பெங்களூரு: கர்நாடகாவில் தனது 17 வயது மகளுக்கு முன்னாள் முதல்வர் எடியூரப்பா பாலியல் வன்கொடுமை செய்ததாக அவரது தாயார் கடந்த பிப்ரவரி 2-ம் தேதி புகார் அளித்தார். இந்த புகாரின்பேரில் சதாசிவ நகர் போலீஸார் எடியூரப்பா மீது போக்சோ சட்டம் மற்றும் இந்திய தண்டனை சட்டம் 354 பிரிவின்கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்நிலையில், புகார்தாரர் கடந்த மே 25-ம் தேதி உயிரிழந்தார். சிறப்பு புலனாய்வு பிரிவு போலீஸார் (சிஐடி) ஜூன் 12-ம் தேதி எடியூரப்பாவை விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பினர். ஆனால், அவர் ஆஜராகவில்லை.
எடியூரப்பா கர்நாடக உயர் நீதி மன்றத்தில் முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார். இந்த மனு நேற்று நீதிபதி கிருஷ்ணா எஸ் தீட்ஷீத் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. பின்னர், நீதிபதி கிருஷ்ணா எஸ் தீட்ஷீத், ‘‘சிஐடி போலீஸார் எடியூரப்பாவை கைது செய்யக்கூடாது. அவர் போலீஸாரின் விசாரணைக்கு முறையாக ஒத்துழைக்க வேண்டும். ஜூன் 17-ல் ஆஜராக வேண்டும்” என உத்தரவிட்டார்.