நிதி ஆண்டு 2024-25-ஆம் ஆண்டுக்கான முழுமையான மத்திய பட்ஜெட் வருகிற ஜூலை 22-ஆம் தேதி அன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்று சொல்லப்படுகிறது. நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத் தொடர் ஜூலை 22-ஆம் தேதி அன்று தொடங்கி, ஆகஸ்ட் மாதம் 9-ஆம் தேதி வரை தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், குளிர்காலக் கூட்டத் தொடர் தொடங்கி முதல் தினமே மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. என்றாலும், இந்தத் தகவல் அரசுத் தரப்பில் இருந்து இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. நிதி ஆண்டு 2024-25-ஆம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை கடந்த பிப்ரவரி 28-ஆம் தேதி தாக்கல் செய்தார் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்!
ஏழாவது முறை பட்ஜெட் தாக்கல் செய்யும் அமைச்சர்!
நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யப்போகும் முழுமையான ஏழாவது பட்ஜெட் இதுவாகும். முன்னாள் நிதி அமைச்சர்களாக இருந்த மன்மோகன் சிங், யெஷ்வந் சின்ஹா, பி.சிதம்பரம், அருண் ஜேட்லி ஆகியோர் தொடர்ந்து ஐந்து முறை மத்திய பட்ஜெட்டைத் தாக்கல் செய்திருக்கிறார்கள்.
முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாய் நிதி அமைச்சராக இருந்தபோது, தொடர்ந்து 6 முறை தாக்கல் செய்திருக்கிறார். இடைவிட்டு, மீண்டும் 4 முறை என மொத்தம் 10 முறை தாக்கல் செய்திருக்கிறார். ஆனால், நிர்மலா தொடர்ந்து ஏழாவது முறையாக தாக்கல் செய்யப் போகிறார். மேலும், பாஜக ஆட்சியில் தொடர்ந்து பட்ஜெட் தாக்கல் செய்யும் போது அவரையும் மிஞ்சுகிற மாதிரி சாதனை படைக்க வாய்ப்புள்ளது.
பட்ஜெட் எதிர்பார்ப்புகள் என்னென்ன?
கடந்த நிதி ஆண்டில் 5.6 சதவிகிதமாக இருந்த நிதிப் பற்றாக்குறை இலக்கானது, 4.5 சதவிகிதமாகக் குறைக்கத் தேவையான நடவடிக்கைகளை நிதி அமைச்சர் இந்த பட்ஜெட்டில் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. தவிர, பொருளாதார வளர்ச்சி சுணக்கம் காணாமல் தொடர்ந்து முன்னேறிச் செல்லத் தேவையான நடவடிக்கைகளையும் நிதி அமைச்சர் அறிவிக்க வாய்ப்புண்டு. முக்கியமாக, எம்.எஸ்.எம்.இ என்று சொல்லப்படும் சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் சந்திக்கும் பிரச்னைகளுக்கான தீர்வுகள் இந்த பட்ஜெட்டில் கிடைக்கும் என அந்தத் துறை சார்ந்தவர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
அதிகரித்த எதிர்கட்சிகளின் பலம்…
கடந்த சில ஆண்டுகளில் இல்லாத வகையில், இந்த ஆண்டு நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யும் முழு பட்ஜெட் பரபரப்பு மிகுந்ததாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. காரணம், கடந்த ஐந்தாண்டுகளில் பாரதிய ஜனதா கட்சிக்கு தனிப் பெரும் மெஜாரிட்டி இருந்தது. தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு மிக அதிகமான இடங்களில் வெற்றி பெற்று, நிறைய எம்.பி.கள் இருந்தனர். இதனால் அரசுத் தரப்பில் எந்த மாற்றம் கொண்டுவரப்பட்டாலும் அதனை எதிர்ப்பதற்கு நாடாளுமன்றத்தில் போதிய பலம் இல்லாமல் எதிர்கட்சிகள் இருந்தன.
ஆனால், அந்த சூழ்நிலை இப்போது பெரிதும் மாறியிருக்கிறது. இப்போது பாரதிய ஜனதா கட்சிக்குத் தனிப் பெரும்பான்மை இல்லை. கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் செயல்படும் மைனாரிட்டி கட்சியாகவே பா.ஜ.க இருக்கிறது.
இது ஒரு பக்கம் எனில், எதிர்கட்சிகளின் பலம் நாடாளுமன்றத்தில் குறிப்பிடத்தகுந்த அளவு உயர்ந்திருக்கிறது. ‘இந்தியா’ அணிக்கு 234 எம்.பி.கள் தற்போது இருக்கின்றனர். இந்த நிலையில், ஆளும் கட்சி சார்பில் தாக்கல் செய்யப்படும் பட்ஜெட் எந்தப் பெரிய விவாதமும் இன்றி நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்க முடியாது. பட்ஜெட் மீதான தங்கள் விமர்சனத்தை எதிர்கட்சிகள் நிச்சயம் முன்வைக்கவே செய்யும். அந்த விமர்சனங்களை ஆளும் பா.ஜ.க தரப்பு எப்படி எதிர்கொள்ளப் போகிறது என்பது முக்கியமான கேள்வி. எதிர்கட்சி உறுப்பினர்களை ஆளும்கட்சி தரப்பு உரிய பதிலை சொல்லி சமாளிக்க முடியவில்லை எனில், நாடாளுமன்றத்தில் சலசலப்பு உருவாகும். இதனால் அவை ஒத்திவைக்கப்படும் சூழ்நிலை உருவாகலாம்.
எனவே, அடுத்த மாதம் தாக்கல் செய்யப்பட இருக்கும் மத்திய பட்ஜெட் மிக மிக முக்கியமான நிகழ்வாகவே இருக்கும் என எதிர்பார்க்கலாம்!