ஆஸ்திரேலிய அணியினர் நேர்மையாக விளையாடி வெற்றி பெற முயற்சிப்பார்கள் – இங்கிலாந்து வீரர் நம்பிக்கை

டிரினிடாட்,

20 அணிகள் கலந்து கொண்டுள்ள டி20 உலகக்கோப்பை தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் லீக் ஆட்டங்கள் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டன. இந்நிலையில் இந்த தொடரில் இதுவரை நடந்துள்ள லீக் ஆட்டங்களின் முடிவில் இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ், தென் ஆப்பிரிக்கா ஆகிய 6 அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறி உள்ளன.

சூப்பர் 8 சுற்றின் மீதமுள்ள இரு இடங்களுக்கு வங்காளதேசம், நெதர்லாந்து, இங்கிலாந்து, ஸ்காட்லாந்து ஆகிய 4 அணிகளுக்கிடையே கடும் போட்டி நிலவுகிறது. இதில் குரூப் சி-யில் குறிப்பாக இங்கிலாந்து அணி சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேற வேண்டுமெனில் தங்களது கடைசி போட்டியில் நமீபியா அணிக்கு எதிராக வெற்றி பெற வேண்டும்.

அதோடு ஆஸ்திரேலியா அணி ஸ்காட்லாந்து அணியை வீழ்த்த வேண்டும் இந்த இரண்டும் நடந்தால் அந்த அணி சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறும். ஆனால் ஸ்காட்லாந்து அணிக்கு எதிரான போட்டிக்கு முன்னதாக பேசிய ஆஸ்திரேலியா அணியின் வீரர் ஜோஷ் ஹேசல்வுட் கூறுகையில், இங்கிலாந்து அணி வெளியேற வேண்டும் என்பதையே ஆஸ்திரேலிய அணி விரும்பும். எனவே ஸ்காட்லாந்து அணிக்கு எதிரான போட்டியின் போது ஆஸ்திரேலியா அணி மெதுவாக விளையாட விரும்பும். மற்ற அணிகளும் அதையே தான் விரும்புவார்கள் என்று ஒரு சர்ச்சையான கருத்தை தெரிவித்திருந்தார்.

இதையடுத்து அவரது கருத்துக்கு பதில் அளித்த மற்றொரு ஆஸ்திரேலிய வீரர் கம்மின்ஸ் ஸ்காட்லாந்து போட்டியில்எங்களுடைய முழு முயற்சியையும் வெளிப்படுத்தி வெற்றி பெற முயற்சிப்போமே தவிர அந்த போட்டியை எளிதாக நினைத்து விளையாட மாட்டோம் என கூறினார். இந்நிலையில், ஸ்காட்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியினர் நேர்மையாக விளையாடி வெற்றி பெற முயற்சிப்பார்கள் என இங்கிலாந்து வீரர் மார்க் வுட் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது,

சமீபத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இங்கிலாந்து சிறப்பாக செயல்பட்டு இருக்கிறது என்றும், நாங்கள் பெரிய மற்றும் அச்சுறுத்தல் என்றும் ஹேசில்வுட் கூறுகிறார். நான் உண்மையில் அதை மிகவும் பெருமையாகவே பார்க்கிறேன். இதில் எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆஸ்திரேலியா ஸ்காட்லாந்து போட்டியில் நாங்கள் ஆஸ்திரேலியாவை ஆதரிப்போம்.

நாங்கள் முதலில் நன்றாக விளையாட வேண்டும். அடுத்து ஆஸ்திரேலியா போட்டியை வெல்ல வேண்டும். ஸ்காட்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் ஆஸ்திரேலியா அணி கடினமாக விளையாடும் என்று நான் நம்புகிறேன். அவர்கள் ஆஸ்திரேலியா வழியில் கடினமாகவும், நேர்மையாகவும் விளையாடி வெற்றி பெற முயற்சிப்பார்கள். இவ்வாறு அவர் கூறினார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.