புதுடெல்லி: காங்கிரஸ் வேட்பாளராக இரண்டு தொகுதிகளில் வெற்றிபெற்ற ராகுல் காந்தி, ரேபரேலி தொகுதி எம்பியாக தொடரவும், கேரளாவின் வயநாடு தொகுதியை ராஜினாமா செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், வயநாடு தொகுதியில் பிரியங்கா காந்தி போட்டியிடலாம் என்றும் தெரிகிறது.
நடந்த முடிந்த மக்களவை தேர்தலில் காங்கிரஸின் முக்கியத் தலைவரான ராகுல் காந்தி இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டார். கேரளாவின் வயநாடு தொகுதி எம்.பி-யான ராகுல் அங்கு மீண்டும் போட்டியிட்டார். இதன் வாக்குப்பதிவு முடிந்த நிலையில் அவர், உத்தரப் பிரதேசத்தின் ரேபரேலியிலும் வேட்புமனு தாக்கல் செய்தார். இதன் முடிவுகளில் ராகுல் இந்தியாவின் ஒரே வேட்பாளராக இரண்டு தொகுதிகளிலும் வெற்றிபெற்றார்.
இந்நிலையில், ராகுல் இரண்டு தொகுதிகளில் ஒன்றை ராஜினாமா செய்தாக வேண்டி உள்ளது. இந்த இரண்டில் எதை அவர் ராஜினாமா செய்வார் எனவும், அதில் போட்டியிடப் போவது யார் என்பதும் பேசுபொருளாகி வருகிறது. இதற்கிடையே, தற்போது ராகுல் தனது வயநாடு தொகுதியை ராஜினாமா செய்வார் எனத் தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும், வயநாடு தொகுதியின் இடைத்தேர்தலில் முதன்முறையாக போட்டியிட காங்கிரஸின் தேசியப் பொதுச் செயலாளரான பிரியங்கா காந்தி தயாராவதாக எதிர்பார்க்கப்படுகிறது.
தனது வெற்றிக்கு நன்றி கூற சமீபத்தில் ராகுல் காந்தி தனது இரண்டு தொகுதிகளுக்கும் சென்றிருந்தார். ராகுலுடன் அவரது சகோதரி பிரியங்காவும் உடன் இருந்தார். அப்போது ஒரு கேள்விக்கு பதிலளித்த ராகுல், வாரணாசியில் பிரதமர் நரேந்திர மோடியை எதிர்த்து போட்டியிட்டிருந்தால் 2 முதல் 3 லட்சம் வாக்குகளில் வென்றிருப்பார் எனத் தெரிவித்திருந்தார். இதனால், உத்தரப் பிரதேசத்தின் ரேபரேலியை ராகுல் ராஜினாமா செய்வார் என்றும், அங்கு பிரியங்கா போட்டியிடுவார் என்றும் பேச்சுக்கள் எழுந்தன.
ஆனால், உ.பி.யில் சமாஜ்வாதி கூட்டணியுடன் காங்கிரஸ் 13 தொகுதிகளில் போட்டியிட்டது. இவற்றில் காங்கிரஸில் ராகுல் உள்ளிட்ட ஆறு வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். சிறிதும் எதிர்பாராத இந்த வெற்றியால் காங்கிரஸ் உ.பி.யில் மீண்டும் வளர்வதாக கருதப்படுகிறது. இதுபோல், வளரும் நிலையில் அம்மாநில எம்.பி பதவியிலிருந்து ராகுல் விலகாமல் இருப்பது நல்லது எனக் கருதப்படுகிறது. எனவே, அவர் கேரளாவின் வயநாடு தொகுதியை ராஜினாமா செய்வது பெரும்பாலும் உறுதி என்றாகிவிட்டது.
வயநாடு தொகுதியில் ராகுல், சிபிஐ வேட்பாளர் ஆனி ராஜாவை 3,64,422 வாக்குகளில் வெற்றி பெற்றிருந்தார். உத்தரப் பிரதேசத்தின் ரேபரேலியில் அவர் பாஜகவின் தினேஷ் பிரதாப் சிங்கை 3,90,030 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரியங்காவின் போட்டி பின்னணி: ராகுல் அரசியலுக்கு வருவதற்கும் முன்பாக தாய் சோனியா காந்திக்காக தேர்தல் பிரச்சாரம் செய்து வந்தவர் பிரியங்கா. இவர் உ.பி-யில் ஒவ்வொரு முறை தேர்தல்களிலும் போட்டியிடுவார் என்ற எதிர்பார்ப்புகள் இருந்தன. ஆனால், பிரியங்கா தரப்பில் அமைதியே பதிலாக இருந்தது. கடைசியாக, 2019 மக்களவை தேர்தலில் பிரியங்கா, வாரணாசியில் பிரதமர் மோடியை எதிர்ப்பார் என்ற வலுவாகப் பேசப்பட்டது.
ஏனெனில், அப்போது பிரியங்கா அதிகாரபூர்வமாக காங்கிரஸில் இணைந்து அரசியலில் நுழைந்தார். இதுவும் நடைபெறாத நிலையில் அடுத்து வந்த 2022 உ.பி. சட்டப்பேரவை தேர்தலில் அவர் போட்டியிடுவதாகவும் எதிர்பார்க்கப்பட்டது. சட்டப்பேரவை தேர்தலுக்கு அவர் காங்கிரஸ் கட்சியின் பொறுப்பாளராகவும் நியமிக்கப்பட்டதால் அப்படி சொல்லப்பட்டது. ஆனால் அதுவும் இல்லை என்றானது. அதேபோல், 2024 மக்களவை தேர்தலிலும் பிரியங்காவின் போட்டி பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. இதற்கு சகோதரர் ராகுல் தடையாக இருப்பதாகக் கூறப்பட்டது.
அவர் பிரியங்காவின் வெற்றி உறுதி என்றால் மட்டுமே, தேர்தலில் போட்டியிடுவது சரி எனக் கருதியது அதன் காரணமானது. தற்போது ராகுல் எண்ணியபடி தான் ராஜினாமா செய்யும் வயநாடு தொகுதியில் பிரியங்காவுக்கு வெற்றி உறுதி எனக் கணக்கிடப்படுகிறது. எனவே, ராகுல் ராஜினாமாவுக்கு பின் வயநாடு தொகுதியில் அறிவிக்கப்படும் இடைதேர்தலில் பிரியங்காவின் போட்டி உறுதியாகி வருகிறது.