10 ஆண்டுக்கு பாதுகாப்பு ஒப்பந்தம்.. அமெரிக்கா-உக்ரைன் தலைவர்கள் கையொப்பம்

ரோம்:

அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், இத்தாலி, ஜெர்மனி, கனடா, ஜப்பான் ஆகிய முன்னேறிய நாடுகள் கொண்ட ஜி-7 அமைப்பின் உச்சிமாநாடு இத்தாலியில் நேற்று தொடங்கியது. மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியும் பங்கேற்றார்.

நேற்று அவர் அமெரிக்க அதிபர் ஜோ பைடனை சந்தித்து இரு தரப்பு உறவுகள் மற்றும் ஒத்துழைப்பு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த சந்திப்பின்போது இரு நாடுகளுக்குமிடையே 10 ஆண்டுகளுக்கு பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது. அமெரிக்க அதிபர் ஜோ பைடனும், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியும் ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டனர்.

இந்த ஒப்பந்தத்தின்படி, அடுத்த 10 ஆண்டுகளுக்கு உக்ரைனுக்கு பல்வேறு வகையில் ராணுவ உதவி மற்றும் ராணுவ பயிற்சியை அமெரிக்கா வழங்கும்.

ரஷியாவின் படையெடுப்புக்கு எதிராக போராடி வரும் உக்ரைனுக்கு இந்த பாதுகாப்பு ஒப்பந்தம் வரலாற்று சிறப்பு வாய்ந்தது என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்தார். அத்துடன், நேட்டோ அமைப்பில் இணைவதற்கான முயற்சியில் தனது நாட்டிற்கு இது ஒரு பாலமாக செயல்படும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

எதிர்காலத்தில் உக்ரைன் மீது ரஷியா எந்தவிதமான ஆயுத தாக்குதலை நடத்தினாலும், அமெரிக்காவும், உக்ரைனும் 24 மணி நேரத்திற்குள் உயர்மட்ட அளவில் ஆலோசனை நடத்தி முடிவு எடுக்கவேண்டும் என புதிய ஒப்பந்தத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைனின் ராணுவத்தை சிறப்பாக கட்டமைக்கவும், பயிற்சியில் ஒத்துழைக்கவும் உக்ரைனின் உள்நாட்டு ஆயுத தொழிற்சாலையை உருவாக்கவும் இந்த ஒப்பந்தத்தில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் ஜி7 மாநாட்டின் இடையே, உக்ரைனுடன் ஜப்பானும் பாதுகாப்பு ஒப்பந்தம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.