Doctor Vikatan: முகம் கழுவ சோப் பயன்படுத்துவது சரியா… Face Wash தான் பயன்படுத்த வேண்டுமா… இரண்டுக்கும் என்ன வித்தியாசம்? இரண்டில் எது பெஸ்ட்… ஃபேஸ் வாஷை எப்படிப் பயன்படுத்த வேண்டும்?
பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த அரோமாதெரபிஸ்ட் கீதா அஷோக்

நம் சருமத்தின் பிஹெச் (pH) அளவானது, அதாவது அமில-காரத்தன்மையின் பேலன்ஸானது 5.5 என்பதாக இருக்கும். முகத்தைச் சுத்தப்படுத்த நாம் உபயோகிக்கும் பொருளானது, இந்த பிஹெச் அளவோடு பொருந்திப் போவதாக இருக்க வேண்டும்.
முகத்தைச் சுத்தப்படுத்த கிளென்சரோ, ஃபேஸ் வாஷோ, குளியல் பொடியோ, சோப்போ… இப்படி நீங்கள் பயன்படுத்தும் எல்லாவற்றுக்கும் இது பொருந்தும். இவற்றில் சில அமிலத்தன்மை அதிகம் கொண்டதாகவும், சில காரத்தன்மை அதிகம் கொண்டதாகவும் இருக்கும். இவற்றில் எது உங்கள் சருமத்துக்கு ஏற்றது எனத் தெரியாமலேயே பல வருடங்களாகப் பயன்படுத்திக் கொண்டிருப்பீர்கள். அதுவே ஃபேஸ் வாஷ் உபயோகிக்கும் போது, உங்கள் சருமத்தின் தன்மைக்கேற்றதாகத் தேர்ந்தெடுக்கலாம். அதிலேயே எந்த மாதிரியான சருமத்துக்கானது என்பது குறிப்பிடப்பட்டிருக்கும்.

முகத்தின் பிஹெச் (pH)) அளவுக்கு நெருக்கமாகப் பொருந்துவது ஃபேஸ் வாஷ் தான். எனவே, சோப் உள்பட மற்ற எதையும் விட முகத்துக்கு ஃபேஸ் வாஷ் தான் சிறந்தது. சோப் உபயோகித்து முகம் கழுவும்போது, சருமத்தில் ஒருவித வறட்சியை உணரலாம். ஃபேஸ் வாஷ் உபயோகிக்கும் போது சருமத்தின் ஈரப்பதம் குறைவதில்லை. எத்தனை வருடங்கள் உபயோகித்தாலும் சருமத்தின் தன்மை மாறாது.
ஃபேஸ் வாஷ் உபயோகிக்கும் முறை என ஒன்று இருக்கிறது. வறண்ட சருமத்தில் நேரடியாக ஃபேஸ் வாஷ் எடுத்து தடவக்கூடாது. முகத்தை ஈரப்படுத்திய பிறகே ஃபேஸ் வாஷ் உபயோகிக்க வேண்டும். கைநிறைய எடுத்து உபயோகிக்க வேண்டியதில்லை. ஒரு வேர்க்கடலை அளவுக்கு எடுத்து உள்ளங்கையில் வைத்து தேய்த்து மசாஜ் செய்த பிறகு முகத்தில் தடவி, வட்ட வடிவமாகத் தடவவும். பிறகு தண்ணீர் விட்டு முகம் கழுவவும்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.