புதுச்சேரி: “புதுச்சேரியில் உள்ள கோயில் நிலங்களில் ஒரு சதுரஅடியைக் கூட யாராலும் அபகரிக்க முடியாது. அப்படி செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என துணைநிலை ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி கடற்கரை சாலையில் உள்ள மேரி கட்டிடம், மிஷன் வீதியில் உள்ள வ.உ.சி.பள்ளி, கலவைக் கல்லூரி, கருவடிக்குப்பம் இசிஆர் சாலையில் உள்ள காமராஜர் மணிமண்டபம், பழைய துறைமுக வளாகத்தில் உள்ள கலாச்சார மையம் மற்றும் பல்நோக்கு வளாகக் கட்டிடம் ஆகியவற்றை துணைநிலை ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் சனிக்கிழமை நேரில் சென்று பார்வையிட்டார். அப்போது புதுச்சேரி பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன், மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன், பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் தீனதயாளன் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய துணைநிலை ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன், “புதுச்சேரி தன்னுடைய தொன்மையான பாரம்பரியத்தையும், கலாச்சாரத்தையும் இழந்துவிடக்கூடாது என்பதற்காக மத்திய, மாநில அரசுகளின் துணையோடு பழைய கட்டிடங்கள் அதனுடைய பழமை மாறாமல் புதுப்பிக்கப்படுகிறது.கடற்கரை சாலைக்கு வருகின்ற சுற்றுலா பயணிகளுக்கு பயன்படும் விதமாகவும், புதுச்சேரி மக்கள் கடின உழைப்புக்கு பின்பு தங்களுடைய மாலை நேரத்தை இனிமையாக கழிப்பதற்காவும் திட்டமிட்டு பணிகள் நடைபெற்று வருகின்றது. இன்னும் இரண்டு மாதங்களுக்குள் இந்த பணிகள் எல்லாம் முழுமையாக முடிந்துவிடும். பழமை மாறாத புதுப்பொலிவோடு கடற்கரை சாலை விளங்கப்போகிறது.
வடிகால் அமைப்பதில், கழிவுநீரை சுத்திகரிப்பு செய்வதில் சூரத் மிகப்பெரிய வெற்றி பெற்றிருக்கிறது. சூரத்தின் கழிவு நீர் வடிகால் அமைப்புகள் உலக பிரசித்தி பெற்றதாக உள்ளது. அதேபோல் புதுச்சேரியிலும் உலகம் தரம் வாய்ந்த கழிவு நீர் வடிகால் வாய்க்கால்களை அமைப்பதற்காக அவர்களிடம் பேசி, நிபுணர்களை அழைத்துள்ளோம். புதுச்சேரியை விரைவில் மகத்தான எழில் மிக்க நகரமாக மாற்ற வேண்டும்.
இங்கே வாழ்வதற்கு அடிப்படை வசதிகள் அனைத்தும் எல்லோருக்கும் கிடைக்க வேண்டும் என்பது தான் பிரதான நோக்கம். எதிர்கட்சிகள் குற்றச்சாட்டுகள் வைக்காவிட்டால், எப்படி எதிர்கட்சியாக இருக்க முடியும். அது அவர்களுடைய வேலை. கட்டிடங்களை பழமை மாறாமல் புதுப்பிப்பது என்பதில் சற்று காலதாமதமாகும் என்பது எல்லோருக்கும் தெரியும். எதிர்க்கட்சிகளுக்கு கூட தெரியும்.
பாதாள சாக்கடை திட்டத்தில் என்ன ஊழல் நடந்திருக்கிறது? என்பதை எதிர்கட்சியினர் என்னுடைய கவனத்துக்கு கொண்டு வந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இப்போது இருக்கும் ஆளுநர் மாளிகை எந்த நேரத்தில் விழும் என்று தெரியாத நிலையில் உள்ளது. ஆகவே, பழைய சாராய ஆலையில் தற்காலிகமாக ஆளுநர் மாளிகை இயங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. பின்னர் ஆளுநர் மாளிகை பழைமை மாறாமல் புதுபிக்கப்பட்டு ஆளுநர் அங்கே செல்வார்.
புதுச்சேரியில் உள்ள கோயில் நிலங்கள் குறித்த எல்லா விவரங்களையும் எடுக்கச் சொல்லி இருக்கிறோம். கோயில் நிலங்களை ஒரு சதுர அடி கூட யாராலும் அபகரிக்க முடியாது. அப்படி அபரித்திருந்தால் திரும்பப் பெறப்படும். அதை எதிர்ப்பவர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும். முன்னாள் முதல்வர் நாராயணசாமி, ஆளுநருடன் சண்டை போட்டதை தவிர வேறு எதையும் பெரிதாக செய்ததாக எனக்கு தெரியவில்லை.
முதல்வர், அமைச்சர்களை சந்தித்துக் கேளுங்கள் அவர்களுக்கு உரிய மரியாதை தரப்படுகிறதா? இல்லையா? என்று, அவர்கள் ஒரு குறை சொன்னால் அதில் அர்த்தம் உள்ளது. ஆனால் எதிர்கட்சியில் உள்ள நாராயணசாமி நடக்காததை எல்லாம் நடந்ததாக சொல்லி ஆட்சிக்கு வர நினைக்கிறார்” என்று அவர் கூறினார்.