`அவரையும் குதிக்க சொல்லிருக்கிறார்கள்; ஆனால்..!’ – குவைத் தீ விபத்தில் உயிரிழந்த தூத்துக்குடி நபர்

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகேயுள்ள வானரமுட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் மாரியப்பன். இவர் கடந்த 20 ஆண்டுகளாக குவைத் நாட்டில் உள்ள பல் பொருள் அங்காடி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். குவைத்தின் மங்கஃப் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு இரண்டாவது தளத்தில் அவரின் நிறுவனம் ஒதுக்கித் தந்த அறையில் தங்கியிருந்து வேலைக்கு சென்று வந்தார். இந்த நிலையில், அந்த அடுக்குமாடி குடியிருப்பில் கடந்த 12-ம் தேதி அதிகாலை 6வது மாடியில் உள்ள வீட்டின் சமையலறையில் திடீரென தீப்பிடித்தது.

குவைத் தீ விபத்து

இதனால் பெரும் புகை ஏற்பட்டு குடியிருப்பின் பிற பகுதிகளுக்கும் பரவியது. இந்த விபத்தில் குடியிருப்பில் வசித்த 49 பேர் வரை உயிரிழந்துவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இவர்களில் பெரும்பாலானோர் இந்தியர்கள். அவர்கள் தமிழகம், கேரளா மற்றும் வட இந்தியாவைச் சேர்ந்தவர்கள் என தெரிய வந்துள்ளது. இந்த தீ விபத்தில் சிக்கி கோவில்பட்டி அருகே வானரமுட்டியை சேர்ந்த மாரியப்பன் காயமடைந்தார். அவருக்கு அங்குள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர்  உயிரிழந்தார்.

மாரியப்பன் உயிரிழந்தது குறித்து அவரது குடும்பத்தினருக்கு, அங்குள்ள உறவினர் செல்போன் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டது.   இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த மாரியப்பனின் குடும்பத்தினர் கதறி அழுதனர். மாரியப்பன் உயிரிழந்த தகவல் வானரமுட்டி கிராம மக்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.  உயிரிழந்த மாரியப்பனுக்கு கற்பகவள்ளி என்ற மனைவியும், விமலா என்ற மகளும், கதிர் நிலவன் என்ற மகனும் உள்ளனர்.  இதற்கிடையே, மாரியப்பனின் மரண செய்தியால் மனைவி கற்பகவள்ளிக்கு திடீரென உடல்நிலை குறைவு ஏற்பட்டது.  

உயிரிழந்த மாரியப்பன்

இது குறித்து மாரியப்பனின் தாய் வீரம்மாள், “எனது மகன் மாரியப்பன் மார்ச் 8-ம் தேதி புறப்பட்டு ஊருக்கு வந்தார். 15 நாள்கள் ஊரில் தங்கியிருந்துவிட்டு மீண்டும் குவைத்திற்குச்  சென்றார். சம்பவத்தன்று காலை எனக்கு மாரியப்பன் செல்போனில் பேசினார். குழந்தைகள் பள்ளிக்கு சென்றுவிட்டார்களா? என கேட்டார். பின்னர் நாளை கூப்பிடுகிறேன் என கூறினார். நாங்களும் அவரது செல்போனில் தொடர்பு கொண்டுடோம். ஆனால், அவர் எடுக்கவில்லை. 

தீ விபத்து குறித்து எங்களுக்குத் தெரியவந்ததும் நாங்கள், அங்குள்ள எங்களது உறவினர்களை தொடர்பு கொண்டோம். அதற்கு அவர்கள், ”மாரியப்பனை நாங்கள் குதிக்கும்படி கூறினோம். ஆனால், அவர் படிகள் வழியாக இறங்கி வருவதாகச் சொன்னார்.  பின்னர் மாரியப்பன் காயமடைந்து சிகிச்சையில் உள்ளார்’ என்றனர். இப்போது இறந்து விட்டதாக கூறுகின்றனர். இந்த வீட்டை கூட அவர் உழைத்துதான் கட்டினார். அவர் இறந்தது தாங்க முடியாத அதிர்ச்சியாக உள்ளது” என்றார்.  

“வானரமுட்டியை சேர்ந்த ஏராளமானோர் குவைத் நாட்டில் பல்வேறு பணிகளில் உள்ளனர். இதில், இறந்த மாரியப்பனுடன் இதேபகுதியைச் சேர்ந்த முருகன் என்பவர் தங்கியிருந்தார். தீ விபத்து ஏற்பட்டவுடன் முருகன் மாடியில் இருந்து குதித்து உயிர் தப்பியுள்ளார். இதில் அவருக்கு காலில் காயம் ஏற்பட்டது. மாரியப்பனையும் குதிக்க கூறியுள்ளனர்.

குவைத் தீ விபத்து

அவருக்கு சில ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட விபத்தில் காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டதால், அவர் குதிக்க மறுத்து மாடிப்படிகள் வழியாக இறங்க முயன்றார். அதற்குள் தீயும், புகையும் அதிகமாக பரவவே அவர் காயமடைந்து, சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.” என்றனர் அவரின் உறவினர்கள்.

இறந்தவர்களின் உடல்கள் விமான படைக்கு சொந்தமான விமானம் மூலம் கேரள மாநிலம் கொச்சி கொண்டுவரப்பட்டுள்ளது. அங்கிருந்து ஒவ்வொருவரின் சொந்த ஊர்களுக்கு அனுப்பிவைக்கப்படும் எனத் தெரிகிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.