கர்நாடக மாநிலம், பெங்களூருவில் காமாட்சி பாளையா சாலையோரத்தில் ஜூன் 9-ம் தேதி காலை இளைஞரின் சடலம் கண்டெடுக்கப்பட்ட விவகாரத்தில் அடுத்தடுத்து வெளிவரும் தகவல்கள் கன்னட திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. முதலில், இந்த சடலமானது காமாட்சி பாளையாவிலுள்ள வினய் கவுடா என்பவரின் வீட்டிலிருந்து கிளம்பிய காரிலிருந்து வீசப்பட்டிருப்பது அப்பகுதி சிசிடிவி காட்சிகள் மூலம் தெரியவந்திருக்கிறது.
முதற்கட்ட விசாரணையில், சடலமாகக் கிடந்த இளைஞர் ரேணுகா சுவாமி (30) என்றும், மருந்தகத்தில் வேலைபார்த்துவந்த இவருக்குத் திருமணமாகி ஓராண்டாகும் நிலையில், இவர் பஜ்ரங் தள் மற்றும் கன்னட நடிகர் தர்ஷன் ரசிகர் மன்றத்தில் உறுப்பினராக இருந்தார் என்றும் தெரியவந்தது. இதற்கிடையில், பணம் கொடுக்கல் வாங்கல் விவகாரத்தில் கொலைசெய்ததாக மூன்று பேர் போலீஸில் சரணடைந்தனர். ஆனால், இதற்குப் பின்னால் பெரிய சதி இருப்பதாகச் சந்தேகித்த போலீஸார் மேலும் விசாரணை நடத்தியதில் கன்னட நடிகர் தர்ஷன் மற்றும் கன்னட நடிகை பவித்ரா ஆகியோர் இதில் சம்பந்தப்பட்டிருப்பதாகத் திடுக்கிடும் தகவல் வெளிவந்தது.
நடிகர் தர்ஷனுக்கும், விஜயலட்சுமி என்பவருக்கும் திருமணமாகி 20 வருடங்களுக்கு மேல் ஆகிறது. இவர்களுக்கு விக்னேஷ் என்ற மகனும் இருக்கிறார். அதேசமயம், தர்ஷன் தன்னை தாக்கியதாகவும், தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் மனைவி விஜயலட்சுமி கொடுத்த வழக்கும் நிலுவையிலிருக்கிறது.
மறுபக்கம், நடிகை பவித்ரா 2016-ல் 54321 என்ற திரைப்படத்தில் அறிமுகமானார். திரைப்படங்கள், தொலைக்காட்சியில் பணியாற்றியிருக்கும் இவர் மாடலாகவும் இருக்கிறார். இவருக்கு, ஏற்கெனவே சஞ்சய் சிங் என்பவருடன் திருமணமாகி இருவருக்கும் ஒரு மகள் இருக்கிறார். இருப்பினும், இருவரும் விவாகரத்து பெற்று தனித்தனியாக வாழ்ந்துவருகின்றனர்.
இப்படியிருக்க, இந்த மாத தொடக்கத்தில் பவித்ரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தர்ஷனுடன் இருக்கும் படத்தைப் பதிவிட்டு, இருவரும் 10 ஆண்டுகளாக ரிலேஷன்ஷிப்பில் இருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார். இது கன்னட சினிமா வட்டாரங்களில் பேசுபொருளாகவே, தர்ஷனின் ரசிகர் ரேணுகா சுவாமி பவித்ராவுக்கு இன்ஸ்டாகிராமில், தர்ஷனும், விஜயலட்சுமியும் சேர்ந்து வாழும்படி அவரை விட்டு விலகும்படி மெசேஜ் செய்திருக்கிறார். மேலும், பவித்தராவுக்கு அவர் ஆபாசமாக மெசேஜ் செய்ததாகவும் கூறப்படுகிறது.
பின்னர், இது தொடர்பாக பவித்ரா தர்ஷனிடம் கூற, தர்ஷனோ ரேணுகா சுவாமி உறுப்பினராக இருக்கும் தன்னுடைய ரசிகர் மன்றத்தின் தலைவரைத் தொடர்புகொண்டு அவரை அழைத்துவருமாறு கூறியிருக்கிறார். அதன்படி, தர்ஷனின் நண்பர் வினய் குமார் வீட்டுக்கு அழைத்துவரப்பட்ட ரேணுகா சுவாமி கடுமையாகத் தாக்கி கொலைசெய்யப்பட்டிருக்கிறார். இதனை தர்ஷனின் உத்தரவின்பேரில் செய்ததாக போலீஸில் சரணடைந்த மூன்று பேர் தெரிவித்திருக்கின்றனர்.
அதைத் தொடர்ந்து, போலீஸார் தற்போது தர்ஷன், பவித்ரா உட்பட 13 பேரை கைதுசெய்து விசாரித்து வருகின்றனர். அதோடு, ரேணுகா சுவாமியைக் கொலைசெய்ய ஆளுக்கு ஐந்து லட்சம் ரூபாய் தருவதாக சரணடைந்த மூன்று பேரிடமும் தர்ஷன் கூறியதை போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும், இதில் தீவிர விசாரணை நடத்தி உண்மையை வெளிகொண்டுவருவோம் எனவும், குற்றவாளிகள் சட்டத்தின்படி இரக்கமின்றி தண்டிக்கப்பட வேண்டும் எனவும் போலீஸ் கமிஷனர் பி.தயானந்தா தெரிவித்திருக்கிறார். இன்னொருபக்கம், தர்ஷன் மற்றும் குற்றம்சாட்டப்பட்டவர்கள்மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு முழு சுதந்திரம் அளிக்கப்பட்டிருப்பதாக மாநில உள்துறை அமைச்சர் ஜி.பரமேஸ்வரா கூறியிருக்கிறார்.