விழுப்புரம்: விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் 4 சுயேச்சை வேட்பாளர்கள் வெள்ளிக்கிழமை தங்களது வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்.
விக்கிரவாண்டி தொகுதி எம்எல்ஏவான திமுகவைச் சேர்ந்த புகழேந்தி உடல் நலக்குறைவால் காலமானதைத் தொடர்ந்து அத்தொகுதிக்கு ஜூலை 10-ம் தேதி இடைத் தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான வேட்பு மனு தாக்கல் வெள்ளிக்கிழமை தொடங்கியது.விக்கிரவாண்டியில் உள்ள வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலரான சந்திரசேகரிடம் வேட்பு மனுக்களை தாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் வரும் 21-ம் தேதி வரை நாள்தோறும் காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
ரூபாய் நோட்டு மாலை: இந்த நிலையில், இன்று முதல் நபராக தருமபுரி மாவட்டம், பென்னாகரம் பகுதியைச் சேர்ந்த அக்னி ஆழ்வார் ரூபாய் நோட்டுகளை மாலையாக அணிந்து வந்து தனது வேட்பு மனுவை தேர்தல் நடத்தும் அலுவலரான சந்திரசேகரிடம் வழங்கினார். 50 ஆயிரம் மதிப்பிலான ரூபாய் நோட்டுகளை மாலையாக அணிந்து வந்த ஆழ்வார், டெபாசிட் தொகையான 10 ஆயிரம் ரூபாயையும் நாணயங்களாக எடுத்து வந்து தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அவர் வழங்கிய ரூ.10 ஆயிரத்துக்கான நாணயங்களை 10 பேர் கொண்ட அரசு ஊழியர்கள் சுமார் அரை மணி நேரத்துக்கும் மேலாக எண்ணி முடித்து வேட்பு மனுவை ஏற்றுக் கொண்டனர்.
தேர்தல் மன்னன் பத்மராஜன்: இதேபோல் சேலம் மாவட்டம் மேட்டூரைச் சேர்ந்த தேர்தல் மன்னன் என்றழைக்கப்படும் பத்மராஜனும் சுயேச்சை வேட்பாளராக இன்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். உள்ளாட்சி, சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தல், ராஜ்யசபா உறுப்பினர் தேர்தல், குடியரசு தலைவர் தேர்தல் என எந்த தேர்தலாக இருந்தாலும் அனைத்து தேர்தல்களிலும் தொடர்ச்சியாக போட்டியிட்டு வரும் பத்மராஜன் 242-வது முறையாக இன்று விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளார். இது குறித்து பத்மராஜன் கூறும்போது, “241 முறை தேர்தல்களில் போட்டியிட்டு இதுவரை வெற்றி பெற்றதில்லை என்றும் தோல்வி அடைவது தான் எனக்கு மகிழ்ச்சி. கின்னஸ் சாதனை படைக்கவே இதுபோன்று அனைத்துத் தேர்தல்களிலும் போட்டியிட்டு வருகிறேன்” என்றார்.
டிஜிட்டல் கார்டு மாலை: இவரைத் தொடர்ந்து, திருச்சியைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் ஏடிஎம் கார்டு, கிரெடிட் கார்டு உள்ளிட்ட டிஜிட்டல் கார்டுகளை மாலையாக அணிந்து வந்து தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். தனக்கான டெபாசிட் தொகையான ரூ.10 ஆயிரத்தை டெபிட் கார்டு மூலம் எடுத்துக் கொள்ளுமாறு தேர்தல் நடத்தும் அலுவலரான சந்திரசேகரிடம் தெரிவித்தார்.
அதற்கு அவர் மறுப்பு தெரிவித்ததால் டெபாசிட் தொகையை செலுத்தாமல் வெறும் வேட்பு மனுவை மட்டும் கொடுத்துவிட்டு நடையைக் கட்டினார் ராஜேந்திரன். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், “நாடு முழுவதும் டிஜிட்டல் மயமாகிவிட்டதாக விளம்பரம் செய்யும் மத்திய அரசு அதனை முழுமையாக அமல்படுத்தவில்லை. மத்திய அரசும், தேர்தல் ஆணையமும் முழுமையாக டிஜிட்டல் முறையை அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளேன்” என்றார்.
4 சுயேச்சைகள் வேட்புமனு: இதையடுத்து, கோவையைச் சேர்ந்த நூர்முகமது என்பவர் 44-வது முறையாக சுயேச்சையாக தனது வேட்புமனு தாக்கல் செய்தார். முதல் நாளில் நான்கு சுயேச்சைகள் இப்படி கலக்கலாக வேட்புமனு தாக்கல் செய்த நிலையில் முக்கிய அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் யாரும் இன்று வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. வேட்புமனு தாக்கலுக்கான முதல் நாளில் நான்கு சுயேட்சை வேட்பாளர்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.