தும் அரசியல் தலைவர். ஒருங்கிணைந்த ஆந்திராவில் ஐ.டி. துறையை முடுக்கி விட்டவர்.
திருப்பதி அருகே நாராவாரி பல்லி எனும் சிறிய கிராமத்தில் பிறந்தவர் சந்திரபாபு. கடந்த 1975-ல்காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். அவசரநிலை காலத்தில் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியின் மகன் சஞ்சய் காந்திக்கு ஆதரவு தெரிவித்தார்.
சந்திரபாபுவின் ஆற்றலை கண்டு அவரை 1978-ல் திருப்பதி அருகே உள்ள சந்திரகிரி தொகுதி வேட்பாளராக காங்கிரஸ் களம்இறக்கியது. இங்கு வெற்றிபெற்று தனது 28-வது வயதில் எம்எல்ஏ ஆனார் சந்திரபாபு. பிறகு 30 வயதில் அஞ்சய்யா ஆட்சியில் அமைச்சரானார். 1980-83 ஆண்டுகளுக்கு இடையில் சினிமா வளர்ச்சி துறை மற்றும் நீர்வளத்துறை அமைச்சராக பணியாற்றினார். அப்போது தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டார் என்.டி.ராமாராவுடன் இவருக்கு பழக்கம் ஏற்படுகிறது. சந்திரபாபுவின் நல்ல பண்புகள், அரசியல் திறமையை கண்டு தனது 2-வது மகள் புவனேஸ்வரியை சந்திரபாபுவுக்கு திருமணம் செய்து கொடுக்கிறார் என்.டி.ராமாராவ்.
1983-ல் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக தெலுங்கு தேசம் எனும்புதிய கட்சியை தொடங்கினார் ராமாராவ். இதில் சந்திரபாபு இணையவில்லை. மாறாக தனது மாமனாரின் கட்சிக்கு எதிராக சந்திரகிரியில் காங்கிரஸ் வேட்பாளாராக போட்டியிட்டு தோல்வி அடைந்தார். இதையடுத்து தனது மாமனாரின் தெலுங்கு தேசம் கட்சியில் இணைந்தார் சந்திரபாபு.
1984-ல் என்டிஆர் ஆட்சியை அமைச்சர் பாஸ்கர் ராவ் குறுக்கு வழியில் கவிழ்த்து முதல்வரான போது, என்டிஆருக்கு உறுதுணையாக இருந்து கட்சியை சந்திரபாபு வழிநடத்தினார். இதனால் 1986-ல்தெலுங்கு தேசம் கட்சியின் பொதுச் செயலாளரானார்.
1989 தேர்தலில் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைத்தது. இத்தேர்தலில் குப்பம் தொகுதியிலிருந்து எம்எல்ஏவான சந்திரபாபு எதிர்க்கட்சித் தலைவரானார். பிறகு 1994-ல்நடந்த தேர்தலில் மீண்டும் தெலுங்கு தேசம் ஆட்சியை பிடித்தது. அப்போது சந்திரபாபு நாயுடு நிதித்துறை, வருவாய் துறை அமைச்சராக பொறுப்பேற்றார்.
இந்த சமயத்தில் என்.டி.ஆர் திடீரென லட்சுமி பார்வதியை திருமணம் செய்து கொண்டதாக அறிவிக்கிறார். இதனால் கட்சியில் பிளவு ஏற்படுகிறது. அப்போது என்டிஆரை எதிர்த்து கட்சிப் பொறுப்பை ஏற்ற சந்திரபாபு, 1995-ம் ஆண்டு செப்டம்பர் 1-ம் தேதி தனது 45-வது வயதில் ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலத்தின் முதல்வரானார்.
அடுத்த ஆண்டு என்.டி.ராமராவ் மாரடைப்பால் காலமானார். இதனால் சந்திரபாபு நாயுடுவின் கையில் தெலுங்கு தேசம் கட்சி முழுமையாக வந்தது. 1999-ல் 2-வது முறையாக ஆந்திர முதல்வராக பதவியேற்றார் சந்திரபாபு.
2004 முதல் 2014 வரை சந்திரபாபு எதிர்க்கட்சி தலைவராகவே இருந்தார். 2014-ல் ஆந்திரா, தெலங்கானா என 2 மாநிலங்களாக அறிவித்தது மத்தியில் இருந்த காங்கிரஸ் அரசு. இதையடுத்து 2019 தேர்தலில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் 151 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. ஜெகன் முதல்வராக, சந்திரபாபு மீண்டும் எதிர்க்கட்சி தலைவரானார்.
தற்போது தெலுங்கு தேசம் கூட்டணி அமோக வெற்றி பெற்றது. 46 ஆண்டுகால அரசியல் அனுபவம் கொண்ட முற்போக்கு சிந்தனையாளரான சந்திரபாபு நாயுடு ஆந்திர முதல்வராக 4-வது முறையாக பதவியேற்றார். இம்முறை 16 எம்.பி.க்களை கொண்ட தெலுங்கு தேசம் கட்சி, மத்தியில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்று, மோடி அரசுக்கும் உறுதுணையாக நிற்கிறது.