புதுடெல்லி: குவைத் நாட்டில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உட்பட 45 இந்தியர்களின் உடல்களுடன் இந்திய விமானப் படை விமானம் மூலம் தாயகம் கொண்டுவரப்படுகிறது. இந்த விமானம் இன்று (வெள்ளி) காலை 11 மணியளவில் கேரள மாநிலம் கொச்சி சர்வதேச விமான நிலையம் வந்தடைகிறது
இதனை மத்திய இணை அமைச்சர் கீர்த்தி வர்தன் சிங் தனது எக்ஸ் சமூகவலைதளப் பதிவு மூலம் உறுதி செய்துள்ளார். இந்திய விமானப் படை விமானத்தில் சென்ற அமைச்சர் அங்கிருந்து விபத்தில் உயிரிழந்த இந்தியர்களின் உடல்களைப் பெற்று அனுப்பிவைத்துள்ளார்.
விமானம் கொச்சின் சர்வதேச விமான நிலையத்துக்கு வரவுள்ள நிலையில் அங்கு காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். சடலங்களைக் கொண்டு செல்ல ஏதுவாக ஆம்புலன்ஸ்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
கொச்சியில் இருந்து தமிழ்நாடு, ஆந்திரா, பிஹார் உள்ளிட்ட மாநிலங்களுக்கு அம்மாநில அரசு அதிகாரிகளின் ஏற்பாட்டில் உயிரிழந்தோர் உடல்கள் கொண்டு செல்லப்படுகிறது. அவரவர் சொந்த ஊர்களில் நல்லடக்கம் செய்ய ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
கொச்சி விரைந்த செஞ்சி மஸ்தான்: இந்நிலையில் தீ விபத்தில் பலியான தமிழகத்தைச் சேர்ந்த சென்னை ராயபுரத்தைச் சேர்ந்த சிவசங்கரன் கோவிந்தன், கடலூரைச் சேர்ந்த சின்னத்துரை கிருஷ்ணமூர்த்தி, திண்டிவனத்தைச் சேர்ந்த முகமது ஷெரீப், தூத்துக்குடியைச் சேர்ந்த வீரசாமி மாரியப்பன், ராமநாதபுரத்தைச் சேர்ந்த கருப்பன் ராமு, திருச்சியைச் சேர்ந்த ராஜு எபநேசன், பேராவூரணியைச் சேர்ந்த ரிச்சர்ட் ராய் ஆகியோரின் உடல்கள் கொச்சி கொண்டுவரப்படுகிறது.
அவர்களின் உடல்களை பெற்றுக் கொள்வதற்காக தமிழ்நாடு அயலக தொழிலாளர்கள் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் கொச்சி விரைந்துள்ளார். கொச்சியில் இந்திய விமானப்படை சிறப்பு விமான மூலம் கொண்டு வரப்படும் 7 தமிழர்களின் உடல்களை தமிழ்நாடு அரசு சார்பில் அவர் பெற்றுக் கொள்கிறார். இதனையடுத்து 7 பேரின் உடல்களும் ஏழு வாகனங்களில் அவரவர் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.
நடந்தது என்ன? வளைகுடா நாடுகளில் ஒன்றான குவைத்தின் தெற்கு பகுதியில் உள்ள மங்காஃப் நகரில் 7 தளங்கள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பில் வெளிநாட்டு தொழிலாளர்கள் 196 பேர் தங்கியிருந்தனர். ஒரே நிறுவனத்தை சேர்ந்த இவர்களில் பெரும்பாலானோர் இந்தியர்கள்.
இந்த குடியிருப்பில் உள்ள ஒரு வீட்டின் சமையல் அறையில் நேற்று முன்தினம் அதிகாலை 4 மணி அளவில் திடீரென தீப்பற்றியது. கட்டிடம் முழுவதும் மளமளவென தீ பரவியதில் 49 பேர் உயிரிழந்தனர். 50 பேர் காயம் அடைந்தனர்.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்களில் 45 பேர் இந்தியர்கள். இவர்கள் அனைவரும் 20-50 வயதினர். 24 பேர்கேரளாவை சேர்ந்தவர்கள். இதில்தமிழகத்தை சேர்ந்த 7 பேரும் உயிரிழந்துள்ளனர் என தெரியவந்தது.
தொலைபேசி எண் அறிவிப்பு: விபத்தில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்காக குவைத்தில் உள்ள இந்திய தூதரகம் 965 – 65505246 என்ற தொலைபேசி எண்ணை அறிவித்துள்ளது.
ரூ.5 லட்சம் நிவாரணம்: தீ விபத்து குறித்து வேதனை தெரிவித்த பிரதமர் மோடி, உயிரிழந்த இந்தியர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.2 லட்சம் வழங்கப்படும் என அறிவித்தார். அதேபோல் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.