அமெரிக்காவில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு அறக்கட்டளையின் பொன்விழாவில், காணொலி வாயிலாக கலந்துகொண்ட ரஜினிகாந்த் சில விஷயங்களைப் பகிர்ந்திருக்கிறார்.
அதிலும் குறிப்பாக இசைஞானி இளையராஜா குறித்தும் உலக நாயகன் கமல் ஹாசன் குறித்தும் ரஜினிகாந்த் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அவர் கமல்ஹாசனுக்குத்தான் அதிகமான ஹிட் பாடல்களைக் கொடுத்திருக்கிறார். எனக்கு அவ்வளவாக ஹிட் பாடல்களைக் கொடுக்க மாட்டார். முதலில் கொடுத்துக் கொண்டுதான் இருந்தார் அதாவது, 70களில் ‘பொதுவாக என் மனசு தங்கம்’ ‘ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும்’ உள்ளிட்ட பல பாடல்களைக் கொடுத்தார்.

ஆனால், அதன் பின்னர் அவர் கொடி அப்படியே கமலின் பக்கம் சென்று விட்டது. கமலின் ‘தேவர் மகன்’ ‘நாயகன்’ உள்ளிட்ட படங்களுக்கெல்லாம், அவர் சூப்பரான பாடல்களைப் போட்டுக் கொடுத்திருக்கிறார். அதற்கு கமலும் ஒரு காரணம். கமல் அடுத்தடுத்த படைப்புகளை வித்தியாச, வித்தியாசமாக செய்திருந்தார்” என்று ஜாலியாக சிரித்துக்கொண்டே கூறியிருக்கிறார். அந்த நிகழ்ச்சியில் இளையராஜா இசைநிகழ்ச்சி நடத்திக்கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து அந்நிகழ்ச்சியில் காணொலி வாயிலாக பேசிய ரஜினிகாந்த், “இந்தியாவின் இதயம் என்றால் மும்பை என்று சொல்வார்கள். பொருளாதார தலைநகரம் என்றால் அது மும்பை. அங்கே அம்பானி, டாடா ஆகியோருடன் நெருங்கிப் பழகும் சந்தர்ப்பங்கள் எனக்கு கிடைத்துள்ளன. அரசியல் தலைநகரம் என்றால் அது டெல்லி. டெல்லி என்று சொன்னால், பிரதமர் வாஜ்பாய் முதல் மோடி வரை அவர்கள் அருகே அமர்ந்து டிபன் சாப்பிட்டு பேசும் வாய்ப்பு எனக்கு கிடைத்திருக்கிறது.

இந்த இரண்டு இடங்களிலும் டாடா ஆகட்டும், அம்பானியாகட்டும், அமைச்சர்கள் ஆகட்டும் இவர்களின் தனிப்பட்ட மேனேஜனர்கள், ஆலோசகர்களில் 70-75 சதவிகிதம் பேர் தமிழ் மக்களாக தான் இருக்கிறார்கள். இந்த நிலையில் இது தொடர்பாக அவர்களிடமே நான் கேட்டேன். அப்போது அவர்கள் தமிழர்கள் புத்திசாலிகள், நன்றாக உழைப்பவர்கள், நன்றி குணம் உடையவர்கள், நாணயமாக இருப்பார்கள் என்று கூறினார்கள். அப்படிப்பட்ட குணம் தமிழர்களுடையது. அதனால்தான் அவர்கள் எங்கு சென்றாலும், சந்தோஷமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறார்கள்” என்று கூறியிருக்கிறார்.