சென்னை கே.கே.நகர் பகுதியில் சலூன் கடை வைத்திருக்கும் மகாராஜா (விஜய் சேதுபதி) தனது மகள் ஜோதியுடன் (சச்சினா நெமிதாஸ்) பள்ளிக்கரணை பகுதியில் வாழ்ந்து வருகிறார். ஒருநாள் காவல் நிலையம் செல்பவர் தன் வீட்டிலிருந்த ‘லட்சுமி’ திருடு போய்விட்டதாகவும், ஸ்போர்ட்ஸ் கேம்ப்பிற்குச் சென்றிருக்கும் தன்னுடைய மகள் ஜோதி திரும்ப வருவதற்குள் காவல்துறை லட்சுமியைக் கண்டறிந்து தரவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுக்கிறார். மகாராஜாவுக்குக் காவல் அதிகாரிகள் உதவினார்களா, உண்மையில் மகாராஜாவின் வீட்டில் நடந்தது என்ன, அவருக்கும் வீடு புகுந்து கொள்ளை அடிக்கும் ஒரு கும்பலுக்கும் என்ன தொடர்பு என்பதே இந்தப் படத்தின் கதை.
சிரிக்காத இறுக்கமான முகம், மகளுக்காக எதையும் செல்ய்யும் தந்தை, லட்சுமியின் கதையை விவரிக்கும் போது வெள்ளந்தி மனம் எனப் படத்தின் மொத்த பாரத்தையும் சுமந்திருக்கிறார் விஜய் சேதுபதி. அதிலும் தடுமாற்றத்துடனும் தளர்வான நடையுடனும் வாள் வீசும் தருணம், க்ளைமாக்ஸ் காட்சியில் எதிரியைப் பார்க்கின்ற தருணம் எனத் தனது அரைசத படத்தில் நடிப்பில் சதமடித்திருக்கிறார். குழந்தை நட்சத்திரமாக சச்சினா நெமிதாஸ் குறைவான திரை நேரமென்றாலும் உணர்வுபூர்வமான இடங்களில் நடிப்பிலும் வசன உச்சரிப்பிலும் ஜொலித்திருக்கிறார்.
திருடுகிற வீட்டிலேயே சமைத்துச் சாப்பிடுவது, கூட்டாளிகளின் பாலியல் ரீதியான குற்றங்களைக் கண்டுகொள்ளாதது என்று ஒருபக்கம் கொடூர வில்லனாக மிரட்டும் அனுராக் காஷ்யப், மறுபுறம் எலக்ட்ரிக்கல் கடையில் வேலை பார்த்துக் கொண்டே தனது குழந்தைக்காக எதையும் செய்யும் தந்தையாகவும் இருக்கிறார். அவருக்கான டப்பிங்கில் மட்டும் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம். இன்ஸ்பெக்டராக வரும் நட்டி இது சரி, இது தவறு என்று யூகிக்கமுடியாத கதாபாத்திரத்தை அருமையாகக் கையாண்டிருக்கிறார்.
‘பாய்ஸ்’ மணிகண்டனுக்கு இரண்டாவது இன்னிங்ஸில் புதிய பரிமாணம் என்றாலும் பெரிதாக வேலையில்லை. இவர்கள் தவிரச் சிங்கம் புலி, அருள்தாஸ், முனிஸ்காந்த் ஆகியோர் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட வேலையைச் சிறப்பாகச் செய்திருக்கிறார்கள். அபிராமி தன் கணவன் குறித்து உண்மையை அறியும் காட்சியில் உணர்ச்சிகளை அட்டகாசமாகக் கடத்தியிருக்கிறார். மம்தா மோகன்தாஸ், பாரதிராஜாவுக்குப் பெரிதாக வேலையில்லை.
