“மக்களை காக்க வேண்டிய போலீஸைக் கைதுசெய்ய வேண்டிய நிலை ஏற்பட்டிருப்பது, வேதனை அளிக்கிறது” என்று இன்ஸ்பெக்டர் சத்தியஷீலா வழக்கில் உயர் நீதிமன்ற நீதிபதி கவலை தெரிவித்துள்ளார்.

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் கடந்த 21-ம் தேதி நடந்த கோயில் திருவிழாவில் ராமசாமி தரப்புக்கும், ராமர் தரப்புக்கும் தகராறு ஏற்பட்டதில் ராமர் மரணமடைந்தார். இக்கொலையில் சம்பந்தப்பட்ட ராம்குமாரை பெங்களூருவில் போலீஸார் கைதுசெய்தபோது அவருடன் தங்கியிருந்த ராமநாதபுரம் மாவட்டத்தில் பணியாற்றும் இன்ஸ்பெக்டர் சத்தியசீலாவையும் கைதுசெய்த சம்பவம், அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது.
அதைத் தொடர்ந்து ராமநாதபுரம் சரக டி.ஐ.ஜி துரை, சத்தியஷீலாவை சஸ்பெண்ட் செய்தார்.
மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த சத்தியஷீலா இன்ஸ்டாகிராம் மூலம் ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்த ராம்குமாருடன் பழக்கம் ஏற்பட்டு, அவருடன் இணைந்து வாழ்ந்தவர் சில ஆண்டுகளுக்கு முன் சிவகங்கை மாவட்டத்துக்கு மாற்றப்பட்டார்.
அங்கு பணியாற்றியபோது தொழிலதிபர் ஒருவரிடம் பணம் பறிக்கும் நோக்கில் பொய்யான போக்சோ வழக்கை பதிவு செய்ததால், தொழிலதிபர் தற்கொலை செய்துகொண்டார். அந்த விவகாரம் உயர் நீதிமன்றம் சென்றதால், விசாரணை செய்த சி.பி.சி.ஐ.டி சத்தியஷீலா உட்பட 10 பேர்மீது வழக்கு பதிவுசெய்தது.

அந்த வழக்கு நிலுவையில் இருக்கும்போதே ராமநாதபுரம் மாவட்டத்துகு மாற்றப்பட்டார். தொடர்ந்து ராம்குமாருடன் தொடர்பில் இருந்த நிலையில், ஸ்ரீவில்லிப்புத்தூரில் ராம்குமார் உட்பட அவர் குடும்பத்தினர் தாக்குதல் நடத்தியதில் ராமர் என்பவர் கொலை செய்யபட்டார். அந்த வழக்கில் தலைமறைவான ராம்குமாருடன் இன்ஸ்பெக்டர் சத்தியஷீலா இருந்த நிலையில்தான் கைதுசெய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் தனக்கு ஜாமீன் கேட்டு உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் சத்தியஷீலா மனு தாக்கல் செய்திருந்தார். நேற்று இந்த மனுவை உயர் நீதிமன்றம் விசாரித்தபோது, “இந்த வழக்கில் பொய்யாக சத்தியஷீலா சேர்க்கப்பட்டுள்ளார்” என்று அவர் தரப்பு வழக்கறிஞர் தரப்பில் வாதிடப்பட்டது. “இவர்மீது ஏற்கெனவே குற்ற வழக்கு உள்ளது” என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அப்போது நீதிபதி புகழேந்தி, “மக்களைக் காக்க வேண்டிய போலீஸைக் கைதுசெய்ய வேண்டிய நிலை ஏற்பட்டிருப்பது, வேதனை அளிக்கிறது” என்றவர், எந்த உத்தரவும் பிறப்பிக்காமல் ஜாமீன் மனுமீதான விசாரணையை 18-ம் தேதிக்குத் தள்ளி வைத்து உத்தரவிட்டார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb