சாதி மறுப்பு திருமணம்: நெல்லை மார்க்சிஸ்ட் அலுவலகம் சூறையாடப்பட்ட வழக்கில் 13 பேர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலியில் சாதி மறுப்பு திருமணம் செய்து வைத்து, காதல் ஜோடிகளுக்கு அடைக்கலம் அளித்ததால், ஆத்திரமடைந்த பெண் வீட்டார் மற்றும் உறவினர்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தை தாக்கி சேதப்படுத்தியது தொடர்பான வழக்கில் 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பாளையங்கோட்டை ஆயுதப்படை சாலை அருகே உள்ள நம்பிக்கை நகரை சேர்ந்த மதன் (28) என்பவரும் பாளையங்கோட்டை பெருமாள்புரத்தை சேர்ந்த முருகவேல் மகள் உதய தாட்சாயினி (23) என்பவரும் காதலித்து வந்தனர். இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்த நிலையில், பெண் வீட்டார் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் காதலர்கள் 2 பேரும் வீட்டை விட்டு வெளியேறி 2 நாட்களுக்குமுன் பாளையங்கோட்டை ரெட்டியார்பட்டி சாலையில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி அலுவலகத்தில் நிர்வாகிகள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டனர். தொடர்ந்து அவர்களுக்கு கட்சி அலுவலகத்திலேயே அடைக்கலம் அளிக்கப்பட்டதாக தெரிகிறது.

இதனிடையே, மகளை காணவில்லை என பெருமாள்புரம் போலீஸில் முருகவேல் புகார் அளித்தார். போலீஸார் நடத்திய விசாரணையில் மார்க்சிஸ்ட் கட்சி நிர்வாகிகள் சாதி மறுப்பு திருமணம் செய்து வைத்தது தெரியவந்தது. இந்த தகவலை அறிந்த பெண் வீட்டாரின் உறவினர்கள் நேற்று முன்தினம் மாலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அலுவலகத்திற்கு சென்றனர்.

அப்போது வெள்ளாளர் முன்னேற்றக் கழக மாநில இளைஞரணி அமைப்பு செயலாளர் பந்தல் ராஜா தலைமையில் சென்ற பெண்ணின் உறவினர்கள் 30-க்கும் மேற்பட்டவர்கள் மார்க்சிஸ்ட் அலுவலகத்தை தாக்கியுள்ளனர். இதில் அங்கிருந்த வழக்கறிஞர் பழனி, கட்சி நிர்வாகி அருள்ராஜ் உட்பட 3 பேர் காயமடைந்தனர். இந்த சம்பவத்தால் கட்சி அலுவலகத்தில் போலீஸார் குவிக்கப்பட்டனர்.

இதுகுறித்து பெருமாள்புரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தில்லை நாகராஜன் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினார். இந்நிலையில், இந்த வழக்கில் பெண்ணின் தந்தை முருகவேல் (55), பெண்ணின் அண்ணன் சரவணக்குமார் (27), தாய் மாமாவான புதுப்பேட்டையை சேர்ந்த சங்கர் (35), உறவினர்கள் குரு கணேஷ் (27), மதுரை யோகீஸ்வரன் (23), பெண்ணின் தாய் சரஸ்வதி (49), மார்த்தாண்டத்தை சேர்ந்த சித்தி சுமதி (44), பாட்டி ராஜிலா (75), பெரியம்மா புதுப்பேட்டையை சேர்ந்த அருணாதேவி (51), மதுரை பெரியம்மா வேணி (52), சகோதரிகள் ஸ்டெல்லா (29), சூர்யா (32) மற்றும் பந்தல்ராஜா ஆகிய 13 பேரை கைது செய்தனர்.

இவர்கள் மீது அத்துமீறி கும்பலாக நுழைவது, மிரட்டல், சூறையாடுவது, பெண்களை தவறான வார்த்தையில் பேசியது உள்ளிட்ட 9 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனிடையே ல் பெண்ணின் பாட்டி ராஜிலா வயது மூப்பின் காரணமாகவும், பெண்ணின் அக்கா சூர்யா கைக்குழந்தையுடன் இருப்பதன் காரணமாகவும் 2 பேருக்கும் ஜாமீன் வழங்கப்பட்டது. மற்ற 11 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.