விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டையில் 3ம் கட்ட அகழாய்வை இம்மாதம் 18ம் தேதி காணொலி காட்சி மூலம் தமிழக முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள வெம்பக்கோட்டை விஜயகரிசல்குளம் மேட்டுக்காட்டில் கடந்த 2022-ம் ஆண்டு மார்ச் 16-ம் தேதி முதலாம் கட்ட அகழாய்வு பணிகள் தொடங்கப்பட்டன. 2022 செப்டம்பர் மாத இறுதிவரை இப்பணிகள் நடைபெற்றன.
இந்த அகழாய்வில், நுண் கற்காலம் முதல் வரலாற்று தொடக்க காலம் வரை இப்பகுதியில் பயன்படுத்தப்பட்ட பானை ஓடுகள் அதிகளவில் கண்டெடுக்கப்பட்டன. அதோடு, நுண்கற்கால கருவிகள், பல வகையான பாசிமணிகள், சுடு மண்ணாலான காதணிகள், பொம்மைகள், தக்காளி, சங்ககால வளையல்கள், மோதிரங்கள், சில்லு வட்டுகள், இரும்பு உருக்கு கழிவுகள், சங்கு வளையல்கள் என 3,254 பழங்கால பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன.
தொடர்ந்து நடைபெற்றுவரும் 2-ம் கட்ட அகழாய்வு பணிகள் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்கின. பழங்கால பானை ஓடுகள் அதிகளவில் கண்டெடுக்கப்பட்டன. அதோடு, சங்கு வளையல்கள், சுடுமண் காதணிகள், யானை தந்தத்தால் செய்யப்பட்ட பொருள்கள் என சுமார் 4,660 பழங்கால பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
2-ம் கட்ட அகழாய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள 4,660 பழங்கால பொருள்களையும் புகைப்படம் எடுத்து, அதன் வடிவம், அளவுகள், நிறம், பயன்படத்தப்பட்ட காலம் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் கணினியில் பதிவேற்றம் செய்து ஆவணப்படுத்தப்பட்டது.
அதைத்தொடர்ந்து, வெம்பக்கோட்டையில் 3-ம் கட்ட அகழாய்வுப் பணிக்கான ஏற்பாடு கடந்த மாதம் 29-ம் தேதி தொடங்கப்பட்டன. அப்போது, 2-ம் கட்ட அகழாய்வின்போது தோண்டப்பட்ட குழிகள் அனைத்தும் ஜேசிபி இயந்திரங்கள் மூலம் மூடப்பட்டன. அதேநேரம், 3-ம் கட்ட அகழாய்வு மேற்கொள்வதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டு அவ்விடத்தை சுத்தம் செய்யும் பணியும் நடைபெற்று வந்தது.
இந்நிலையில், வெம்பக்கோட்டையில் 3-ம் கட்ட அகழாய்வை இம்மாதம் 18-ம் தேதி காணொலி காட்சி மூலம் தமிழக முதல்வர் ஸ்டாலின் திறந்துவைக்க உள்ளார்.
இதுகுறித்து தொல்லியல்துறை அதிகாரிகள் கூறுகையில், வரும் 18-ம் தேதி வெம்பக்கோட்டையில் 3-ம் கட்ட அகழாய்வு பணிகள் தொடங்க உள்ளன. இப்பணிகளை, சென்னையில் இருந்தபடி தமிழக முதல்வர் ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் திறந்து வைக்க உள்ளதாகவும், அதையொட்டி, அகழாய்வுக்கான முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்தனர்.