கால்பந்தாட்டத்தில் ஐரோப்பிய அணிகளுக்கிடையே நடக்கக்கூடிய 17வது ‘யூரோ’ கோப்பைக்கான கால்பந்து போட்டி இன்றிலிருந்து தொடங்குகிறது. மூன்றாவது முறையாக இந்தப் போட்டியை ஜெர்மனி நடத்த, மொத்தம் 24 அணிகள் பங்கேற்கின்றன. சுமார் 3,000 கோடி ரூபாய் பரிசுத்தொகை கொண்ட இந்தப் போட்டியில், ஜெர்மனி, இத்தாலி, ஃபிரான்ஸ், போர்ச்சுகல் உள்ளிட்ட 24 அணிகள் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு பிரிவிலும் 4 அணிகள் என 6 பிரிவுகளாகப் பிரித்து லீக் போட்டிகள் நடைபெறும் நிலையில், நள்ளிரவு 12.30 மணிக்கு இன்று நடக்கும் முதல் போட்டியில் ஜெர்மனியும் ஸ்காட்லாந்தும் மோதுகின்றன.
இதற்கிடையே நட்சத்திர வீரர்களான மெஸ்ஸி மற்றும் எம்பாப்பே இடையே கருத்து மோதல் ஏற்பட்டிருக்கிறது. ஜூன் மாத தொடக்கத்தில் செய்தியாளர்களிடம் பேசிய எம்பாப்பே, “யூரோ சாம்பியன்ஷிப் போட்டி உலகக் கோப்பையை விடக் கடினமானது. உலகக் கோப்பை போட்டிகளில் அழுத்தம் அதிகமாக இருந்தாலும் அனைத்து அணிகளும் ஒருவருக்கொருவர் தெரிந்திருக்கின்றன” என்று கூறினார்.
இதற்குப் பதிலளிக்கும் விதமாகப் பேசியுள்ள மெஸ்ஸி, “ஒவ்வொருவரும் தாங்கள் விளையாடும் போட்டியை மதிக்க வேண்டியது அவசியம்தான். ஐரோப்பிய சாம்பியன்ஷிப் மிகவும் முக்கியமானதுதான். ஆனால் அதில் மூன்று முறை உலக சாம்பியனான அர்ஜெண்டினா, ஐந்து முறை உலக சாம்பியனான பிரேசில், இரண்டு முறை உலக சாம்பியனான உருகுவே ஆகிய அணிகள் பங்கேற்காது. ஆகையால் உலக சாம்பியன்கள் விடுபட்டுள்ள யூரோ போட்டியே மிகவும் கடினமானது என்று சொல்ல முடியாதுதானே? உலகக் கோப்பையில் சிறந்த அணிகள் இருக்கின்றன, பொதுவாக அனைத்து உலக சாம்பியன்களும் இருக்கிறார்கள். அதனால்தான் அனைவரும் உலக சாம்பியனாக விரும்புகிறார்கள்” என்று தெரிவித்துள்ளார்.
2022 உலகக் கோப்பைக்கு முன்பும் எம்பாப்பே இதேபோன்ற கருத்தைத் தெரிவித்தார். “ஐரோப்பியர்களாகிய எங்களுக்கு இருக்கும் நன்மை என்னவென்றால், நாங்கள் எப்போதும் உயர்ந்த நிலை போட்டிகளான நேஷன்ஸ் லீக் போன்ற போட்டிகளில் ஒருவருக்கொருவர் விளையாடுகிறோம். உலகக் கோப்பைக்கு வரும்போது நாங்கள் தயாராக இருக்கிறோம். பிரேசில் மற்றும் அர்ஜெண்டினாவுக்குத் தென் அமெரிக்காவில் அந்த வாய்ப்பு இல்லை. அங்கே ஐரோப்பாவைப் போலக் கால்பந்து அவ்வளவு முன்னேற்றமடையவில்லை. அதனால்தான் சமீபமான உலகக் கோப்பை தொடர்களில் சாம்பியன்களாக ஐரோப்பியர்களே இருக்கிறார்கள்” என்றார்.
இப்படி அவர் பேசினாலும் அந்த உலகக் கோப்பையில் தென் அமெரிக்க அணியான அர்ஜெண்டினாவே சாம்பியன் பட்டம் வென்றது. இதனிடையே இவர்களுக்கிடையே மறைமுகமாக நடந்து வரும் காரசாரமான விவாதங்கள் ரசிகர்களிடையே பேசுபொருளாகி வருகிறது. அதே சூழலில் தென் அமெரிக்க அணிகள் மோதும் Copa-America போட்டிகளும் விரைவில் தொடங்கவிருப்பது கால்பந்தாட்ட ரசிகர்களைக் குஷியாக்கியுள்ளது.