பிரபல கன்னட நடிகர் தர்ஷன் தூகுதீபா, தனது காதலியான பவித்ரா கவுடாவை ஆன்லைனில் மிரட்டித் தொந்தரவு செய்ததாகக் கூறி, ரேணுகா சுவாமி என்ற தனது ரசிகரை ஆள் வைத்து அடித்துக் கொன்ற சம்பவம் கன்னடத் திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
ரேணுகா சுவாமி தனக்கு ஆபாச மெசேஜ் அனுப்பியது குறித்து நடிகை பவித்ரா, நடிகர் தர்ஷனிடம் தெரிவித்திருக்கிறார். இதையடுத்து, ரேணுகா சுவாமியை நடிகர் தர்ஷன் கொலை செய்ததாகக் கூறப்படுகிறது. தற்போது நடிகர் தர்ஷன், பவித்ரா கவுடா உள்ளிட்ட சிலரை காவல்துறையினர் சிறைக் காவலில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நடிகர் தர்ஷன் மீது மனைவியைத் தாக்கியதாக 2011-ம் ஆண்டு ஒரு வழக்கும், தயாரிப்பாளர் பரத்தை மிரட்டியதாக 2021-ம் ஆண்டு ஒரு வழக்கும், 2023-ல் பறவைகளைக் கொன்றதாக, சிறை பிடித்ததாக வனத்துறை வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கும், கடந்த ஜனவரி மாதம் ஒரு பப்பில் விதிமீறிச் செயல்பட்டதாக ஒரு வழக்கும் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் நடிகர் தர்ஷன் தூகுதீபா, தனது பிரச்னையை சட்ட ரீதியாக அணுகியிருக்க வேண்டும் என்றும் சட்டத்தைக் கையில் எடுத்து கொலையில் ஈடுபட்டது தவறு என்றும் திரையுலகினர் பலரும் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர்.
அவ்வகையில், நடிகையும், அரசியல்வாதியுமான திவ்யா ஸ்பந்தனா, “எல்லோரும் சட்டத்திற்குப்பட்டவர்கள்தான். சட்டத்தை எல்லோரும் கையில் எடுப்பது ஆபத்தானது. மக்கள் மீது வன்முறை நடத்துவது, கொலைச் செயல்களில் ஈடுபடுவது மிகவும் கண்டிக்கத்தக்கது. எந்தப் பிரச்னைக்கும் முறையாக வழக்குப் பதிவு செய்து சட்ட ரீதியாக எதையும் அணுக வேண்டும். இந்த விவகாரத்தில் உரிய வகையில் சிறப்பாகச் செயல்பட்ட காவல்துறைக்கு வாழ்த்துகள். அரசியல் கட்சிகளின் அழுத்தங்களுக்கு ஆட்படாமல் மக்கள் சட்டத்தின் மீது வைத்துள்ள நம்பிக்கையை அரசும், நீதித்துறையும் காப்பாற்றும் என்றும் நம்புகிறேன். இந்த விவகாரத்தில் நீதித்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.