தினக்கூலி போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம்: ஜூன் 18-ல் சிஐடியு ஆர்ப்பாட்டம்

சென்னை: தினக்கூலி தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூன் 18-ம் தேதி தமிழகம் முழுவதும் சிஐடியு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அரசு விரைவு போக்குவரத்து ஊழியர் சங்க (சிஐடியு) பொதுச்செயலாளர் எம்.கனகராஜ் கூறியதாவது:“விரைவு போக்குவரத்துக் கழகத்தில் பணியாற்றும் தினக்கூலி தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் ரூ.882 வழங்கப்படுவதில்லை. இதில் பாதி அளவிலான தொகையை மட்டுமே அவர்கள் ஊதியமாக பெற்று வருகின்றனர். அவர்களின் சொந்த ஊரில் காலியிடம் இருந்தாலும், அங்கு பணியமர்த்தாமல் வேறு இடத்தில் நியமனம் செய்கின்றனர். இது லஞ்சம் கொடுத்து இடமாற்றம் பெற வழிவகை செய்கிறது.

வசூல் குறைந்தால் இடைநீக்கம், ஊதிய உயர்வு நிறுத்தம் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. தொழில்நுட்பப் பிரிவில் போதிய பணியாளர்கள் இல்லை. உதிரிப் பாகங்கள் இல்லை. ஆனால், இதுபோன்ற காரணங்களை மறைத்து, ஊழியர்கள் மீது குற்றம்சாட்டி இடைநீக்கம் செய்கின்றனர். பயணச்சீட்டு கருவிகளில் பல்வேறு குளறுபடிகள் உள்ளன. அவற்றை சரி செய்யவில்லை. பேட்டா தன்னிச்சையாக குறைக்கப்படுகிறது.

இதுபோன்று விரைவு போக்குவரத்துக் கழகத்தில் உள்ள பிரச்சினைகளை சரி செய்ய வலியுறுத்தி, ஜூன் 18-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளோம். விரைவு போக்குவரத்துக் கழகத்தின் அனைத்து கிளைகள் முன்பும் நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டத்தின் மூலம் கோரிக்கைகளுக்கு தீர்வு கிடைக்கும் என நம்புகிறோம்,” என்று அவர் கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.