புதுடெல்லி: ஜி7 மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி நேற்று இத்தாலி சென்றார்.
கடந்த 1973-ம் ஆண்டில் ஜி7 அமைப்பு தொடங்கப்பட்டது. இந்த அமைப்பில் அமெரிக்கா, பிரிட்டன், ஜப்பான், இத்தாலி, ஜெர்மனி, பிரான்ஸ், கனடா ஆகிய நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. ஜி7 அமைப்பின் 50-வது உச்சி மாநாடு இத்தாலியின் ஃபசானோ நகரில் நேற்று தொடங்கியது. இதில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி நேற்று டெல்லியில் இருந்து இத்தாலிக்கு சென்றார். மாநாட்டில் இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளில் அவர் பங்கேற்கிறார்.
அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான், ஜெர்மனி பிரதமர் ஒலாஃப் ஷோல்ஸ், ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடோ, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி ஆகியோர் மாநாட்டில் பங்கேற்கின்றனர்.
மாநாட்டை நடத்தும் இத்தாலி அரசு சார்பில் இந்தியா, சவுதி அரேபியா, பிரேசில், தென்னாப்பிக்கா உள்ளிட்ட நாடுகளின் தலைவர்களுக்கு சிறப்பு அழைப்பு விடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த அழைப்பை ஏற்றே பிரதமர் நரேந்திர மோடி ஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்றுள்ளார்.
இந்த பயணத்தின்போது அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும்பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளின் தலைவர்களுடன் அவர் ஆலோசனை நடத்த உள்ளார்.
இதுகுறித்து மத்திய வெளியுறவுத் துறை செயலாளர் வினய் மோகன் குவாத்ரா கூறும்போது, “மூன்றாவது முறை பிரதமராக பதவியேற்றுள்ள நரேந்திர மோடி முதல்முறையாக ஜி7 மாநாட்டில் பங்கேற்க இத்தாலி சென்றுள்ளார். இந்த பயணத்தின்போது ஜி7 நாடுகளின் தலைவர்களை அவர் சந்தித்துப் பேச உள்ளார். தெற்கு நாடுகளின் கோரிக்கைகளை அவர் மாநாட்டில் எடுத்துரைப்பார்” என்று தெரிவித்தார்.
மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், வெளியுறவு செயலாளர் வினய் மோகன் குவாத்ரா, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உள்ளிட்டோரும் பிரதமருடன் இத்தாலி சென்றுள்ளனர்.
ஜி7 மாநாட்டில் செயற்கை நுண்ணறிவு, எரிசக்தி, பருவநிலை மாறுபாடு, உள்நாட்டு குழப்பம் நிலவும் ஆப்பிரிக்க நாடுகள், இஸ்ரேல்-பாலஸ்தீன விவகாரம், உக்ரைன் போர் உள்ளிட்டவை குறித்து விரிவாக விவாதிக்கப்பட உள்ளன.
சர்வதேச அரசியல் நோக்கர்கள் கூறியதாவது: உலகின் பணக்கார நாடுகள் ஜி7 அமைப்பில் இடம்பெற்று உள்ளன. இந்த அமைப்பின் உச்சிமாநாடுகளில் சிறப்பு அழைப்பாளராக இந்தியா பங்கேற்று வருகிறது.
கடந்த 2007-ம் ஆண்டில் ஜெர்மனியில் நடைபெற்ற மாநாட்டில் பங்கேற்க அப்போதைய இந்திய பிரதமர் மன்மோகன் சிங்குக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால்மாநாட்டில் பேச அவருக்கு குறைவான நேரமே ஒதுக்கப்பட்டது. இதற்கு ஆட்சேபம் தெரிவித்து மாநாட்டில் பங்கேற்க மன்மோகன் சிங் மறுத்துவிட்டார். உடனடியாக ஜெர்மனி அரசு, இந்திய பிரதமருக்கான நேரத்தை கணிசமாக அதிகரித்து மன்மோகன் சிங்கை சமாதானப்படுத்தி மாநாட்டில் பங்கேற்கச் செய்தது.
தற்போது உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடுகளில் 5-வது இடத்தில் இந்தியா உள்ளது. பிரான்ஸ், பிரிட்டன், இத்தாலி, கனடாவுக்கு இணையாக இந்தியா அபார வளர்ச்சி அடைந்திருக்கிறது. அதோடு சர்வதேச அரங்கில் நம்பிக்கைக்கு உரிய ஜனநாயக நாடு என்ற கவுரவத்தையும் பெற்றிருக்கிறது.
எனவே ஜி7 அமைப்பில் இந்தியாவை இணைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் காரணமாகவே ஒவ்வொரு உச்சி மாநாட்டின்போதும் இந்தியபிரதமர் சிறப்பு விருந்தினராக பங்கேற்க அழைப்பு விடுக்கப்படுகிறது.
இவ்வாறு சர்வதேச அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.