சென்னை: சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனை அவரது இல்லத்துக்குச் சென்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சந்தித்தார்.
இது தொடர்பாக அண்ணாமலை தனது எக்ஸ் பக்கத்தில், ‘‘இன்றைய தினம், மூத்த பாஜக தலைவர்களில் ஒருவரும், தமிழக பாஜக மாநிலத் தலைவராகத் திறம்படச் செயல்பட்டவருமான, அக்கா தமிழிசையை அவர்கள் இல்லத்திற்குச் சென்று நேரில் சந்தித்ததில் பெருமகிழ்ச்சி. தமிழகத்தில் தாமரை நிச்சயம் மலரும் என்பதை உறுதியுடன் கூறி, அதற்காகக் கடினமாக உழைத்த அக்கா தமிழிசையின் அரசியல் அனுபவமும், ஆலோசனைகளும், கட்சியின் வளர்ச்சிக்கான உத்வேகத்தைத் தொடர்ந்து அளித்துக் கொண்டிருக்கிறது’’ என்று பதிவிட்டார்.
அண்ணாமலை பதிவை டேக் செய்து ‘‘தமிழக பாஜக மாநிலத் தலைவர் அன்புத்தம்பி அண்ணாமலையைச் சந்தித்ததில் மகிழ்ச்சி….’’ என்று தமிழிசை பதிவிட்டிருந்தார். முன்னதாக, தன்னை சந்திக்க வந்த அண்ணாமலைக்கு தான் எழுதிய ‘VOICE FOR ALL’ புத்தகத்தை பரிசாக வழங்கினார் தமிழிசை. மக்களவை தேர்தல் தோல்வி குறித்து எழுந்த மோதலுக்கு மத்தியில் இருவரது சந்திப்பும் தமிழக பாஜகவில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
பின்னணி: ஆந்திர மாநில முதல்வராக நேற்று முன்தினம் சந்திரபாபு நாயுடு பொறுப்பேற்றார். பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோர் இந்த நிகழ்வில் பங்கேற்றனர். நிகழ்ச்சியில், தெலங்கானா முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், உள்துறை அமைச்சர் அமித் ஷாவை கடந்து செல்லும்போது, அமித் ஷா தமிழிசையை அழைத்து சில நிமிடங்கள் பேசினார். இதையடுத்து, அமித் ஷா தமிழிசையை கண்டித்ததாக செய்தி வெளியானது. மக்களவை தேர்தல் தோல்வியை அடுத்து தேர்தல் கூட்டணி தொடர்பாக அண்ணாமலையுடன் மோதல் போக்கை கடைபிடித்ததாகவும், அதற்கு தான் தமிழிசைக்கு அமித் ஷா கண்டித்ததாகவும் கூறப்பட்டன.
ஆனால், இதனை மறுக்கும் வகையில் நேற்று தமிழிசை சவுந்தரராஜன் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘‘மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு முதன்முறையாக ஆந்திராவில், உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்தேன். அப்போது, தேர்தலுக்குப் பிந்தைய தொடர் நடவடிக்கைகள், எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து கேட்பதற்காகவே என்னை அழைத்தார். நானும் அது தொடர்பாக அவரிடம் விரிவாக எடுத்து கூறினேன். அவர் அந்த நேரத்தில் அரசியல் மற்றும் தொகுதிப் பணிகளை தீவிரமாக மேற்கொள்ள அறிவுரை வழங்கியது உத்வேகம் அளிப்பதாக இருந்தது. இதன் மூலம் தேவையற்ற யூகங்களை தெளிவுபடுத்தியுள்ளேன்’’ என தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.