நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க வேட்பாளராகக் களமிறங்கிய நடிகை கங்கனா ரணாவத், ஹிமாச்சலப் பிரதேசம் மாண்டி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
இதையடுத்து சண்டிகர் விமான நிலையத்தில் மத்திய தொழில் பாதுகாப்புப் படை (CISF) பெண் காவலர் கங்கனாவை கன்னத்தில் அறைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இது தொடர்பாக கங்கனா ரணாவத் அன்றே விமான நிலத்தில் செக்-இன் நேரத்தில் CISF பெண் காவலர் தன்னை அறைந்ததாகவும், ஏன் என்று கேட்டபோது விவசாயிகளை ஆதரிப்பதாக அவர் கூறியதாகவும் வீடியோ வெளியிட்டிருந்தார். மேலும், அந்த வீடியோவில், பஞ்சாபில் அதிகரித்து வரும் பயங்கரவாதம் குறித்துக் கவலைப்படுவதாகவும் கங்கனா ரணாவத் தெரிவித்திருந்தார்.
இது குறித்து கங்கனாவிற்கு ஆதரவாகவும், பாதுகாப்புப் பெண் காவலருக்கு ஆதரவாகவும் பலரும் தங்கள் கருத்துகளைத் தெரிவித்து வந்தனர். சமூக வலைதளங்களில் இந்தச் சம்பவம் தீயாய் பரவி பேசுபொருளாகியிருந்தது.
இந்நிலையில் பாலிவுட் இயக்குநர், தயாரிப்பாளர் மற்றும் ‘காஃபி வித் கரண்’ நிகழ்ச்சியின் தொகுப்பாளருமான கரண் ஜோஹர், கங்கனாவை பெண் பாதுகாப்புக் காவலர் கன்னத்தில் அறைந்த சம்பவம் குறித்து நேர்காணல் ஒன்றில் பேசியிருக்கிறார்.
இது பற்றிப் பேசிய கரண் ஜோஹர், “உடல் ரீதியாக, வார்த்தைகள் மூலமாக… வன்முறை என்பது எந்த வடிவத்திலிருந்தாலும் அதை ஏற்றுக் கொள்ள முடியாது. ‘நெப்போ மாஃபியா’ (வாரிசு முன்னுரிமை) என்று கங்கனா என்னைப் பற்றிக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்திருந்தாலும் அவரை நான் எதிரியாக நினைக்கவில்லை. அவருக்கு நடந்த இந்தச் சம்பவம் மிகவும் கண்டிக்கத்தக்க ஒன்று. இந்த நேரத்தில் அவருக்காக நான் குரல் கொடுக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.
பாதுகாப்பு கொடுக்க வேண்டிய பாதுகாவலரே இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவது, சட்டத்தைத் தன் கையில் எடுப்பது அச்சம் மூட்டுவதாகவும், நாமெல்லாம் பாதுகாப்பாக இல்லையோ என்ற ஒருவித பாதுகாப்பற்ற உணர்வையும் ஏற்படுத்துகிறது. இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறியிருக்கிறார்.