விழுப்புரம்: சமூக பாதுகாப்பு திட்டத்தில் பல கோடி ரூபாய் ஊழல் நடந்திருப்பதாக புகார் எழுந்த நிலையில், விழுப்புரத்தில் உள்ள வட்டாட்சியர் வீடு உள்ளிட்ட 4 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் இன்று (சனிக்கிழமை) காலை முதல் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் 2017 ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் விழுப்புரம் மாவட்ட சமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியராக பணியாற்றி வந்த சுந்தரராஜன் தமிழக முதல்வரின் உழவர் பாதுகாப்பு திட்டத்தில் உழவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய விபத்து இழப்பீடு, இயற்கை மரணம் உதவித் தொகை, திருமண உதவி தொகை, கல்வி உதவி தொகை போன்ற பல்வேறு திட்டங்களின் கீழ் விவசாயிகளுக்கு பல கோடி ரூபாய் வழங்கப்பட்டதாக பொய் கணக்குகளை காண்பித்து அதன்மூலம் பல கோடி ரூபாய் கையாடல் செய்திருப்பதாக எழுந்த புகாரின் அடிப்படையில் விழுப்புரம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் கடந்த சில ஆண்டுகளாக ரகசியமாக தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த விசாரணையில் கையாடல் செய்திருப்பது உறுதியானதைத் தொடர்ந்து உழவர் பாதுகாப்பு திட்டத்தில் பல கோடி ரூபாய் கையாடல் செய்த அப்போதைய விழுப்புரம் மாவட்ட சமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியராக பணியாற்றி தற்போது செங்கல்பட்டு மாவட்டத்தில் சுரங்கம் மற்றும் கணிமவளத்துறை வட்டாட்சியராக பணியாற்றி வரும் சுந்தரராஜன், அவருக்கு உடந்தையாக இருந்ததாக கணினி ஆப்ரேட்டர் தேவிகா, இடைத்தரகராக இருந்த முருகன் உள்ளிட்ட 3 பேர் மீது விழுப்புரம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து இன்று (சனிக்கிழமை) விழுப்புரம் மந்தக்கரை தெரு மற்றும் அரசு ஊழியர் நகரில் உள்ள தாசில்தார் சுந்தரராஜனுக்கு சொந்தமான 2 வீடுகள், கணினி ஆப்ரேட்டர் தேவிகா வீடு மற்றும் வளவனூர் அருகே தாதாம்பாளையத்தில் உள்ள இடைத்தரகர் முருகனின் வீடு உள்ளிட்ட 4 இடங்களில் தற்போது லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். விழுப்புரம் மண்டல லஞ்ச ஒழிப்புத்துறை கூடுதல் கண்காணிப்பாளர் தேவநாதன் தலைமையிலான 20 பேர் கொண்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் 4 குழுக்களாக பிரிந்து தீவிர சோதனையில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.