வதோதரா: குஜராத்தில் முதல்வர் வீட்டு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் வதோதராவின் ஹர்னி பகுதியில் உள்ள மோத்நாத் ரெஸிடென்சி கூட்டுறவு ஹவுசிங் சொசைட்டியில் தொழில்முனைவு மற்றும் திறன் மேம்பாட்டு அமைச்சக பிரிவில் பணியாற்றும் 44 வயது முஸ்லிம் பெண் ஒருவர் வீடு ஒதுக்கீடு பெற்றார்.
அந்த குடியிருப்பில் வசிக்கும் அனைவருமே இந்துக்கள். இவர்கள் அங்கு முஸ்லிம் பெண்ணுக்கு வீடு ஒதுக்கியதை ரத்து செய்ய வேண்டும் எனவும், அவருக்கு மற்றொரு வீட்டு வசதி திட்டத்தின் கீழ் வீடு வழங்க வேண்டும் எனவும் கடந்த 2020-ம் ஆண்டு முதல் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர், வதோதரா மாநகராட்சி ஆணையர், மேயர், காவல் ஆணை யர் ஆகியோருக்கும் குடியிருப்பு வாசிகள் புகார் அளித்துள்ளனர். அதில், ‘‘வதோதரா ஹரினி பகுதி, இந்துக்கள் அதிகம் உள்ள பகுதி. இங்கு 4 கி.மீ சுற்றுவட்டாரத்தில் முஸ்லிம் குடியிருப்புகள் இல்லை.இங்கு முஸ்லிம் ஒருவருக்கு வீடு ஒதுக்குவது 461 குடும்பங்களின் அமைதியான வாழ்வில் தீயை பற்ற வைப்பது போன்றது. இது சட்டம் ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்தும்’’ என தெரிவித்துள்ளனர்.
இது குறித்து புகார்தாரர் ஒருவர் கூறுகையில், ‘‘இந்துக்கள் வசிக்கும் பகுதி என்பதால்தான் நாங்கள் இங்கு வீட்டுக்கு முன்பதிவு செய்தோம்’’ என்றார்.
இதனால் அந்த முஸ்லிம் பெண் தனக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட வீட்டில் வசிக்காமல் வேறு பகுதியில் வசித்து வருகிறார். இதுதொடர்பாக குடியிருப்பு சொசைட்டி நிர்வாகத்தினருடன் பேச முஸ்லிம் பெண் முயன்றும் பயன் இல்லை. கடந்த 10-ம் தேதியும் அந்த குடியிருப்பில் நடைபெற்ற போராட்டத்தின் வீடியோசமூக ஊடகத்தில் வைரலாகி உள்ளது.
இந்த விவகாரம் குறித்து வதோதரா மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், ‘‘அரசு திட்டத்தின்படி வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதில் விண்ணப்பதாரர்களை மத அடிப்படையில் பிரித்து வீடு ஒதுக்கீடு செய்ய இடமில்லை. இந்த விவகாரத்துக்கு தீர்வு காண இருதரப்பினரும் நீதி மன்றத்தைதான் அணுக வேண் டும்’’ என்றனர்.