சென்னை: முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் குறித்து அவதூறாக பேசிய திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது வழக்கு தொடரப்போவதாக நடிகை குஷ்பு தெரிவித்துள்ளார்.
திமுக பேச்சாளரான சிவாஜி கிருஷ்ணமூர்த்தி கடந்த ஆண்டு நடைபெற்ற திமுக பொதுக்கூட்டம் ஒன்றில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி குறித்தும், நடிகையும் பாஜக நிர்வாகியுமான குஷ்பு குறித்தும் தகாத வார்த்தைகளில் பேசி இருந்தார். இவரது பேச்சுக்கு கடுமையான கண்டனங்கள் எழுந்ததைத் தொடர்ந்து, கொடுங்கையூர் போலீஸார் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து சிவாஜி கிருஷ்ணமூர்த்தியை கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர், திமுக அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி நீக்கப்பட்டார். இதையடுத்து ஜாமீனில் வெளியே வந்த அவர் தனது செயலுக்கு மன்னிப்புக் கேட்டதைத் தொடர்ந்து மீண்டும் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி திமுகவில் சேர்க்கப்பட்டார்.
இந்நிலையில், காஞ்சிபுரத்தில் ஏப்ரல் 15-ம் தேதி நடைபெற்ற தெருமுனை பிரச்சார பொதுக்கூட்டத்தில் சரத்குமார் மற்றும் ராதிகா குறித்து சிவாஜி கிருஷ்ணமூர்த்தி அவதூறாக பேசிய காணொலி சமூக வலைதளங்களில் வைரலானது. அவரது பேச்சை கடுமையாக விமர்சித்த நடிகை ராதிகா, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திலும் கிருஷ்ணமூர்த்தி மீது புகார் அளித்திருந்தார்.
இந்நிலையில், தற்போது தமிழிசை சவுந்தரராஜன் குறித்து சிவாஜி கிருஷ்ணமூர்த்தி அவதூறாக பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சிவாஜி கிருஷ்ணமூர்த்தியின் இந்தப் பேச்சுக்கு தேசிய மகளிர் ஆணைய உறுப்பினரும், பாஜக நிர்வாகியுமான நடிகை குஷ்பு மற்றும் நடிகை ராதிகா ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து குஷ்பு தனது எக்ஸ் தளத்தில், “நாய் வாலை நிமிர்த்த முடியாது என்ற ஒரு பழமொழி உண்டு. அதுபோல தான் இந்த மனிதனும். மீண்டும் மீண்டும் பெண்களை மிகவும் புண்படுத்தும் வகையில் துஷ்பிரயோகம் செய்து வருகிறார். முதல்வர் ஸ்டாலின் திரும்பவும் இவரை கட்சியில் இணைப்பதற்காக மட்டுமே சஸ்பெண்ட் செய்துள்ளார். இடைவேளை நேரத்தில் மகிழ்விக்க இந்த வகையான நோய்வாய்ப்பட்ட மனம் கொண்டவர்கள் முதல்வருக்கு தேவையாக இருக்கிறது. தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக இவர் மீது வழக்கு தாக்கல் செய்ய போகிறேன். பெண்களை எப்படி மதிக்க வேண்டும் என்பது குறித்து கடுமையான பாடத்தை அவருக்கு கற்பிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது” எனக் குறிப்பிட்டுள்ளார்.
நடிகை ராதிகா தனது எக்ஸ் தளத்தில், “இவரது பேச்சு குறித்து பல திமுக தலைவர்களிடம் தனிப்பட்ட முறையில் புகார் தெரிவித்தோம். அவர்களும் இவரை கண்டிப்பதாக உறுதியளித்திருந்தனர். திமுகவின் பிரச்சாரத்துக்காக இவரை போன்றவர்களை பேச வைப்பது மிகுந்த அவமரியாதையைக் காட்டுகிறது” எனத் தெரிவித்துள்ளார்.