ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி இன்று தொடக்கம்: முதல் ஆட்டத்தில் ஜெர்மனி- ஸ்காட்லாந்து மோதல்

முனிச்,

சர்வதேச கால்பந்தில் உலகக் கோப்பைக்கு அடுத்து மிகப்பெரிய போட்டியான ஐரோப்பிய சாம்பியன்ஷிப் (யூரோ) 1960-ல் இருந்து 4 ஆண்டுக்கு ஒரு முறை நடத்தப்படுகிறது. ஐரோப்பிய கண்டத்தை சேர்ந்த அணிகள் ஒருசேர அணிவகுக்கும் இந்த கால்பந்து போட்டியில் அதிகபட்சமாக ஜெர்மனி, ஸ்பெயின் தலா 3 முறை மகுடம் சூடியுள்ளன.

கடைசியாக கொரோனாவால் ஓராண்டு தள்ளிவைக்கப்பட்டு 2021-ம் ஆண்டில் நடந்த ஐரோப்பிய சாம்பியன்ஷிப்பில் இத்தாலி அணி பெனால்டி ஷூட்-அவுட்டில் இங்கிலாந்தை சாய்த்து கோப்பையை வென்று இருந்தது. இந்த நிலையில் 17-வது ஐரோப்பிய கால்பந்து போட்டி ஜெர்மனியில் இன்று தொடங்குகிறது. இதில் 24 அணிகள் பங்கேற்கின்றன. அவை 6 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.

இதன்படி ‘ஏ’ பிரிவில் ஜெர்மனி, ஸ்காட்லாந்து, ஹங்கேரி, சுவிட்சர்லாந்து, ‘பி’ பிரிவில் ஸ்பெயின், குரோஷியா, இத்தாலி, அல்பேனியா, ‘சி’ பிரிவில் சுலோவேனியா, டென்மார்க், செர்பியா, இங்கிலாந்து, ‘டி’ பிரிவில் போலந்து, நெதர்லாந்து, ஆஸ்திரியா, பிரான்ஸ், ‘இ’ பிரிவில் பெல்ஜியம், சுலோவக்கியா, ருமேனியா, உக்ரைன், ‘எப்’ பிரிவில் துருக்கி, ஜார்ஜியா, போர்ச்சுகல், செக்குடியரசு ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும்.

லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் டாப்-2 அணிகள் மற்றும் 3-வது இடத்தை பிடிக்கும் சிறந்த 4 அணிகள் என்று மொத்தம் 16 அணிகள் ‘நாக்-அவுட்’ சுற்றுக்கு முன்னேறும். ஜெர்மனியில் மொத்தம் 10 இடங்களில் போட்டி நடக்கிறது. இறுதிப்போட்டி ஜூலை 14-ந் தேதி பெர்லினில் அரங்கேறுகிறது.

முதல் நாளான இன்று உலக தரவரிசையில் 16-வது இடம் வகிக்கும் ஜெர்மனி, 39-ம் நிலை அணியான ஸ்காட்லாந்தை (ஏ பிரிவு) முனிச் நகரில் சந்திக்கிறது. இவ்விரு அணிகளும் இதுவரை 17 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 8-ல் ஜெர்மனியும், 4-ல் ஸ்காட்லாந்தும் வெற்றி பெற்றன. 5 ஆட்டம் டிராவில் முடிந்தது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.