தமிழ் சினிமாவின் இளமை துள்ளும் இசையமைப்பாளர்களில் முக்கியமானவர் அனிருத். மிகச் சிறிய வயதிலேயே வெற்றியை எட்டிப் பிடித்தவர்.
இளைஞர்களின் பல்ஸ் பிடித்து மியூசிக் போடும் அனிருத் தமிழில் மட்டுமல்ல, இந்தியாவிலேயே முக்கிய இசையமைப்பாளர்களில் ஒருவராகத் திகழ்கிறார். ‘இந்தியன் 2’-வைத் தொடர்ந்து, ரஜினியின் ‘வேட்டையன்’, ‘கூலி’, அஜித்தின் ‘விடாமுயற்சி’, சிவகார்த்திகேயன், பிரதீப், கவீன் உள்ளிட்டவர்களின் அடுத்த படங்கள் போன்றவற்றுக்கும் இசையமைக்கிறார். இப்படி சினிமா உலகில் ராக்ஸ்டாராக திகழும் அனிருத் தற்போது தொழில்துறையிலும் கால் பதித்திருக்கிறார்.
இதற்காகப் பிரபல நிறுவனம் ஒன்றில் முதலீடு செய்திருக்கிறார். அதாவது வி.எஸ்.மணி & கோ (VS Mani & Co) என்ற ஃபில்டர் காபி ஸ்டார்ட்அப் நிறுவனத்தில் இணைந்து முதலீடு செய்திருக்கிறார். வி.எஸ்.மணி & கோ நிறுவனத்தில் இணைந்துள்ள அனிருத், இணை-நிறுவனராகவும் பிராண்ட் அம்பாசிடராகவும் பணியாற்றுவார் என்று கூறப்படுகிறது. இந்த ஸ்டார்ட்அப் நிறுவனம் சமூக வலைதளங்கள் மற்றும் இசை நிகழ்ச்சிகள் மூலம், குறிப்பாகத் தென்னிந்தியாவில் உள்ள இளைய தலைமுறை நுகர்வோர்களைச் சென்றடைவதை முக்கிய இலக்காக வைத்துள்ளது.
இந்த நிறுவனம் ஜி.டி. பிரசாத், யஷாஸ் அலூர் மற்றும் ராகுல் பஜாஜ் ஆகியோரால் தொடங்கப்பட்டது. காபியுடன் ஸ்நாக்ஸ் வகைகளையும் விற்பனை செய்கிறது.
வி.எஸ்.மணி & கோ நிறுவனத்தின் மொத்த விற்பனை வருவாயில் 60 சதவிகிதம் Amazon, Zepto, Blinkit போன்றவை மூலமாகவும், மீதமுள்ள 40 சதவிகிதம் ரீடைல் கடைகளிலிருந்தும் பெறுகிறது. பெங்களூருவைத் தலைமையிடமாகக் கொண்ட இந்த நிறுவனம் சமீபத்தில்தான் தமிழ்நாடு, கர்நாடகா இரு மாநிலங்களிலும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகளுடன் இணைந்து வர்த்தகத்தை விரிவாக்கம் செய்ய ஆரம்பித்திருக்கிறது. அனிருத் மட்டுமின்றி, ராணா டகுபதி, ரன்பீர் கபூர், ஹுமா குரேஷி எனப் பல பிரபலங்களும் இந்த நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.