‘அடுத்து என்ன?’ என்ற வினாவோடு நகரும் திரைக்கதையின் வேகத்துக்கு வலு சேர்த்திருக்கிறது பி.அஜனீஷ் லோக்நாத்தின் பின்னணி இசை. வைரமுத்துவின் வரிகளில் ஒரே ஒரு பாடல் படத்தில் ஆங்காங்கே வந்தாலும் கதையைத் தொந்தரவு செய்யவில்லை. ஸ்டன்ட் மாஸ்டர் அனல் அரசு இடைவேளைக்கு முந்தைய இடத்தில் மிரட்டலான சண்டைக் காட்சியை வடிவமைத்திருக்கிறார். அது ஒளிப்பதிவாளர் தினேஷ் புருஷோத்தமனின் கச்சிதமான ஒளியுணர்வோடு சேர்ந்து மேஜிக் செய்திருக்கிறது. அவரது அழுத்தமான ப்ரேம்களுக்கு, நேர்த்தியாகச் சவரக் கத்தியால் கச்சிதமாக வெட்டு போட்டிருக்கிறார் படத்தொகுப்பாளர் பிலோமின் ராஜ்.
`பாட்டுக்குப் பாட்டு’ விளையாட்டுடன் வேடிக்கையாகத் தொடங்கும் படம், அதற்குப் பின்னர் திடீர் விபத்து என்று அதிர்ச்சியைத் தந்து நிகழ்காலத்தில் நுழைகிறது. அங்கே `லட்சுமியைக் காணோம்’ என கேஸ் கொடுக்க வரும் நாயகன், கதை சொல்லும் விதமும், அதற்கு போலீசார் ஆற்றும் எதிர்வினையும் டார்க் ஹ்யூமர்! இருப்பினும் மீண்டும் மீண்டும் அதையே நீட்டிக்கச் செய்திருப்பது கொஞ்சம் ஓவர் டோஸ்!
எளிமையான நேர்கோட்டில் படம் சென்றிருந்தால் அடுத்து என்ன என்பதைக் கணிக்கும் சாதாரணமான படமாக இருந்திருக்கும். ஆனால் அதை தன் நான்-லீனியர் பாணியில் படமாக்கிய விதத்தில், திரைக்கதைதான் படத்தின் ‘மகாராஜா’ என்று அரியணை ஏற்றியிருக்கிறார் இயக்குநர் நித்திலன் சாமிநாதன். இடைவேளையில் சூடுபிடிக்கும் படத்தின் வேகம், இரண்டாம் பாதியில் பதைபதைப்புடன் சீட்டின் நுனியில் உட்கார வைத்திருக்கிறது. இப்படிப்பட்ட திரைக்கதை என்று முடிவு செய்து, அதற்கேற்றவாறு காட்சிகளைப் புதிர்களாக அடுக்கிய விதத்துக்காகவே அப்ளாஸ்!
அதே சமயம் பெண்களுக்கு/குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறை காட்சிகளை இன்னுமே முதிர்ச்சியுடன் அணுகியிருக்கலாம். பாலியல் ரீதியான குற்றம், பெண்களுக்கு எதிரான வன்முறை போன்ற சென்சிட்டிவான விஷயங்களை, வில்லன் எவ்வளவு கொடூரமானவன் என்பதைக் காட்ட ஒரு கருவியாகப் பயன்படுத்திய விதம் கண்டிக்கத்தக்கது. பழிக்குப் பழி வாங்குவதை நியாயப்படுத்தி, எமோஷனலாக ஸ்கோர் செய்ய இத்தனை வெளிப்படையான மோசமான காட்சிகளும், வசனங்களும் அவசியம்தானா? குற்றம் இதுதான், அதைச் செய்தவர்கள் கொடூரமானவர்கள்தான் என்பது புரிந்துகொள்ளப்பட்ட பிறகும் வசனங்களால் அதை மீண்டும் மீண்டும் விவரிப்பதும் ஆபாசமே! ‘ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும்’ என்பதைப் பாலியல் குற்றத்துக்கும் பொருத்திப் பார்த்திருப்பது நெருடலே!
திரைக்கதையாகவும், அதை ஓர் இருக்கை நுனி படைப்பாக உருவாக்கிய விதத்துக்காகவும் ‘மகாராஜா’வாகக் கொண்டாடப்பட வேண்டிய இந்த படம், சொல்ல வந்த கருத்தை அணுகிய விதத்துக்காகச் சில பல கண்டிப்புகளையும் சேர்த்தே சம்பாதித்துக் கொள்கிறது.